அது என்ன எஸ்கேப் ரோடு? இது நடந்தா கேரளாவிற்கு 3 கி.மீதானா?! ஆங்கிலேயர் காலத்தில் நடந்தது என்ன?

எஸ்கேப் பாதையை தவிர்த்து மாற்று பாதையாக கொடைக்கானல் - மூணாறு இணைப்பு சாலையை துரிதப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
மூணாறு சாலை
மூணாறு சாலைPT

கோடை காலம் தொடங்கி விட்டால், நம் மலைப்பிரதேசங்கள் சுற்றுலாத்தலங்களாக மாறிவிடும். அதிலும் மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் அதிகப்படியான மக்களை ஈர்க்கக்கூடிய சுற்றுலாதலங்களில் ஒன்று. இயற்கை எழில் கொஞ்சும் பேரழகை அதிகம் கொண்டது, சில்சில் கூல்கூல் கொடைக்கானல்.

கடவரி கிராமம்
கடவரி கிராமம்PT

தமிழர்களுக்கு அடுத்தப்படியாக கேரள மக்கள் அதிகமாக வரக்கூடிய ஒரு சுற்றுலாதலம் இது. இப்படிப்பட்ட கொடைகானலில் ‘எஸ்கேப் ரூட்’ என்ற ஒரு பாதையானது பயன்பாட்டிற்கு இல்லாமல் மூடப்பட்டுள்ளது. பராமரிக்காமல் விட்ட இச்சாலையை சரி செய்தால், 160 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய கேரளாவின் மூணாறுக்கு, வெறும் 11 கிலோ மீட்டர் அதாவது 15 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்கின்றனர். தமிழ்நாட்டையும் கேரளாவையும் இணைக்கும் இப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கேரள அரசானது மூடிவைத்துள்ளது. அதனால் இப்பாதையானது தற்பொழுது அடர்ந்த காடாக மாறியுள்ளது. எஸ்கேப் ரூட் எப்படி உருவானது என்பதை பார்க்கலாம்.

அதென்ன எஸ்கேப் ? எஸ்கேப் என்றால் தப்பித்தல் என்று அர்த்தமாகிறது.. அப்படியென்றால் இப்பாதையை உபயோகப்படுத்தி தப்பித்தார்களா? என்றால்.. ஆம், தப்பிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு சாலைதான் எஸ்கேப் ரூட். ஆங்கிலேயர்கள் விரைவாக அண்டை மாநிலமான கேரளாவை கடந்து தங்கள் நாட்டிற்கு தப்பித்து போக உருவாக்கப்பட்டது தான் எஸ்கேப் சாலை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?..

PT

கொடைக்கானல் நகரில் ஏராளமான ஆங்கிலேயர்கள் சுதந்திரத்திற்கு முன்பு வசித்து வந்தார்கள். இரண்டாம் உலகப் போ​ர் காலகட்டத்தில் சென்னை மீது ஜப்பான் அணுகுண்டு வீசப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து, இங்கு வசித்த ஆங்கிலேய அதிகாரிகள், உடனடியாகத் தங்கள் நாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு ஒரு பாதையை தேடிக்கொண்டிருந்தனர்.

அச்சமயம் கேரளாவின் மலைப்பிரதேசங்களில் வாழ்ந்த மழைவாழ் மக்கள் தங்களின் விவசாயப்பொருட்களை குண்டலா, வட்டவடா, பூண்டி, பூம்பாறை வழியாக கொடைக்கானலுக்கு கொண்டு வருவதை அறிந்த ஆங்கிலேயர்கள் இவ்வழித்தடங்களை பயன்படுத்தி தாங்கள் தப்பி செல்ல நினைத்து ஒரு பாதையை உருவாக்கினர்.

அதுதான் எஸ்கேப் ரூட்!

இதன்படி கொடைக்கானல் வழியாக பூம்பாறை, மன்னவனூர், பூண்டி வழியாக கிளாவரை சென்று, அங்கிருந்து 11 கிலோமீட்டர் குதிரையில் பயணித்து, டாப் ஸ்டேஷன் சென்று, அங்கிருந்து எல்லப்பட்டி, மாட்டுப்பட்டி, குண்டல, கிராம்ஸ்லேண்ட் வழியாக மூணாறை அடைந்து, அங்கிருந்து அடிமாலி, கோதமங்கலம் வழியாக கொச்சிக்கு சென்று, கப்பல் மார்க்கமாக இங்கிலாந்துக்கு​ச் செல்வது அவர்களின் திட்டம். இதன்படி தப்பித்தும் சென்றிருக்கிறார்கள்.

இப்பாதையானது 1956 வரை பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அதன்பிறகு வட்டவடா, கோவிலூர் பகுதிகள் கேரளாவுடன் இணைந்தபின் கேரள அரசானது இப்பாதையை பல்வேறு காரணங்களால் 1970ல் மூடிவிட்டது.

கொடை-கொச்சின் பழைய பாதை
கொடை-கொச்சின் பழைய பாதைPT

தற்பொழுது கேரள சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வரவேண்டும் என்றால் குமுளி, தேனி வழியாகவும்; சிலர், கன்னியாகுமரி வழியாகவும், சிலர் பாலக்காட்டை கடந்து கோவை வழியாகவும் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்கள். இதனால் நேரம், பணம் விரயமாகிறது. அதனால் எஸ்கேப் பாதையை தவிர்த்து மாற்று பாதையாக கொடைக்கானல் - மூணாறு இணைப்பு சாலையை துரிதப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

மாற்றுப்பாதை:

கொடைக்கானலில் இருந்து மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை வழியாக மூணாறுக்கு சென்றால் வெறும் 90 கிலோ மீட்டர் தான். தற்போது தமிழ்நாட்டின் கொடைக்கானல் மாவட்டத்தின் கடைகோடி கிராமமாக இருக்கக்கூடிய கிளா என்ற ஊரிலிருந்து 3 கிலோ மீட்டர் சாலைப் போடப்பட்டால், அச்சாலை கேரளா எல்லையுடன் இணைக்கப்படும். இந்த மூன்று கிலோமீட்டர் சாலைக்காக பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

கொடைக்கானலில் இருந்து கிளாவரை வழியாக மூணாறு இணைப்பு சாலை தொடங்கப்பட்டால்...

* கொடைக்கானல் கிராம பகுதிகளில் விளையக்கூடிய மலை காய்கறிகளை எளிமையாக கேரளா மாநிலத்தில் சந்தைப்படுத்த முடியும்.

* சுற்றுலா பயணிகளும் மூணாறு சுற்றுலா தளத்தை முடித்துவிட்டு, அதேநேரம் கொடைக்கானல் சுற்றுலா தளத்தையும் கண்டு களிக்க இப்பாதை உதவும்.

இப்படியாக கொடைக்கானலில் சுற்றுலாவும் விவசாயமும் மேம்படும் என்பதால் பல ஆண்டுகளாகவே கோரிக்கை இருந்து வருகிறது. கொடைக்கானல் மக்களின் இத்தகைய கனவு திட்டத்தை அரசு விரைவில் தொடங்கவேண்டும் என்பதே இம்மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் தற்பொழுது தமிழக அரசாங்கமானது கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘கொடைக்கானல் - மூணாறு இரண்டு மிக முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்க உதவும் இந்த சாலை’யை திறக்க உதவுமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

மேலும் ‘ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட இந்த எஸ்கேப் ரோடை திறப்பதற்கு மாற்றாக கொடைக்கானல் தாலுகாவின் கடைக்கோடி கிராமமான கிளாவரை கிராமத்தில் இருந்து கடவரி - கொட்டா கொம்பூர் - வட்டவாடா வழியாக மாட்டுப்பட்டி அணை, ஈகோ பாயிண்ட், மூணாறு கிராமத்தை இணைத்தால் கேரளா மற்றும் தமிழகத்தின் சுற்றுலா இரண்டு மடங்காக மேம்படும்’ என்பது சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தமிழக அரசும் கேரளா அரசும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டால் இருமாநிலங்களிலும் உள்ள மூணாறு, கொடைக்கானல் பெரிய வளர்ச்சி பெறும். அத்துடன் கொடைக்கானல் - மூணாறு இடையில் உள்ள 28 கிராமங்களும் பயன்பெறும். விவசாயிகள், பொதுமக்கள் பல வருடங்களாக போராடியும் கடவேரி வட்டவடை பாதையை திறக்க கேரள வனத்துறை இதுவரை ஏனோ முன்வரவில்லை என்று அந்த பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

- செ.மகேஷ் ராஜா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com