வேங்கைவயல் அவலம்: ஓராண்டை கடந்தும் திணறும் சிபிசிஐடி போலீசார் - கைகொடுக்காத டிஎன்ஏ முடிவு.. அடுத்து?

வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்தவர்கள் யார் என கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர். இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக பார்க்கலாம்...
வேங்கைவயல் நீர்தேக்கத்தொட்டி
வேங்கைவயல் நீர்தேக்கத்தொட்டிபுதிய தலைமுறை

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

குடிக்கிற தண்ணியில இப்படியெல்லாமா செய்வாங்க... இவங்கெல்லாம் மனுச ஜென்மமா இல்ல.... என ஒட்டுமொத்த மனித குலத்தின் அவலமாக பார்க்கப்பட்ட அந்த மோசமான சம்பவம் அரங்கேறியது புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தான்.

அப்படி முகம்சுளிக்க வைக்கும் அந்த செயலை செய்தவர்கள் யார் என ஒரு வருடத்திற்கு மேலாகியும், இதுவரை அடையாளம் காணப்படாமல் இருப்பது அவலத்திலும் அவலம் என்றால் அது மிகையில்லை. என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்...

வேங்கைவயல்
வேங்கைவயல்file

குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு - டிச. 26, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி, மனிதக் கழிவு கலக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை மற்றும் வருவாய் மற்றும் காவல் துறையினர் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து குடிநீர்த் தொட்டியை ஆய்வு செய்தனர். குடிநீர் தொட்டியில் இருந்து மாதிரியை சேகரித்ததோடு, தொட்டியையும் கழுவி சுத்தம் செய்தனர். பின்னர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்வதை நிறுத்திய அதிகாரிகள், தொட்டியில் மேல் யாரும் ஏறாமல் இருக்க பூட்டு போட்டும் பூட்டினர்.

வேங்கைவயலில் குடியிருக்கும் சுமார் 40 குடும்பத்தினரும் பட்டியலின மக்களாக இருப்பதால் சாதிய பாகுபாடுடன் இந்த செயல் செய்திருக்கலாம் என்ற கருத்து நிலவிய நிலையில், குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவை கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் ஒருமித்த கருத்துடன் கோரிக்கை வைத்தனர்.

தமிழக அமைச்சர்கள் ஆய்வு

தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கயல்விழி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் இறையூர் அய்யனார் கோயிலில் சமத்துவப் பொங்கள் வைத்து பொதுவழிபாடு நடத்தினர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த விவகாரத்தை கண்காணிப்பதற்காக சமூக நீதி கண்காணிப்புக் குழுவையும் தமிழக அரசு அமைத்தது.

வேங்கைவயல்
வேங்கைவயல்File Image

சிபிசிஐடி போலீசார் விசாரணை

இந்நிலையில் இந்த அவலமானச் செயலை செய்த குற்றவாளிகளை கண்டறிய முதல் 20 நாட்கள் தமிழக போலீசாரும், அதன் பின்பு கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி முதல் டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான சிபிசிஐடி போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில், வேங்கைவயல், இறையூர், கீழ முத்துக்காடு, காவேரி நகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 221 நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் அவர்களிடம் சாட்சியங்களையும் பெற்றுள்ளனர்.

டிஎன்ஏ பரிசோதனை

இதையடுத்து இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான சாட்சியங்களை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால் அந்தப் பகுதியில் கிராமங்களைச் சேர்ந்த நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று ஐந்து கட்டங்களாக 5 சிறுவர்கள் உட்பட 31 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மாதிரிகளை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேகரித்து அதனை சென்னையில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு நபர் விசாரணை ஆணையம்!

இதனிடையே தேசிய பட்டியலின ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டது. சிபிசிஐடி போலீசாரின் விசாரணையிலும் யாரையும் கைது செய்யாததால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி ஆணையமும் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நேரில் வந்து பல்வேறு துறை அலுலர்களுடன் ஆலோசனை நடத்தியது.

வேங்கைவயல்
வேங்கைவயல்pt desk

ஆடியோவை ஆதாரமாகக் கொண்டு குரல் மாதிரி பரிசோதனை

ஏற்கனவே சம்பவத்தன்று குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மனிதக் கழிவு கலக்கப்பட்ட தண்ணீரின் மாதிரியும் இந்த 31 நபர்களிடம் எடுக்கப்பட்ட டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளும் ஒத்துப் போகும் பட்சத்தில் இந்த வழக்கை விரைந்து முடித்து விடலாம் என சிபிசிஐடி போலீசார் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். அதோடு சம்பவம் நடந்த போது, வாட்ஸ் அப் தலங்களில் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் பேசிய ஆடியோவை ஆதாரமாகக் கொண்டு அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு காவலர் உள்ளிட்ட இரண்டு நபர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனையையும் சிபிசி போலீசார் மேற்கொண்டனர்.

ஒத்துப் போகாத டிஎன்ஏ பரிசோதனை

ஆனால் 31 நபர்களிடம் எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரி பரிசோதனையின் முடிவுகள் வந்த நிலையில், அவை குடிநீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் மாதிரியோடு ஒத்துப் போகவில்லை என்பது சிபிசிஐடி போலீசாருக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். இந்த வழக்கு மற்ற வழக்குகளோடு ஒப்பிட முடியாத அளவிற்கு சிக்கல் வாய்ந்த வழக்கு என்றாலும், அறிவியல் பூர்வமான சாட்சியங்கள் தங்களுக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சிபிசிஐடி போலீசார் அடுத்தடுத்து டிஎன்ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.

அடுத்த கட்டமாக அந்தப் பகுதியை சேர்ந்த சந்தேகப்படும் நபர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

வேங்கைவயல் - மதுரை உயர்நீதிமன்ற கிளை
வேங்கைவயல் - மதுரை உயர்நீதிமன்ற கிளைPT Desk

வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு!

இதற்காக ஏற்கனவே புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்திருந்த சூழலில், எதற்காக இந்த சோதனை, இந்த சோதனையால் 10 நபர்களுக்கு உடல் மற்றும் மனரீதியிலான பாதிப்பு வந்தால் அதற்கு யார் பொறுப்பு. சோதனை எங்கே நடத்தப்படுகிறது என்ற விவரங்களை சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டியிடம் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி கேட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் நீதிபதி முன்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்த டிஎஸ்பி பால்பாண்டி, அறிவியல் பூர்வமான சாட்சியங்களை நிரூபிக்க வேண்டும் என்பதால் இந்த உண்மை கண்டறியும் சோதனையை நடத்த உள்ளதாகவும் இதனால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் இந்த சோதனையை சென்னையில் நடத்த உள்ளதாகவும் இதற்கு சிபிசிஐடி போலீசார் முழு பொறுப்பை எற்றுக் கொள்வதாகவும் நீதிபதி முன்பு உறுதியளித்திருந்தார். அதே போல் பத்து நபர்களிடமும் உண்மை கண்டறியும் சோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள விருப்பமா இல்லையா என்று நீதிபதி ஜெயந்தி கேட்டிருந்தார்.

உண்மை கண்டறியும் சோதனை

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஆஜரான 10 நபர்களும் தங்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள விருப்பமில்லை என்றும், இதனால் தங்களுக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படலாம் எனவும் நீதிபதியிடம் தெரிவித்ததோடு அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களும் உண்மை கண்டறியும் சோதனை என்பது உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ஒரு சோதனை. இதனால் எந்த பயனும் இல்லை. இதற்கு நீதிபதி அனுமதி அளிக்கக் கூடாது எனவும் தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.

வேங்கைவயல்
வேங்கைவயல்pt desk

இதனிடையே 10 பேரில் 9 பேர் தங்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கூடாது என எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், எஞ்சிய ஒரு நபரின் கருத்தையும் எழுத்துப்பூர்வமாக தருமாறு கூறிய நீதிபதி ஜெயந்தி, இந்த வழக்கை வருகின்ற 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். சிபிசிஐடி போலீசார் முக்கிய ஆதாரமாக நினைத்த டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக அவர்கள் உண்மை கண்டறியும் சோதனையை நம்பியுள்ளனர்.

அடுத்தடுத்து ஏற்படும் தடைகள்! சிபிசிஐடி போலீசாருக்கு தொடரும் சிக்கல்!

அதற்கு புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஒருவேளை அனுமதி அளித்தால் இந்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல சிபிசிஐடி போலீசாருக்கு எளிதாக இருக்கும். அதே வேளையில் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்தால், இந்த வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில் சிபிசிஐடி போலீசாருக்கு பெரும் சிக்கல் ஏற்படும். இந்த வழக்கில் நேரடி சாட்சியங்கள் இல்லாததால், அறிவியல் பூர்வமான சாட்சியங்களை நம்பி மட்டுமே சிபிசிஐடி போலீசார் கடந்த எட்டு மாதங்களாக அடுத்தடுத்த முன்னெடுப்புகளை எடுத்து வந்தனர். இதற்கும் தடை ஏற்படும் நிலையில் இந்த வழக்கின் விசாரணையும் பாதிக்கப்படலாம் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

வழக்கறிஞர்கள் சொல்வதென்ன?

பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் தரப்பு வழக்கறிஞர் மலர்மன்னன், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்க சிபிசிஐடி போலீசார் முயல்வதாகவும் இந்த வழக்கின் விசாரணை முறையை சிபிசிஐடி போலீசார் மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மாற்று சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வழக்கறிஞரான சிற்றரசு கூறுகையில்... இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் முதலில் எஸ்சி எஸ்டி வழக்காக பதிவு செய்தது தவறு. குற்றவாளி யார் என்று தெரியாத போது, பட்டியலின சமூக மக்கள் பாதிக்கப்பட்டதால் பிற சமூகத்தை சேர்ந்த மக்களை குற்றவாளியாக கருத முடியாது. குற்றவாளிகளை கண்டறிந்த பின்பு வழக்கின் பிரிவுகளை பதிவு செய்ய வேண்டும். அது மட்டுமின்றி உண்மை கண்டறியும் சோதனைக்கு தங்கள் தரப்பைச் சேர்ந்த மக்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

வேங்கைவயல்
வேங்கைவயல்pt desk

ஓராண்டை கடந்தும் வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரையில் குற்றவாளிகளை நெருங்க கூட முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறும் நிலையில், தற்போது டிஎன்ஏ பரிசோதனையின் முடிவுகளும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. அதேபோல் உண்மை கண்டறியும் சோதனையையும் நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுக்காத பட்சத்தில் சிபிசிஐடி போலீசார் அடுத்ததாக இந்த வழக்கில் என்ன மாதிரியான யுக்திகளை கையாளப் போகிறார்கள் என்பதையும். ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சியங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகளை கண்டறிவார்களா அல்லது விசாரணை முடிவுக்கு வர இன்னும் காலங்கள் நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com