3 வருடங்களாக இதைதான் சொல்லி வந்தேன் - ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் தப்பிய ஹர்ஜித் பேட்டி

3 வருடங்களாக இதைதான் சொல்லி வந்தேன் - ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் தப்பிய ஹர்ஜித் பேட்டி

3 வருடங்களாக இதைதான் சொல்லி வந்தேன் - ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் தப்பிய ஹர்ஜித் பேட்டி
Published on

ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளது குறித்து ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய ஹர்ஜித் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்விக்கு சுமார் 4 ஆண்டுகளாக மத்திய அரசிடம் பதில் இல்லை. கடத்தப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை அவ்வவ்போது சந்தித்து வலியுறுத்தி வந்தனர். சுஷ்மாவும் இது குறித்து பல முறை நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். ஆனால், அதில் எப்பொழுதும் உறுதியான பதில் இல்லை. கடத்தப்பட்டவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக எல்லோரும் காத்திருந்தார்கள். 

இன்று 39 இந்தியர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு அந்த விளக்கத்தை அளித்துவிட்டது. ஈராக்கில் மீட்கப்பட்ட சடலங்கள் மற்றும் புதைக்கப்பட்ட சடலங்களின் டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டு முடிவுகள் வந்துவிட்டதாக சுஷ்மா சுவராஜ் மக்களவையில் கூறியுள்ளார். இதற்குதான் 4 ஆண்டுகள் ஆனது.

இதில், இன்னொரு விஷயம் என்னவென்றால், கடத்தப்பட்ட 39 இந்தியர்களையும் தீவிரவாதிகள் கொன்றுவிட்டனர் என ஐ.எஸ் பிடியில் இருந்து தப்பிவந்ததாக கூறும் ஹர்ஜித் மஷிஸ் கூறியதை யாரும் நம்பவில்லை. ஆனால் இன்று அதனை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. 

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஜித். அவருடன், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர்பூர், ஹோசியர்பூர் பகுதிகளில் இருந்து 40 பேர் ஈராக்கில் பணி செய்ய சென்றிருக்கிறார்கள். அதில்தான், 39 பேர் கடத்தப்பட்டு மாயமானதாக செய்திகள் கூறிவந்தது. காலில் சுடப்பட்ட நிலையில், 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் ஒரே ஒரு ஆளாக தான் மட்டும் எப்படியோ தப்பித்து வந்துவிட்டதாக அவர் கூறி வருகிறார். 

          
 
2017 இல் பத்திரிக்கை ஒன்றில் அவர் பேசும் போது, “2014 மே மாதம் வரை எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. மொசூல் நகருக்கு வெளியே ஐ.எஸ். தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டிருந்த போதும், கம்பெனியில் நாங்கள் சந்தோஷமாக வேலை செய்தோம். ஆனால், ஒரு மாதத்திற்கு பிறகு அவர்கள் எங்கள் கம்பெனிக்குள் வந்து எங்களையெல்லாம் கடத்திவிட்டார்கள். 

பின்னர் எங்களை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றார்கள். எங்களை கட்டாயப்படுத்தி வரிசையாக முட்டிபோட வைத்தனர். பின்னர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். என்னுடைய வலதுகாலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. எல்லோரும் சரிந்து விழுந்தார்கள். நான் சுயநினைவை இழந்தேன். மறுநாள் சுய நினைவு வந்தபோது, என்னுடன் இருந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததை கண்டேன். சில நாட்கள் கடந்த பின்னர், ஒருவழியாக வங்கதேச அகதிகள் முகாமிற்கு நான் சென்றுவிட்டேன். அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். ஒரு வாரம் கழித்து அங்கிருந்து இந்தியா திரும்பினேன்” என்று கூறினார். ஆனால், தன்னுடன் பணி செய்த 39 பேரும் இறந்துவிட்டார்கள் என்று அவர் சொன்னதை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. 

இதுகுறித்து 2017 ஜூலை மாதம் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், “எப்படி தப்பி வந்தார் என்பதை மஷிக் விளக்கவே இல்லை. அவர் எங்களை தவறாக வழிநடத்துகிறார்” என்று கூறியிருந்தார். அரசு ஏற்க மறுத்தது குறித்து அவர் கூறுகையில், “மத்திய அரசு உண்மையை ஏற்க ஏன் மறுக்கிறது? அப்படி 39 பேரும் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் அவர்களை இத்தனை வருடங்களாக ஏன் கொண்டு வரவில்லை. நான் எப்பொழுதும் பொய் சொல்லியதில்லை. அரசு தான் பொய் சொல்கிறது” என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். 

மத்திய அரசு இன்று வெளிப்படையாக கூறியுள்ளதை அடுத்து, “39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று 3 வருடங்களாக கூறிவந்தேன். நான் உண்மையைதான் சொன்னேன்” என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com