காங்கிரஸ் கட்சிக்கு மம்தா திடீர் ஆதரவு: மாறுகிறதா கூட்டணி கணக்குகள்..?

காங்கிரஸ் கட்சிக்கு மம்தா திடீர் ஆதரவு: மாறுகிறதா கூட்டணி கணக்குகள்..?

காங்கிரஸ் கட்சிக்கு மம்தா திடீர் ஆதரவு: மாறுகிறதா கூட்டணி கணக்குகள்..?
Published on

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணிக்கு மம்தா பானர்ஜி சிக்னல் விடுத்துள்ளார். 

தேசிய அரசியலில் மூன்றாவது அணி குறித்த விவாதம் தற்போது தொடங்கியிருக்கிறது. தெலுங்கானா முதலமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திர சேகர் ராவ் இந்த அழைப்பை விடுத்துள்ளார். சந்திர சேகர் ராவின் அழைப்பு முதலில் வாழ்த்து தெரிவித்தவர் மம்தா பானர்ஜிதான். அவர் அழைப்பு தெரிவித்ததோடு திமுக செயல் தலைவர் ஸ்டாலினையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மூன்றாவது அணி குறித்து பேசியுள்ளார். இதனால், சந்திர சேகர் ராவ், மம்தா உள்ளிட்டோர் அடங்கிய மூன்றாவது அணி அமைவது குறித்த பேச்சுகள் இனி வரும் காலங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், மம்தா பானர்ஜி யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்விக்கு ஆதரவு அளிப்பதாக மம்தா அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது அணி குறித்த பேச்சு தொடங்கிய சில நாட்களிலேயே மம்தா காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி பேசுகையில், “திரிபுராவில் எங்களுடன் இணைந்து போட்டியிடுமாறு காங்கிரஸ் கட்சியிடம் கூறினேன். அவர்கள் அதனை ஏற்கவில்லை. ஆனால், நாம் இன்னும் போராட வேண்டியுள்ளது. நல்லது நடக்கவேண்டும் என்ற யோசனையில் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்விக்கு ஆதரவு தெரிவிப்பது என்று முடிவு செய்துள்ளோம். அவர் எங்களது அரசுக்காக பல வழக்குகளில் வாதாடியுள்ளார். அதனால் அவரை 5வது இடத்திற்கு போட்டியிட நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்” என்றார்.

மேற்குவங்க மாநிலத்தில் 4 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைகிறது. அதேபோல், திரிணாமூல் கட்சியில் இருந்த முகுல் ராய் பாஜகவிற்கு மாறிவிட்டால் அந்த இடமும் காலியானது. இதனால், மொத்தம் 5 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.  295 உறுப்பினர்களை கொண்ட மேற்குவங்க சட்டசபையில் திரிணாமூல் காங்கிரஸுக்கு 211 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 44, இடது சாரிகளுக்கு 28 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். தன்னுடைய சட்டமன்ற பலத்துடன் திரிணாமூல் காங்கிரஸ் 4 இடங்களை வென்றுவிடும். மார்க்சிஸ்ட் கட்சியின் வசம் உள்ள 5வது இடம், தற்போதைய நிலவரப்படி ஏதாவது ஒரு எதிர்க்கட்சிக்கு செல்லும் வாய்ப்புள்ளது. 

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சுயேட்சையாக வேட்பாளரை நிறுத்துவது என்றும் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது என்ற பேச்சும் அடிப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ராபி தேப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான், மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது மேற்குவங்க அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இடதுசாரி கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. தற்போது, காங்கிரஸ், இடதுசாரிகள் இடையிலான கூட்டணி விவகாரத்தில் சிக்கல் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு தயாராக இருக்கிறது. ஆனால், மார்க்சிஸ்ட் கட்சிக்குள் கூட்டணி குறித்து மாபெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. அவர்கள் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர். இந்தக் குழப்பத்திற்கு ஏப்ரல் மாதம் நடைபெறும் மாநாடு தான் முடிவு சொல்லும். 

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அதிர் சவுதிரி கூறுகையில், “மேற்குவங்கத்தில் பாஜக வேரூன்றுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும். வருகின்ற மாநிலங்களவை தேர்தலிலும் சுயேட்சையாக ஒரு வேட்பாளரை நிறுத்தி இடது முன்னணி, காங்கிரஸ் இருதரப்பினரும் ஆதரிக்க வேண்டும்” என்றார். 

சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் சூர்ய காந்த் மிஸ்ரா கூறுகையில், “பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட விரும்புவர்கள் எங்களுடன் கைகோருங்கள்” என்று அழைப்பு விடுத்தார். பாஜக-திரிணாமூல் எதிர்ப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளதா என்ற கேள்விக்கு, நேரடியாக பதில் சொல்லாமல் ‘யாராக இருந்தாலும் இடம்பெறலாம்’ என்று பொதுவாக பதில் அளித்தார் மிஸ்ரா.

திரிபுரா வெற்றிக்கு பிறகு பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, “கட்சியின் அடுத்த குறி மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் கேரளா” என்று கூறியிருந்தார். மேற்குவங்கத்தில் சமீபத்தில் நடந்த மக்களவை இடைத்தேர்தலிலும் பாஜக இரண்டாவது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ், இடதுசாரிகளிடையேயான கூட்டணி குழப்பதை பயன்படுத்தி மம்தா புதிய முயற்சி மேற்கிறார் என்றே பார்க்கப்படுகிறது. மேலும், மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்வதை தடுக்கவே இந்த அழைப்பு என்றும் கூறப்படுகிறது.

மற்றொரு வகையில், தேசிய அளவிலும், மாநில அளவிலும் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அமைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அபிஷேக் சிங்வியை காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளராக அறிவிக்கவேயில்லை. ஆனால், அவருக்கு மம்தா ஆதரவு தெரிவித்துவிட்டார். அதனால், மம்தா அழைப்பு விடுத்துவிட்ட நிலையில், மம்தாவுக்கு ‘ஓ கே’ சொல்வார்களா? இல்லை இடதுசாரிகளின் பதிலுக்காக காத்திருப்பார்களாக என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.  மார்ச் 23-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com