இனிமேல் ‘அவன் புழு மாதிரி’ என்று சொல்லாதீர்கள்.. தலையை வெட்டினாலும் மீண்டும் துளிர்க்கும் விநோதம்!

தட்டை புழுக்களின் தலையை வெட்டினால் மறுபடி அதன் தலையானது அதன் உடலில் உள்ள RNA மூலம் 14 நாட்களில் வளர்ந்து விடுவதாக சொல்லி அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார்கள்.
தட்டை புழுக்கள்
தட்டை புழுக்கள்smithsonian page

இயற்கை தனது படைப்பின் ரகசியத்தை தன்னுள் அடக்கி வைத்திருந்தாலும் மனிதன் அவற்றின் ஒரு சிலவற்றை அறிந்துக்கொள்ள முயற்சி செய்து அதில் வெற்றியும் காண்கிறான். எந்த ஒரு உயிரினத்திற்கும் அதன் தலை தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தலையில் இருக்கும் மூளை தான் நினைவுகளை சேமித்து வைத்திருக்கும். தலை இல்லை என்றால் உயிரினமானது இறந்து விடும். ஆனால், தலையை வெட்டிய பிறகு உயிர் வாழும் உயிரினம் என்றால் அது கரப்பான் பூச்சி மட்டும் தான். அதுவும் தலை இல்லாமல் ஒரு வார காலம் வரையில் தான் அது உயிருடன் இருக்கும். அதன் பிறகு அதுவும் இறந்து விடும்.

ஆனால், திரைப்படங்களில் கதைகளில், மட்டுமே ஒரு உயிரினத்தின் தலையானது வெட்டப்பட்டு தரையில் வீழ்ந்த பிறகு வேறு தலை முளைப்பதை பார்த்து இருப்போம். அக்கதை நிஜமாக்கும் வகையில் ஒரு வகை உயிரினம் தனது தலையை இழந்தபிறகு வாழ்வது மட்டும் அல்லாமல் மீண்டும் அதன் தலையானது வளர்ந்து விடுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ம முடிகிறதா..?

ஆம். நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தட்டை புழுக்கள் பற்றிய ஆராய்சி செய்து வந்த டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்சியாளர்கள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில், தட்டை புழுக்களின் தலையை வெட்டினால் மறுபடி அதன் தலையானது அதன் உடலில் உள்ள RNA மூலம் 14 நாட்களில் வளர்ந்து விடுவதாக சொல்லி அதை நிறுபித்தும் காட்டியிருக்கிறார்.

டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தால் ஷோம்ராட் மற்றும் மைக்கேல் லெவின் தங்களது ஆராய்சியின் முதல் கட்டமாக இத்தகைய புழுக்களை கடினமான மேற்பரப்பு மற்றும் மிருதுவான மேற்பரப்பில் வாழ பயிற்சி அளித்துள்ளனர். இவைகளில் இப்புழுக்கள் வாழ பழகிக்கொண்ட பிறகு அதன் தலைகளை தனியாக துண்டித்து விட்டனர். ஏனெனில் உயிரினங்களின் நடத்தையானது அதன் மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நினைத்தனர் ஆராய்சியாளர்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தற்கு மாறாக தலையில்லாத இவ்வகை புழுவானது தனது பயிற்சிக்கேற்ப உணவு தேடுதலை தொடர்ந்தது என்கிறார்கள். இரண்டு வாரங்கள் கழித்து துண்டிக்கப்பட்ட தலையானது மீண்டும் வளர்ந்தும் அதே பழைய பயிற்சியுடன் இருந்ததைக்கண்டு விஞ்ஞானிகள் வியந்துள்ளனர்.

அவர்களின் கூற்றுப்படி "மெமரி ஆர்.என்.ஏ" எனப்படும் ஒரு வகை மரபியல் பொருள் தான் இந்த நிகழ்வுக்கு காரணம் என்றும் விஞ்ஞானிகள் வியந்துள்ளனர். பிளானேரியன் நினைவகத்தின் மீதான இதன் தொடர்ச்சியான ஆராய்ச்சியில், புழுக்கள் தலை துண்டிக்கப்பட்ட பிறகு 14 நாட்களுக்குள் தங்களின் தலையை எளிதில் மீண்டும் உருவாக்க முடியும் என்ற உண்மையைக் கண்டறிந்துள்ளனர். விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வின் முடிவில் புழுக்களின் சில நினைவுகள் அவற்றின் உடலில் சேமிக்கப்பட்டிருக்கலாம்; அதனால் தான் புழுக்கள் தங்களின் தலைகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை நினைவில் கொண்டு அது மறுபடியும் செயல்படுகிறது என்கிறார்கள். தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆராய்சியை மேற்க்கொண்டு வருகிறார்கள்.

இனிமேல் யாரையாவது “அவன் புழு மாதிரி, ஒரே அடிதான் செத்துடுவான்” என்றும் சொல்லாதீர்கள். தற்காலிக கண்டுபிடிப்பில் புழு ஒன்றுக்குத் தான் தலையை வெட்டி எடுத்தால் மீண்டும் வளரும் என்று நிரூபித்து இருக்கிறார்கள். ஆகவே புழு மாதிரி இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாகவே இருங்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com