மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஆக்கிரமித்திருக்கும் ஆபத்தான அந்நிய மரங்கள்! தீர்வுதான் என்ன? - ஓர் அலசல்

சென்னா மர இலைகளிலிருந்து வரும் மோசமான வாடையால் விலங்குகள் எதுவும் இதை சாப்பிடாது. இம்மரங்கள் அதிகளவில் இருக்கும் பகுதிகளுக்கு யானைகள் மற்றும் பிற விலங்குகள் செல்வதில்லை.
அந்நிய மரங்களின் பிடியில் மேற்குத்தொடர்ச்சி மலை
அந்நிய மரங்களின் பிடியில் மேற்குத்தொடர்ச்சி மலை கோப்பு படம்

அமெரிக்காவின் வெப்ப மண்டல தாவரமான லண்டானா உண்ணிச்செடி (Lantana camara) இந்தியப் புலிகளின் வாழ்விடத்தில் 40 சதவிகிதத்தை ஆக்ரமித்துள்ளதாக 2020-ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. மேலும் புலிகளின் இரை தேடும் பகுதியை இத்தாவரம் பெருமளவு குறைத்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்தது. மத்திய இந்தியா, ஷிவாலிக் மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதிகளில் இத்தாவரம் அதிகளவில் உள்ளது. உலகின் 10 மோசமான ஆக்ரமிப்பு தாவரங்களில் ஒன்றாகவும் இந்தியாவின் பிரச்சனைக்குரிய மரங்களில் ஒன்றாகவும் இருக்கும் உண்ணிச்செடியின் பூக்கள் அழகாக இருப்பதால், இதை தோட்டத்தில் வளர்த்து வருகிறார்கள்.

விலங்குகள், மரங்கள் அல்லது பிற உயிரினங்கள் போன்றவற்றை இயற்கையிலேயே வாழ்ந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி, வேறு இடங்களில் அறிமுகப்படுத்தும் போது அவை அந்நிய ஆக்ரமிப்பு இனங்களாக மாறி அங்குள்ள இயற்கை வாழ்விடங்களை அழித்து பல்லுயிரை பாதிக்கிறது. இதுபோன்ற ஆக்கிரமிப்பு தாவரங்களுக்கு சில பொதுவான அம்சங்கள் உள்ளது. விரைவாக மறு உற்பத்தி ஆகும் திறன், வேட்டையாடிகள் இல்லாதது, உணவு, தண்ணீர் மற்றும் வாழ்விடத்திற்காக உள்ளூர் தாவரங்களை பின்னுக்குத் தள்ளும் காரணங்களால் எங்கு போனாலும் இவை செழிப்பாக வளர்கின்றன.

Lantana camara
Lantana camara

ஆக்கிரமிப்புத் தாவரங்களின் தாக்கம் குறித்து உலகம் முழுதும் நன்றாக அறிந்திருந்தாலும், வளர்ந்து வரும் மற்றும் ஏழ்மையான நாடுகளில் இவற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகள் குறைவாகவே உள்ளன. இந்தியாவில் இதுவரை 1,600-க்கும் மேற்பட்ட ஆக்ரமிப்பு தாவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இனியும் இந்த எண்ணிக்கை கூடுமே தவிர குறையாது. இவற்றை கட்டுப்படுத்த வனத்துறையும் லாப நோக்கமற்ற நிறுவனங்களும் எடுத்துள்ள முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. ஏனென்றால் இவற்றின் பரவலைத் தடுக்க இந்தியாவில் போதுமான சட்ட கட்டமைப்புகளோ அல்லது தேசிய திட்டங்களோ இல்லை என்பதுதான் உண்மை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதுவாகக் காணப்படும் ஆபத்தான ஆக்ரமிப்பு மரங்களில் ஒன்று சென்னா. இதனை உள்ளூர் மொழியில் மஞ்ச கொன்னா என அழைக்கிறார்கள்.

பெரிய மரமாக வளரக்கூடிய சென்னா, அமெரிக்க வெப்பமண்டல பகுதியைச் சேர்ந்ததாகும். நிழலுக்காகவும் எல்லை வேலிகளுக்காகவும், தோட்டத்தை அழகுப்படுத்தவும் என பல காரணங்களுக்காக இந்த மரங்கள் வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியா உள்பட 20 நாடுகளில் இந்த மரங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். நமது நாட்டில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இம்மரம் அதிகமாகக் காணப்படுகிறது.

Senna i
Senna i

சுதந்திரத்திற்கு பின்பு வனத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு மரங்கள், விரைவாக உள்ளூர் தாவரங்களை அழித்து வேகமாக பரவத் தொடங்கின. இது எந்தளவிற்கு பரவியுள்ளன என்பது குறித்து நம்மிடம் போதிய தரவுகள் இல்லையென்றாலும், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் மிகவும் மோசமான ஆக்ரமிப்பு மரங்களில் ஒன்றாக சென்னா இருப்பதை எந்த சந்தேகமுமின்றி கூறலாம்.

வடக்கில் பிரம்மஹிரி மலைகளுக்கு நடுவே உள்ள பகுதிகளிலும், தெற்கில் பாலக்காடு இடையேயுள்ள பகுதிகளிலும் இவை காணப்படுகிறது. மேலும் வயநாடு சரணாலயம் மற்றும் அதன் அருகேயுள்ள கேரளாவின் பெகூர் வனப்பகுதி; நாகர்கோல் மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம், அருகிலுள்ள தித்திமதி காடுகள் மற்றும் குஷால்நகர், பில்கிரிரங்கா மலைகள், எம்எம் மலைகள், காவேரி வனவிலங்கு சரணாலயம்; முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்; தமிழ்நாட்டில் உள்ள வடக்கு நீலகிரி பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

இந்தப் பகுதிகள் அனைத்தும் சேர்ந்து பிரம்மஹிரி – நீலகிரி கிழகுத்தொடர்ச்சி மலைப்பகுதியை யானைகளின் வாழ்விடமாக மாற்றியுள்ளது. பல்லுயிர் பெருக்கத்தில் இந்தியாவிலேயே மிக வளமான காடுகளை கொண்ட இம்மலைத்தொடர், ஆசிய யானைகள், காட்டெருமை, புலி மற்றும் காட்டு நாய்கள் போன்ற விலங்குகளுக்கு சிறந்த இனப்பெருக்க பகுதியாக இருக்கிறது. நீலகிரியை தவிர்த்து கேரளாவில் உள்ள பெரியார் புலிகள் காப்பகத்திலும் சென்னா மரங்கள் உள்ளன. ஆனால் இங்கு நீலகிரி அளவிற்கு பரவலாக இல்லை. வயநாடு சரணாலயத்தில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்மரங்கள், பின்பு அருகாமை பகுதிகளை ஆக்ரமித்திருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வயநாட்டில் உள்ள யானை வாழ்விடங்களின் பெருமளவு பகுதியை சென்னா மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.

alien plants
alien plants

கேரள வனத்துறையில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்து வருகிறார் கேசவன். காடுகள் மீது பெரும் விருப்பம் கொண்ட இவருக்கு 50 வயதாகிறது. சரணாலயத்தின் உள்ளேயே முத்தங்கா பகுதியின் அருகேயுள்ள நூழ்புழா ஆற்றின் கரையோரத்தில் வசித்து வரும் கேசவன், காடுகளில் சென்னா மரங்களின் பரவல் குறித்து விரிவாக பேசுகிறார். “ஆரம்பத்தில் நிழலுக்காக மூன்று, நான்கு மரங்களை முத்தங்கா வனத்துறை அலுவலகத்தில் நட்டு வைத்தனர். இதன் பிராகாசமான மஞ்சள் நிற பூக்களை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும்.

பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக இம்மரம் காட்டில் பரவத் தொடங்கியது. இப்போது சரணாலயத்தில் எங்கு பார்த்தாலும் காணப்படுகிறது. காடுகளில் பரவலாக காணப்படும் இஞ்சி, மஞ்சள், கிழங்குகள் மற்றும் அனைத்து மூலிகைச் செடிகளையும் இம்மரம் பாதித்துள்ளது. இதன் இலைகளிலிருந்து வரும் மோசமான வாடையால் விலங்குகள் எதுவும் இதை சாப்பிடாது. சென்னா மரங்கள் அதிகளவில் இருக்கும் பகுதிகளுக்கு யானைகள் மற்றும் பிற விலங்குகள் செல்வதில்லை. சென்னா மரக்கன்றுகளை வேரோடு பிடுங்குவதற்கான தீர்வுகளை நாம் விரைவில் ஆரம்பிக்க வேண்டும்” என்கிறார்.

திறந்தவெளிப் பகுதிகள், ஆற்றங்கரையோர காடுகளில் தான் சென்னா மரங்கள் அதிகமாக பரவியிருக்கின்றன. இதன் செடிகள் முழு மரமாக வளர்ந்து, பூப்பதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஒவ்வொரு பருவத்திலும் ஒரு மரம் மட்டுமே 6,000 விதைகளை உற்பத்தி செய்கிறது. இந்த மரத்தின் கீழே வளர்ந்திருக்கும் உள்ளூர் உணவு ஆதாரங்களை முற்றிலும் அழித்து, தாவரவுண்ணி மற்றும் ஊணுண்ணிகள் உயிர் வாழ்வதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக விலங்குகளின் இரை தேடும் பகுதிகள் குறையத் தொடங்குவதால், வனவிலங்குகள் தங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை கடந்து மனித- வனவிலங்கு மோதலை சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. சென்னா மரங்கள் இருக்கும் பகுதிகளை தவிர்க்கும் யானைகள் போன்ற பெரிய பாலூட்டிகள், வேறு வழியின்றி சென்னா மரங்கள் இல்லாத பகுதிகளை நோக்கி செல்வதால் காட்டின் சூழலியல் சமன்பாடு மாறுகிறது.

alien plants
alien plants

இம்மரத்தின் தாவரவியல் அம்சங்களை கருத்தில் கொண்டால், இதை அகற்றுவது சவாலான காரியம் மட்டுமல்ல, செலவும் அதிகமாகும். கேரள வன ஆய்வு நிறுவனம், கேரளா வனத்துறை மற்றும் வனவிலங்கு துறை, ஃபாரஸ்ட் ஃபர்ஸ்ட் என்ற லாப நோக்கமற்ற நிறுவனம் போன்றவை இதை அழிப்பதற்காக பல்வேறு இயந்திரவியல் மற்றும் ரசாயன கட்டுப்பாடு முறைகளை முயற்சித்து பார்த்துவிட்டார்கள்.

வயநாடு வனவிலங்கு சரணாலயத்தில் சென்னா மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள உயிரியியலாளர் அனுராக் வராகில் கூறுகையில், “பெரிய மரங்களின் வேர்கள் மிகவும் ஆழமாகவும் அகலமாகவும் இருக்கின்றன. இதனால் முழு வேர்ப்பகுதிகளையும் அகற்றுவது சிரமமாக உள்ளது. அடுத்த வருடமே வெட்டிய கிளையிலிருந்து மரம் வளரத் தொடங்கிவிடுகிறது. அதனால் மரத்தை அகற்றும் நடைமுறையை மூன்று வருடங்கள் தொடரப் போகிறோம்” என்கிறார்.

எனினும் சென்னா மரங்களை அகற்றும் போது நிறைய திறந்தவெளிப் பகுதிகள் உருவாகும். இது மற்ற ஆக்கிரமிப்பு தாவரங்கள் வளர்வதற்கு காரணமாகி விடக்கூடாது. மேலும் மரத்தை அகற்றும் போது மண் அரிப்பும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க வேண்டுமென்றால், அப்புறப்படுத்தப்பட்ட பகுதிகள் அனைத்திலும் உள்ளூர் மரச் செடிகளை நட வேண்டும்.

alien plants
alien plants

கைகள் மற்றும் இயந்திரங்கள் மூலமாகவும், நெருப்பை பயன்படுத்தியும், ரசாயனத்தின் மூலமாக மற்றும் உயிரியல் கட்டுப்பாடு மூலமாகவும் என இந்தியாவில் ஆக்ரமிப்பு தாவரங்களை கையாள பல முறைகள் உள்ளன. லண்டானா உண்ணிச்செடி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள சென்னா போன்ற ஆக்கிரமிப்பு மரங்களின் பரவலைக் கட்டுப்படுத்த வெட்டுவது, வேரோடு பிடுங்குவது மற்றும் இயந்திர முறைகள் போன்றவை பொதுவாக பின்பற்றப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இதுபோன்ற அப்புறப்படுத்தும் முயற்சிகள் யாவும் நிலப்பரப்பில் இருக்கும் சிக்கல்கள் காரணமாக தோல்வியிலேயே முடிந்துள்ளன. மரங்களை அகற்றுவதற்குள் அதன் விதைகளை பாலூட்டிகளும் பறவைகளும் புதிய செடிகளாக வளர வைக்கின்றன. இதுபோன்ற ஆக்கிரமிப்பு மரங்களை அகற்ற வேண்டுமென்றால், இவை எப்படி பரவுகிறது என்பதை புரிந்துகொண்டு, ஒவ்வொரு பகுதிக்கும் தகுந்தாற்போல் திட்டங்களை வகுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com