Rewind 2023: மல்யுத்த வீரர்கள் போராட்டம் To எம்பிக்கள் சஸ்பெண்ட்.. இந்திய அரசியலில் 15 சர்ச்சைகள்!

இந்த ஆண்டில், இந்தியாவில் அரசியல் சார்பாக நடைபெற்ற 15 முக்கியமான சர்ச்சை சம்பவங்களை இங்கே பார்ப்போம்.
இந்தியா
இந்தியா ட்விட்டர்

புத்தாண்டை வரவேற்க உலகமே தயாராகிவிட்டது. ஆம், இந்த வருடத்தின் கடைசி நாட்கள் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. எனினும், இந்த ஆண்டில் எண்ணற்ற நல்ல விஷயங்களும், துயர சம்பவங்களும் உலகில் அரங்கேறி உள்ளன. அதை இப்போது நாம் நினைத்தாலும் நம் கண்முன்னே நிழலாடுகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டில், இந்தியாவில் அரசியல் சார்பாக நடைபெற்ற 15 முக்கியமான சர்ச்சை சம்பவங்களை இங்கே பார்ப்போம்.

மல்யுத்த வீரர்கள், பிரிஜ் பூஷன் சரண் சிங்
மல்யுத்த வீரர்கள், பிரிஜ் பூஷன் சரண் சிங் twitter page

1. போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீரர்கள்:

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த (தற்போது மாற்றம்) பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புன்யா உள்ளிட்ட இந்திய மல்யுத்த வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இதற்கு காங்கிரஸ் மற்றும் இதர அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

2 .மோசடி வழக்கில் மணீஷ் சிசோடியா கைது

மதுபானக்கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்திani

3. பதவி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி

மோடி குடும்பப் பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இதில் ராகுலுக்கான சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்ததைத் தொடர்ந்து, அவருக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டது.

4. பிபிசி வெளியிட்ட ஆவணப் படத்திற்குத் தடை!

கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அம்மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து நாட்டு ஊடகமான பிபிசி, 'India: The Modi Question' என்ற தலைப்பிலான ஓர் ஆவண படத்தை வெளியிட்டது. இப்படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து இந்தப் படத்திற்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்த சூழலில் பிபிசி வெளியிட்ட ஆவண படத்தை மத்திய அரசு தடை செய்தது.

5. அதிர்வலைகளை ஏற்படுத்திய சனாதன கருத்து!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. உதயநிதிக்கு எதிராக நாடு முழுவதும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வழக்குகளும் பாய்ந்துள்ளன. ஒருகட்டத்தில், அவரது தலைக்குக்கூட விலை வைக்கப்பட்டது. மேலும், I-N-D-I-A கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளும் சனாதனத்தை ஆதரித்து உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தன.

6. பாரத் Vs I-N-D-I-A: மோதிக்கொண்ட அரசியல் கட்சிகள்!

பாஜகவுக்கு எதிரான கூட்டணிக் கட்சிகள், I-N-D-I-A எனப் பெயர் வைத்து, புதிய கூட்டணியைத் தொடங்கியதுடன், மேலும் அக்கட்சியை விமர்சிக்கத் தொடங்கின. அதுமுதல் ’I-N-D-I-A’ மற்றும் ’பாரத்’ பற்றிய பெயர்கள் பெரிய அளவில் மோதிக்கொள்ள ஆரம்பித்தன. ’இந்தியா’வைப் (நாடு) பற்றி எதிர்க்கட்சிகளும், ‘பாரத்’ பற்றி பாஜகவினரும் இதில் நேரடியாக மோதிக்கொண்டனர். ‘பாரத்’ குறித்த பெயர் சர்ச்சையால், சில அழைப்பிதழ்களில்கூட அப்பெயரே அதிகாரப்பூர்வமாக இடம்பிடிக்கத் தொடங்கின.

7. புயலைக் கிளப்பிய சிஏஜி அறிக்கை!

9 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை வெளியானதில், நாடு முழுவதும் மீண்டும் சர்ச்சைப் புயல் உருவானது. 7 திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவே சுட்டிக்காட்டியிருந்ததுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

8. பாடப்புத்தகங்களில் தலைவர்கள் பகுதிகள் நீக்கம்

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பணியாற்றிய அபுல் கலாம் ஆசாத்தின் பாடப் பகுதியை மத்திய அரசு நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கெனவே மகாத்மா காந்தி, முகலாயப் பேரரசு உள்ளிட்ட பாடப் பகுதிகளை NCERT நீக்கியிருந்ததும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.

9. டெல்லி நூலகம் பெயர் நீக்கம்

டெல்லியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவாக இருந்த, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரானது, 'பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம்' என அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்யப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது.  இதுகுறித்து ராகுல் காந்தி, "நேரு, அவர் செய்த செயல்களால் அறியப்படுவார்; வெறும் பெயருக்கு அல்ல" என்று தெரிவித்திருந்தார்.

10. மன்னிப்பு கேட்ட திமுக எம்பி

எம்.பி செந்தில்குமார்
எம்.பி செந்தில்குமார்ani

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்களில் 3இல் பாஜக வெற்றிபெற்றிருந்தது. இந்த வெற்றி குறித்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி. செந்தில்குமார், பாஜகவை சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவிக்க, உடனே செந்தில்குமார் மன்னிப்பு கேட்டார்.

11. பதவி பறிப்புக்கு ஆளான மஹுவா மொய்த்ரா!

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ராபுதிய தலைமுறை

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா விசாரணையை எதிர்கொண்டார். இதுதொடர்பாக, மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, நாடாளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்படி, குரல் வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அவருடைய பதவி பறிக்கப்பட்டது.

12. சந்திரயான் வெற்றி: எம்பி ஒருவரை தாக்கிப் பேசிய பாஜக எம்பி

புதிய நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நடைபெற்ற சந்திரயான் 3 வெற்றி குறித்த விவாதத்தின்போது, பா.ஜ.கவின் தெற்கு டெல்லி எம்.பி. ரமேஷ் பிதூரி, மோடியைப் புகழ்ந்து பேசினார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. குன்வர் டேனிஷ் அலி குறுக்கிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் பிதூரி, குன்வர் டேனிஷ் அலியைப் பார்த்து, அவருடைய மதத்தைக் குறிப்பிட்டும், கேட்கவே முடியாத அளவிற்கு மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் ஆவேசமாக பேசினார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் அந்த சம்பவத்திற்கு ரமேஷ் பிதூரி வருத்தம் தெரிவித்து இருந்தார்.

13. சர்ச்சையை ஏற்படுத்திய அமைச்சர் பெயரில் வெளியான கையெழுத்து!

இந்தியாவில் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக அமைச்சர் பெயரில் வெளியான போலி பதிலால் சர்ச்சை வெடித்தது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தது போன்று ஆவணம் ஒன்று, சமூக வலைதளத்தில் வைரலானது. ஆனால் இதுதொடர்பாக விளக்கம் அளித்த அவர், “தான் அப்படி ஒரு ஆவணத்தில் கையெழுத்திடவில்லை” என தெளிவுப்படுத்தி இருந்தார்.

14. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 143 எம்பிக்கள்!

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி, பிற்பகலின்போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் குதித்த இருவர், வண்ணப் புகைக் குப்பிகளை வீசினர். எம்பிக்கள் சிலர், அவர்கள் இருவரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அதற்குள் அவை காவலர்கள் விரைந்து வந்து அவர்களைப் பிடித்துச் சென்றனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இச்சம்பவம், நாடு முழுவதும் விமர்சனத்துக்குள்ளாகியது. மேலும், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் 143 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

எம்.பிக்கள் சஸ்பெண்ட்
எம்.பிக்கள் சஸ்பெண்ட்புதியதலைமுறை

15. அமளியால் முடக்கப்பட்ட நாடாளுமன்றம்

அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாகச் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அதானியின் பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்தன. அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. அதுபோல், மணிப்பூர் வன்முறை, மல்யுத்தம் வீரர்களின் போராட்டம் தொடர்பாகவும் நாடாளுமன்ற அவைகளில் அமளி ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com