நண்பனில் கெட்ட நண்பனும் உண்டு: நஞ்சான நட்பு - எச்சரிக்கை!

நண்பனில் கெட்ட நண்பனும் உண்டு: நஞ்சான நட்பு - எச்சரிக்கை!
நண்பனில் கெட்ட நண்பனும் உண்டு: நஞ்சான நட்பு - எச்சரிக்கை!
Published on

நண்பனில் ஏது நல்ல நண்பன், கெட்ட நண்பன்? நண்பன் என்றாலே நல்லவன் தான் என்று ஒரு சினிமா வசனம் உண்டு. நண்பனாக நீங்கள் கருதும் ஒரு நபர் முழுக்க முழுக்க உங்களுக்கு எதிர்மறை சிந்தனைகளையே ஊட்டி, உங்களுக்கு இறுக்கமான மனநிலையை உண்டாக்குகிறார் என்றால் அவர் உங்கள் டாக்சிக் நண்பர். தமிழில் இதை நஞ்சான நண்பர் என்று சொல்லலாம். அப்படி செய்பவர் எப்படி நண்பராக இருக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். அவரை நண்பராக ஏற்கனவே நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். உங்கள் மனம் அவரை நண்பர் என்றே கருதும். ஆனால் அவர் உங்களை உற்சாகப்படுத்தி முன்னேற்றுபவராக இல்லாமல், எதிர்மறை எண்ணங்களை உருவாக்கி கனத்த இதயத்துடனேயே அலையவிடுவார். அப்படிப்பட்ட நபர்களை எப்படி அடையாளம் காண்பது, எப்படி விடுபடுவது என்று பார்ப்போம்.

1. எதிர்மறை எண்ணங்கள்

ஒரு நண்பன் உங்களுடைய நற்குணங்களை விட்டுவிட்டு கெட்டதை மட்டுமே சுட்டிக்காட்டி அதை பெரிது படுத்துகிறாரா? எந்த ஒரு காரியத்தை நேர்மறையான கோணத்தில் அனுகாமல் எதிர்மறையான கோணத்தில் கையாள்கிறாரா? அவர் உங்கள் டாக்சிக் நண்பர். அது அவருடைய மனநிலை சார்ந்த பிரச்சனை. அதை அவருக்கு புரிய வைத்து நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும் அல்லது அவரை நீங்கள் ஒதுங்கிவிட வேண்டும்.

2. உங்கள் மீது பைத்தியம்

நண்பர்களுக்குள் விவாதங்கள் வருவதும், சிறு சங்கடங்கள் ஏற்படுவதும் இயல்பு. ஆனால் உங்கள் டாக்சிக் நண்பர் எதற்கெடுத்தாலும் உங்கள் மீது அளவுக்கு அதிகமாக கோபப்படுவார். சிறிய விஷயங்களுக்கெல்லாம் உங்கள் மீது சீறிப்பாய்வார். அதற்கு உங்கள் மீது வைத்திருக்கும் அளவுக்கு அதிமான அன்புதான் காரணம் என்பார். நீங்களும் அதை நம்பி தொடர்ந்து பழகுவீர்கள். இப்படிப்பட்டவர்கள் எப்போதும் உங்களை காயப்படுத்திக் கொண்டேதான் இருப்பார்கள். இதற்கு ஒரு முடிவே இருக்காது. இதுபோன்ற நட்பு ஒருபோதும் ஆரோக்கியமானதாக இருக்காது. அவர்களை விட்டுவிலகி விடுவது நல்லது.

3. தற்பெருமை

ஒருவர் தன்னைப் பற்றியும், தன்னுடைய வாழ்க்கையின் திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறாரா? உங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், நீங்கள் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்காமல், எப்போதும் தன்னை பற்றிய சிந்தனை மற்றும் உரையாடலையே நடத்திக் கொண்டிருப்பார் எனில் அவரும் உங்கள் டாக்சிக் நண்பர். அவர் மறைமுகமாக சொல்லவரும் செய்தி, உங்களைப் பற்றி ஒருபோதும் கவலையில்லை; என்னைப் பற்றி பேச எனக்கு ஒரு ஆள் கிடைத்துவிட்டது என்பதுதான். கட்டாயம் அவரைப் புறக்கணிப்பது நல்லது.

4. நிர்பந்தம்

உங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்காமல் தன்னுடைய விருப்பங்களை உங்கள் மீது திணித்து அதை செய்தே தீர வேண்டும் என்று ஒருவர் வற்புறுத்திகிறாரா? அவரும் உங்கள் டாக்சிக் நண்பர். இப்படிப்பட்ட நபர்களின் மூலம் உங்களுக்கு பிடிக்காத காரியத்தை நீங்கள் செய்துவிடக் கூடும். பிறகு தனியாக அமர்ந்து யோசித்து மிகவும் மனம் வருந்துவீர்கள். இப்படிப்பட்ட நபர்களால் காலம், பொருள் விரையம் ஏற்படுவதோடு கடுமையான மன உழைச்சலும் உண்டாகும். இதுபோன்ற நபர் சொல்வதைக் கேட்காமல் துணிந்து சுயமான முடிவுகளை எடுத்தால் போதும். அவர்கள் தாங்களாக உங்களை விட்டுவிலகி சென்றுவிடுவார்கள். ஏனெனில் இதுபோன்ற நபர்கள் தலையாட்டி பொம்மைகளோடு மட்டுமே காலம் தள்ளமுடியும்.

5. மாற்றம் ஒன்றே மாறாதது

உலகின் அனைத்து கூறுகளையும் போல ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்களையும் ஏற்றுக் கொண்டுதான் எந்த ஒரு உறவையும் தொடர முடியும். அதில் நண்பர்களுக்கும் விதிவிலக்கு இல்லை. உங்கள் நண்பரோடு கல்லூரியில் நீங்கள் பழகியதைப் போல வேலைக்குப் போன பின்பும், திருமணம் ஆன பின்பும் பழக முடியாது. ஆனால் சிலர் இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அதைக் காரணம் காட்டி உங்கள் மீது கோபமும், வருத்தமும் கொள்கிறார்கள் என்றால் அவர் உங்கள் டாக்சிக் நண்பர். மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத நண்பருக்கு வாழ்வின் எதார்த்தங்களைப் புரிய வைக்க வேண்டும் அல்லது மெதுவாக புறக்கணித்து விட வேண்டும்.

வாழ்வில் பள்ளியில் தொடங்கி, கல்லூரி, வேலை செய்யும் இடம், வாழும் ஊர் என பல இடங்களில் பலரையும் சந்திக்கிறோம்; பழகுகிறோம். அப்படி பழகும்போது அந்த நட்பு நம் வாழ்க்கையை மேம்படுத்தும் நட்பாக இல்லாவிட்டாலும், வாழ்க்கையை அழித்துவிடும் நட்பாகவும், துன்பத்தையே பரிசளிக்கும் நட்பாகவும் இருந்துவிடக் கூடாது. எச்சரிக்கை...!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com