நேட்டோவுக்குள் இழுக்க இந்தியாவுக்கு வலைவிரிக்கும் அமெரிக்கா?.. மாறும் சர்வதேச சூழலின் பின்னணி என்ன?

"நேட்டோவின் கதவுகள் இந்தியாவுக்காக திறந்து இருக்கும்; இந்தியா விரும்பினால் இணைந்து செயல்பட தயார்" என நேட்டோ கூட்டமைப்புக்கான அமெரிக்க தூதர் ஜூலியான் ஸ்மித், கூறியிருப்பது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
நேட்டோ
நேட்டோnato file image

நேட்டோ அமைப்பு இன்றுடன் தோற்றுவிக்கப்பட்டு 74 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, பெல்ஜியத்தில் இரண்டு நாட்கள் (ஏப்ரல் 4 - 5) நேட்டோ உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்கு ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்தியாவுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை.

என்றாலும் நேட்டோ கூட்டமைப்புக்கான அமெரிக்க தூதர் ஜூலியான் ஸ்மித் பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், ”நேட்டோ உலகம் முழுவதும் 40 நாடுகளுடன் இணைந்து புவிசார் அரசியல், பாதுகாப்பு, நவீனமயமாக்கல் ஆகிய பகுதிகளில் செயலாற்றி வருகிறது. இந்தியா விரும்பினால் இதைவிட மிகப்பெரிய அளவில் நேட்டோ ஒத்துழைப்பு தரும். நேட்டோ அமைப்பை உலகளாவிய ராணுவ கூட்டமைப்பாக மாற்றுவது பற்றியோ வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை தவிரத்து வேறு நாடுகளை உறுப்பினர்களாக்கும் திட்டம் நேட்டோவுக்கு இல்லை.

நேட்டோ
நேட்டோnato file image

அதேநேரத்தில் இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயலாற்ற தயாராக உள்ளோம். ஏற்கெனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் எங்களுடன் இணைந்து செயலாற்றி வருகின்றன. அந்த வகையில் அதே பிராந்தியத்தை சேர்ந்த இந்தியாவுடனும் இணைந்து செயலாற்ற தயாராக உள்ளோம். 7 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நோக்கம் எங்களுக்கு இல்லை. ஆனால் இப்போது சீன அச்சுறுத்தலை சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஜூலியான் ஸ்மித் இப்படிப் பேசியிருப்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளிடையேயும் ஓர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போரே, இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, ரஷ்யா அந்நாட்டு மீது போர் தொடுத்து வருகிறது. ஓர் ஆண்டைக் கடந்தும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இதற்கு மற்றொரு காரணம், அமெரிக்கா நிதியுதவியும், ராணுவ உதவியும் அளித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் 30 உறுப்பு நாடுகளுடன் இருந்த நேட்டோ அமைப்பு, இன்றுமுதல் பின்லாந்தை இணைத்துக்கொண்டதன் மூலம் 31 நாடுகளாய் உள்ளது.

நேட்டோவின் பலம் அதிகரிப்பதாலேயே ரஷ்யாவுக்கு பயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவற்றை எதிர்க்க வேண்டுமானால் அதைவிட ஒரு பலமிக்க கூட்டமைப்பு உருவாக்க ரஷ்யா நினைப்பதாகவும் உலக நாடுகளால் கூறப்படுகிறது. அந்த வகையில்தான், படைபலத்தில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து இருக்கும் சீனாவை தன் வலைக்குள் இழுக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆணு ஆயுதத்தில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் அமெரிக்கா உள்ளது. அதேநேரத்தில், சீனாவிடம் உள்ள படை பற்றிய முழு விவரங்கள் முழுமையாய் தெரியவில்லை.

நேட்டோ
நேட்டோnato file image

என்றாலும், தனக்கோ அல்லது தன் எல்லைக்கோ எந்தப் பாதிப்பு வந்தாலும் சீனா விடாது. இதனாலேயே அமெரிக்கா அச்சம் கொள்கிறது. ஏற்கெனவே தன் நாட்டில் பறந்த பலூன்களையே சீனா உளவு பார்ப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தது அமெரிக்கா. என்றபோதிலும் உக்ரைன் - ரஷ்யா போரில் சீனாவும், இந்தியாவும் யாருக்கு ஆதரவின்றி சமநிலையே வகித்து வருகின்றன. சீனாவும், இந்தியாவும் இந்தப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. தவிர, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா நல்ல நட்புடனேயே இருந்து வருகிறது. இதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில்தான் தற்போது நேட்டோ, இதுபோன்ற கருத்தைத் தெரிவித்துள்ளது எனக் கூறப்படுகிறது.

அனைத்து விஷயங்களிலும் உக்ரைன், ரஷ்ய நாட்டோடு இணைந்தே போகிறது. மேலும் சோவியத் யூனியன் உடைபடுவதற்கு முன்புவரை உக்ரைன், ரஷ்யாவுடனேயே இணைந்திருந்தது. இதனால்தான் ரஷ்யா, உக்ரைனை விட்டுக் கொடுக்க முன்வரவில்லை. ஆனால், இந்தப் போரைப் பயன்படுத்தி அமெரிக்கா, உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிகளை வாரியிறைத்து வருகின்றன. மொத்தத்தில், இந்தப் போர், ஆளும் தலைவர்களுக்கும் மத்தியில்தான் தொடர்ந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் - ரஷ்யா போர்russia war file image

அதாவது நீயா, நானா என்கிற (அமெரிக்காவா, ரஷ்யாவா) நோக்கில்தான் இந்த யுத்தம் தொடருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் போரில் ரஷ்யாவை அடிபணியச் செய்ய வேண்டும் என்பதே அமெரிக்காவின் முடிவாக இருக்கிறது. அதற்கு இடம்கொடுக்கக் கூடாது என்பது ரஷ்யாவின் தீர்மானமாக இருக்கிறது. இதன் ஒருபகுதியாக நேட்டோ நாடுகளை எல்லாம் தன் வட்டத்துக்குள் வளைக்க நினைக்கிறது, அமெரிக்கா. அதற்கு எதிராக ரஷ்யாவும் காய் நகர்த்துகிறது. இதற்காக சீனாவுடன் கை குலுக்க இருக்கிறது, ரஷ்யா. காரணம், ரஷ்யாவும், சீனாவும் அமெரிக்காவுக்கு எதிரிகளாக இருக்கின்றன.

ஜின்பிங், புடின்
ஜின்பிங், புடின்china, russia file image

ஆனால், பழைய பிரச்சினைகளில் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும், தற்போது அமெரிக்காவுக்கு எதிராக அவைகள் இணைந்திருப்பதுதான் நேட்டோவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சீனா - தைவான் பிரச்சினையும் இதன் தொடர் சங்கிலியாக உள்ளது. இந்த விஷயத்திலும் அமெரிக்காவே தூண்டிவிடுவதாகவே சொல்லப்படுகிறது. ஆக, ரஷ்யாவும் சீனாவும் இணைந்துவிட்டால் அது தமக்கு பெரும் ஆபத்தாக இருக்கும் என்று அமெரிக்கா கருதுவதாலேயே, இந்தியாவை நேட்டாவுக்குள் இழுக்க நினைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான மறைமுக தூண்டிலே ஜூலியான் ஸ்மித்தின் கருத்தாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

மேற்கத்திய நாட்டு எல்லைகளுக்கு வெளியே அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட முதல் அமைதிப்படையான நேட்டோ அமைப்பு, மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தலையிட்டு வருகின்றன என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

சீனாவுடனான அதன் உறவுகளில் கூடுதல் சிக்கல்களை உருவாக்குவதற்காக, அவர்கள் இந்தியாவை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
செர்ஜி லாவ்ரோவ், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்

இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ‘‘அமெரிக்கா தலைமையிலான ராணுவக் குழுவான நேட்டோ, சீனாவுடனான இந்தியாவின் ஏற்கனவே விரிசல் அடைந்துள்ள உறவுகளில் கூடுதல் பிரச்சனைகளை உருவாக்குவதற்காக, இந்தியாவிற்கு அதிகாரம் செய்ய முயற்சி செய்கிறது. குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியம் தொடர்பாக, அவர்கள் இந்தோ-பசிபிக் பிராந்தியம் என்று அழைக்கிறார்கள். சீனாவுடனான அதன் உறவுகளில் கூடுதல் சிக்கல்களை உருவாக்குவதற்காக, அவர்கள் இந்தியாவை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்த பிரச்சனைகளில் இந்தியாவை நேட்டோ படைகள் தூண்டிவிடுகின்றன” என அவர் குற்றஞ்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில், நேட்டோ அமைப்பில் இந்தியா சேர்ந்தால், இந்தியா - அமெரிக்கா ராணுவ உறவு மேம்படும் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் இந்தியா அமைதியே காத்து வருகிறது. வெளிப்படையாக எந்த கருத்துக்களையும் கூறுவதில்லை. ஆனால், சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா தனக்கென உருவாக்கிக் கொண்ட வலுவான வெளியுறவுக் கொள்கையில் அடிப்படையிலேயே இன்று வரை செயல்பட்டு வருகிறது. அதனால்தான், அந்த காலத்தில் இருந்தே ரஷ்யா உடனான உறவை இந்தியா பெரிய முரண்படு இல்லாமல் தக்க வைத்து வருகிறது. இந்தியா வெளியுறவுக் கொள்கை மிகவும் தனித்துவமானது. பாஜகவே ஆட்சி செய்தாலும் இன்றளவும் நேரு காலத்தில் உருவாக்கி வைக்கப்பட்ட கொள்கையில் அடிப்படையில் தான் இந்திய அரசாங்கம் செயல்படுகிறது. கிட்டதட்ட அணி சேரா நாடுகளின் கொள்கையை பின்பற்றுவது இந்தியாவின் பெரிய பலம். அமெரிக்காவையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ரஷ்யா உடனான உறவையும் முறித்துக் கொள்ள விரும்பவில்லை என்ற ஒரு விதமான நடுநிலை போக்கிலே இந்தியா இதுவரை செயல்பட்டு வருகிறது. அதனால், நேட்டோ விரிக்கும் வலைக்குள் நிச்சயம் இந்தியா சிக்காது என்றே தோன்றுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com