"இட்லி சலிப்பான உணவில்லை" : மனம் மாறிய பிரிட்டன் பேராசிரியரின் கேரள காதல் கதை

"இட்லி சலிப்பான உணவில்லை" : மனம் மாறிய பிரிட்டன் பேராசிரியரின் கேரள காதல் கதை
"இட்லி சலிப்பான உணவில்லை" : மனம் மாறிய பிரிட்டன் பேராசிரியரின் கேரள காதல் கதை

சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பிரிட்டன் பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன், இட்லி பற்றி தெரிவித்திருந்த கருத்துக்கு தென்னிந்தியர்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனையடுத்து அமெரிக்கா துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், காங்கிரஸ் எம்பி சசிதரூர், பாடகர் டி.எம். கிருஷ்ணா உள்பட பல பிரபலங்களும் இட்லிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அவருக்குப் பதிலளித்த சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம், "ஓர் உணவு ஏன் இத்தனை மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை" என்று தெரிவித்தது.

சில மணி நேரங்களிலேயே இட்லி பிரியர்கள் - இட்லி வெறுப்பாளர்கள் என இரண்டு குழுக்களாக பிரிந்து ட்விட்டரில் கடும் விவாதங்களில் ஈடுபட்டார்கள். "இட்லி வெறுப்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தேங்காய் சட்னியும் சூடான பெங்களூரு சாம்பாரும் இருக்கும்போது இன்னும் திருப்திகரமான உணவைப் பற்றி என்னால் நினைக்கமுடியவில்லை" என்ற கருத்தை வெளியிட்டார் அஜய் காமத் என்ற இட்லி ஆதரவாளர்.

ஆண்டர்சனின் கருத்தை எழுத்தாளரான இஷான் தரூர் ட்விட்டரில் விமர்சித்திருந்தார். தன் மகன் கருத்தைச் சுட்டிக்காட்டிப் பதிலளித்த திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர். " ஒரு நாகரிகத்தைப் புரிந்துகொள்வது கடினம். இட்லியைப் பாராட்டுவது, கிரிக்கெட்டை ரசிப்பது அல்லது ஓட்டன்துள்ளலைப் பார்ப்பதற்கான சுவையும் சுத்திகரிப்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்படவில்லை. இந்த ஏழை மனிதன் மீது பரிதாபப்படுகிறேன். வாழ்க்கையைப் பற்றி அவருக்குத் தெரியவில்லை" என்று காட்டமாக அவர் ட்வீட் செய்திருந்தார்.

பாடகர் டிஎம் கிருஷ்ணாவும் இட்லி பற்றி வெளிப்படையான கருத்தை முன்வைத்தார்: "கேரள மக்களுக்கு இட்லிக்கும் தோசைக்கும் சுவையான சட்னியும் சாம்பாரும் செய்யத் தெரியாது. அந்த வரிசையில் கன்னடர்களும் தமிழர்களும் கைகளை உயர்த்திக்கொள்ளலாம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்படியொரு கருத்து மோதலை பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் எதிர்பார்க்கவில்லை. இட்லியை ஊதிப் பெரிதாக்கிய அவர், நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். மலையாள இயக்குநர் வேணுவின் மகளான மாளவிகாவை அவர் காதல் திருமணம் செய்துள்ளார். "இட்லியின் மீதான நமது அன்பை அவர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை" என்கிறார் பேராசிரியர் ஆண்டர்சனின் மனைவி.

சசிதரூர் 

"தென்னிந்தியாவில் பெரும்பாலான நேரங்களை செலவழித்திருக்கிறேன். எனக்கு அடிக்கடி இட்லி பரிமாறப்பட்டுள்ளது. எனக்கு இட்லியுடன் எந்த கசப்பான அனுபவமும் இல்லை. அவை சாதுவானதாகத் தெரிகின்றன. நீராவியை வெளியேற்றிவிட்டால், அவை விரும்பாத வடிவங்களில் மாறலாம். நான் சாம்பார் மற்றும் சட்னியை விரும்புகிறேன்" என்கிறார் எட்வர்ட் ஆண்டர்சன்.

இட்லி பற்றிய அவரது ட்வீட்டுக்கு சசிதரூர் பதிலளித்ததும் எட்வர்ட் ஆண்டர்சன் ஒரு திருப்புமுனையை உணர்ந்தார். "என் கருத்து அவரது மகன் மூலம் சசிதரூரின் கவனத்திற்கு வந்தது. அவர் இட்லியின் சுவிசேசகராக இருக்கிறார். ஆனால் அவர் நாடகத்தனமாக மற்றும் வேடிக்கையாக பதிலளித்திருந்தார். என் கருத்துக்கான எதிர்ப்புக் குரல்கள் மூலம் ஒரு பிளவு இருப்பதை உணரமுடிகிறது. நான் சொல்லிய கருத்து தவறானது என்று பலரும் சொன்னார்கள். அதெல்லாம் விரைவாகப் போய்விடும். என் கருத்துகளுக்கு ஆதரவும் இருக்கிறது" என்று விளக்கமாகப் பேசுகிறார் ஆண்டர்சன்.

கமலா ஹாரிஸ் 

எட்வர்ட் ஆண்டர்சன் தென்னிந்திய உணவை வெறுக்கவில்லை. இந்திய உணவுகளை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார் அவர். "நான் நிறைய நாட்கள் டெல்லியில் இருந்திருக்கிறேன். பஞ்சாபி மற்றும் மொஹல் உணவுகளை மிகவும் விரும்புகிறேன். என்னுடைய கேரளத் தொடர்பால், தென்னிந்திய உணவின்மீதும் நேசம் வந்துவிட்டது. கொஞ்சு ரோஸ்ட், அப்பம், வறுத்த மீன், சிக்கன் ப்ரை, கேரளா பரோட்டா... எனக்குப் போதுமானதாக இல்லை. சிறப்பு நாட்களில் கிடைக்கும் பாரம்பரிய சாப்பாடு சுவையே தனிதான். ஊரடங்கால் ஓணம் சாப்பாட்டை இழந்துவிட்டேன்" என்று நினைவுகளில் மூழ்கி எழுகிறார் ஆண்டர்சன்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான் காதல் மனைவி மாளவிகாவை எட்வர்ட் சந்தித்தார். "ஜேஎன்யூ வில் படித்த பிறகு நான் பிரிட்டன் சென்றுவிட்டேன். அங்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வுப் படிப்பில் சேர்ந்தேன். மாளவிகாவும் கேம்ப்ரிட்ஜ் வந்தார். பின்னர் இருவரும் திருவனந்தபுரத்தில் திருமணம் செய்துகொண்டோம்" என்று அவர் உற்சாகத்துடன் பகிர்கிறார்.

டி.எம். கிருஷ்ணா 

சில நாட்கள் கேரளத்தில் இருந்த அனுபவத்தில், உலகிலேயே மிகவும் அழகான இடம் என்று புகழ்கிறார் எட்வர்ட் ஆண்டர்சன். "இட்லியை நான் வெறுப்பதால் என்னை முட்டாள் என்று சொல்வதைத் தவிர, மலையாளிகள் மிகவும் அன்பான மக்கள் " என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.

எட்வர்ட் ஆண்டர்சன் 

ஒரு வரலாற்றுப் பேராசிரியராக அவர் இட்லியை கையில் எடுத்தார். " இட்லி பற்றிய எனது எதிரான கருத்து மூலம், இட்லி சலிப்பான உணவாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதற்குப் பின்னால் சுவாரசியமான வரலாறு இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இடம்பெயர்வு, சமையல் பொருட்களின் இயக்கம், சமையல் நுட்பங்கள் ஆகியவை பெரும்பாலான உணவுகளின் வரலாறாக இருக்கிறது.

நாம் எப்போதும் உணவை ஒரு கலாச்சாரத்தின், வரலாற்றின் அழியாத அம்சமாகப் பார்க்கிறோம். உணவுப் பழக்கங்கள் எப்போதும் புதுமையாக மாற்றம் அடைந்துகொண்டே இருக்கின்றன. இந்தியாவில் எங்கும் காணப்படும் மிளகாய், 15 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.  பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்காலத்தில்தான் தேநீர் இந்தியா வந்தது" என்று உணவு வரலாற்றின் பாதையில் நடைபயில்கிறார் எட்வர்ட் ஆண்டர்சன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com