சுதந்திர வேட்கையுள்ள அனைவரையும் அழைக்கிறேன் - இந்திய கொடியும் மேடம் காமாவும்

சுதந்திர வேட்கையுள்ள அனைவரையும் அழைக்கிறேன் - இந்திய கொடியும் மேடம் காமாவும்
சுதந்திர வேட்கையுள்ள அனைவரையும் அழைக்கிறேன் - இந்திய கொடியும் மேடம் காமாவும்

இந்திய விடுதலையின் சின்னமாக முதன்முதலில் இந்தியாவிற்கு கொடி உருவாக்கி மூவர்ணக்கொடியை வெளிநாட்டில் ஏற்றி பறக்கவிட்ட, இந்திய விடுதலை போராட்ட வீரப்பெண்மணி ”மேடம் காமா” ஒரு தனி சகாப்தம்.

"இந்தக் கொடி இந்திய சுதந்திரத்தின் அடையாளமாகப் பறக்கிறது. 

இது பிறப்பதற்கு முன்பே, ஏராளமான இளம் இந்தியர்களின் ரத்தத்தால் புனிதமாக்கப்பட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் சுதந்திர வேட்கையுள்ள ஒவ்வொருவரையும் இந்தக் கொடிக்கு வணக்கம் செலுத்த அழைக்கிறேன்’’

என்று முழங்கியவரின் பெயர் இங்கு எத்தனை பேருக்கு தெரியும்?

பள்ளி, கல்லூரிகள், பாடப்புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டாலும் இந்திய வரலாறு என்றாலே இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்களும், படையெடுத்தவர்களும், அதிகாரம் செய்தவர்களும், அடிமைப்படுத்தியவர்களும் என்ற வரலாற்று செய்திகளே பயிற்றுவிக்கப்படும்.

அந்த வகையில் நம் நாட்டின் பல போராட்ட வீரர்கள் வீராங்கனைகளின் பெயர்கள் மற்றும் வரலாறுகள் மறைக்கப்பட்டும், மறந்துவிடபட்டும் வருவது வேதனையான ஒன்றாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ கொடி அறிவிக்கப்படாத முன்னரே மூன்று வண்ணத்தில் ஒற்றுமைக்கான ஒரு தேசிய கொடி உருவாக்கி அதில் ”வந்தே மாதரம்” என்று எழுதி பறக்கவிட்டவர் பற்றி தெரிந்துகொள்வோம்.

மேடம் காமா:

மேடம் காமா என்று அழைக்கப்படும் பிகாஜி ருஸ்தம் காமா செப்டம்பர் 24 , 1861 அன்று பாம்பேயில் செல்வாக்குமிக்க பார்சி குடும்பத்தில் பிறந்தார். தன்னுடைய 24ஆவது வயதில் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் ருஸ்டம் கே.ஆர்.காமா என்ற பணக்கார வழக்கறிஞரைத் திருமணம் செய்து கொண்டார்.

தீவிரமான, முற்போக்கான இலட்சியங்களை இளமைக் காலத்திலேயே வளர்த்துக் கொண்டிருந்த மேடம் காமாவிற்குத் திருமண வாழ்க்கை மிகப்பெரிய தடையாக இருந்தது. அந்தத் தடையையும் மீறிப் பொது வாழ்வில் தீவிரமாக இறங்கி, தம் இலட்சியத்தை அடைய எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். அதனால் குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு 1901இல் குடும்பத்தை விட்டு வெளியேறி, முழுக்க முழுக்க சுதந்திர விடுதலை போராட்டத்திற்கே தன்னை அர்ப்பணித்துகொண்டார்.

சுதந்திர வேட்கையில் காமா விதைகள்:

ஒரு அதிதீவிர இந்திய விடுதலை வேட்கை கொண்டவராக இருந்த மேடம் காமா, இந்தியாவில் உருவாக்கபட்ட கொடிகளை வெளிநாட்டில் விடுதலைக்காக போராடிய இந்திய புரட்சியாளர்களுக்கும் ஏற்றுமதி செய்தவர். லண்டனில் இருந்து கொண்டு மறைமுகமாக இந்தியாவில் இருந்த புரட்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கி ஆயுத புரட்சியையும் ஏற்படுத்தினார்.

ஆங்கிலேய கலக்டர் துரையை சுட்டுகொன்ற வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி கூட இவர் அனுப்பியதுதான் என்று சொல்லப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புரட்சியாளர்களை ஒன்றிணைத்து அடிமை சிறையை உடைத்து வெற்றி பெற இறுதிவரை உழைத்துகொண்டே இருந்தார்.

இந்தியாவிற்கான முதல் தேசிய விடுதலை கொடி

விடுதலை அடையப் போகும் இந்தியாவிற்கென்று முதல் கொடியை உருவாக்கினார் மேடம் காமா. மேலே, பச்சை வண்ணப் பட்டையில், இந்திய மாநிலங்களை குறிக்கும் வகையில் எட்டு மலர்ந்த தாமரைகள் பொறிக்கப்பட்டிருந்தன. நடுவில் மஞ்சள் நிற பட்டையில், வந்தே மாதரம் என, தேவநாகரி வரி வடிவில், எழுதப்பட்டிருந்தது. அடியில், சிவப்பு நிறப் பட்டையில், இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும், பிறை சந்திரனும், சூரியனும் இடம் பெற்றிருந்தன.

இக்கொடி இன்றும் பூனாவில் உள்ள மராத்தா பொது நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் சிறப்பு:

மேடம் காமாவின் நினைவை பாராட்டும் விதமாக இந்திய அரசின் அஞ்சல் துறை, அவரது உருவம் தாங்கிய அஞ்சல் தலையை 26 சனவரி 1962இல் வெளியிட்டது.

தனிப்பெருமை:

தோல்வியால் சோர்வடைந்த ஃபிரெஞ்சு மன்னனையும் மக்களையும் ஊக்குவித்துத் தேசியப் படை திரட்டி ஆங்கிலேயருடன் போரிட்டு வெற்றிகொண்ட இளம் வீராங்கனையான ஜோன் ஆப் ஆர்க் படத்தை மேடம் காமாவின் படத்துடன் இணைத்துப் பிரெஞ்சுப் பத்திரிகைகள் வெளியிட்டு பெருமைபடுத்தின.

இறுதிகாலம்:

பெரும் இந்திய விடுதலை போராட்ட வீரரான மேடம் காமாவின் இறுதிகாலம் மோசமானது. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவிற்கு திரும்பிய அவர் ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கவனிப்பதற்கு மட்டுமல்லாமல் என்னாச்சு என்று கேட்பதற்கு கூட ஆள் இல்லாமல் கேட்பாரற்றவர் போல இறந்து போனார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com