ஸ்டார்ட் அப் இளவரசிகள்- 22: விட்னி வோல்ப் ஹெர்டின்- பெண்களுக்கு அதிகாரம் அளித்த இளம்பெண்!

ஸ்டார்ட் அப் இளவரசிகள்- 22: விட்னி வோல்ப் ஹெர்டின்- பெண்களுக்கு அதிகாரம் அளித்த இளம்பெண்!
ஸ்டார்ட் அப் இளவரசிகள்- 22:  விட்னி வோல்ப் ஹெர்டின்- பெண்களுக்கு அதிகாரம் அளித்த இளம்பெண்!

மீண்டும் கோகிலா படத்தில் வரும் ‘சின்னஞ்சிறு வயதில்…’ பாடல் அதன் இனிமையான இசைக்காக என்றென்றும் கேட்டு ரசிக்க கூடிய பாடல் தான். ஆனால் அந்த பாடல் காட்சியில் ஒரு நெருடல் இருக்கிறது. அது நெருடல் மட்டும் அல்ல, பெரும் பிழை என்பதையும் கூட ஒருவர் உணரலாம். ஸ்டார்ட் அப் உலகின் பெண் சாதனையாளர்களை அறிமுகம் செய்யும் தொடரில், திடீரென திரைப்பட பாடல் ஆராய்ச்சி எதற்கு என நினைக்க வேண்டாம். இப்போது பார்க்க இருக்கும், விட்னி வோல்ப் ஹெர்டின் (Whitney Wolfe Herd) சாதனையை புரிந்து கொள்ள, இந்த பாடலின் பின்னணி தொடர்பான கேள்வி உதவியாக இருக்கும்.

ஏனெனில், காலங்காலமாக சமூகம் பெண்களை நோக்கியும், நடத்தியும் வரும் விதத்தை தன்னால் இயன்ற வகையில் மாற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவர் நடத்தி வரும் பம்பிள் (Bumble) டேட்டிங் சேவை இதன் வெளிப்பாடாகவே அமைகிறது. பெண்கள் முதல் அடியை எடுத்து வைக்க வழி செய்வது இந்த சேவையின் தனித்தன்மை மட்டும் அல்ல, விட்னி வோல்பின் ஆதார நம்பிக்கையும் அது தான்.

பெண் குரல்

தனது புதுமையான டேட்டிங் சேவை மூலம் பெண்களுக்காக மென்குரல் கொடுப்பதோடு, இணையத்தை கொஞ்சம் கணிவான இடமாக்கவும் அவர் முயன்று வருகிறார். அவரை அறிமுகம் செய்யும் ஜிகியூ மேகசைன் கட்டுரை சுட்டிக்காட்டுவது போல, தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பதவியில் இருப்பவர்கள் எல்லாம் தங்கள் மேடை தவறாக பயன்படுத்தப்படுவதை அல்லது பயனர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தும் பொறுப்பை தட்டிக்கழித்து வரும் நிலையில், விட்னி தனது நிறுவன மேடையில் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக்கொள்ளும் அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார்.

விட்னியின் அணுகுமுறை இணையத்தில் எந்த அளவு மாற்றத்தை கொண்டு வரக்கூடும் என்று தெரியவில்லை, ஆனால் இணையத்தின் இப்போதைய நிலையை அப்படியே ஏற்றுக்கொள்வதில் அவருக்கு சம்மதம் இல்லை என்பதையும், அதை மாற்றுவதற்கான முயற்சியில் நாமும் பங்களிக்க வேண்டும் எனும் எண்ணத்தையும் விட்னி வெற்றிக்கதை மூலம் புரிந்து கொள்ளலாம்.

இணையத்தில் தவறாக இருக்கும் விஷயங்களை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்பது தான் விட்னி தனது செயல்பாடுகள் மூலம் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பது. அந்த வகையில் அவர் இணைய உலகை மாற்ற முயல்கிறார் என்றும் சொல்லலாம். இணைய சேவைகளில் பாதுகாப்பு அம்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதும் அவர் சொல்லாமல் சொல்லும் செய்தி தான். இதை பெண்கள் நோக்கில் அவர் செய்து வருகிறார்.

பெண்ணிய பாதை

விட்னியை பொருத்தவரை எல்லாமே பெண்கள் நோக்கில் தான். அதனால் தானே, இணை நிறுவனராக அவர் துவக்கி நடத்தி வரும் பம்பிள் டேட்டிங் செயலி பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்படும் சேவை என வர்ணிக்கப்படுகிறது. அதோடு விட்னி ஆண்களின் உலகில் வெற்றி பெற்றிருக்கும் பெண் மட்டும் அல்ல, தனது வெற்றி மூலம் பெண்ணிய நோக்கை நிலைநாட்டியிருக்கும் முற்போக்காளரும் தான்.

விட்னியின் பெண்ணிய தொழில்முனைவு பயணத்தை தெரிந்து கொள்வதற்கு முன் அவரது வர்த்தக சாதனைகளை சுருக்கமாக பார்த்துவிடலாம். விட்னி, உலகின் மிகவும் இளம் வயது சுய கோடிஸ்வர பெண் எனும் பெருமைக்கு சொந்தக்காரர். அதோடு இளம் வயதில் வர்த்தக நிறுவனம் ஒன்றை பங்குச்சந்தைக்கு கொண்டு சென்ற பெருமைக்கும் சொந்தம் கொண்டாடும் பெண். ( கடந்த வாரம் பார்த்த ஸ்டிச் பிக்ஸ் நிறுவனர் கேத்ரீனா லேக் இதற்கு முன் இந்த அடைமொழிக்கு உரியவராக இருந்தார்)

31 வயதில் கோடீஸ்வர அந்தஸ்து பெற்றார் என்பது விட்னி வோல்ப் பற்றி பரவலாக சொல்லப்படும் அறிமுகம் என்றாலும், இந்த சிறப்பை விட, இதை அவர் பெற்றுவிதமே முக்கியமாக அமைகிறது. ’பராசக்தி’ பட வசனம் போல, இந்த பயணத்தில் அவர் கடந்து வந்த காட்டாறுகள் அதிகம் தான். உண்மையில் வாழ்க்கையில் அவர் சந்தித்த சோதனைகளே தொழில் வாழ்க்கையில் அவரது செயல்பாடுகளுக்கு உந்துசக்தியாக அமைந்திருக்கின்றன.

பதிலடி சேவை

அவரது பம்பிள் டேட்டிங் செயலியே ஒரு பதிலடி சேவை தான். ஆனால், சிலிக்கான வேலியில் ஆயிரம் முறைக்கு மேல் அலுக்க சலிக்க சொல்லப்பட்டு விட்டது போல, பழிக்குப்பழி வாங்குவதோ, தன்னை நிருபித்துக்காட்டுவதோ அல்ல அதன் மையக்கருத்து. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வாய் பேசாமல் ஏற்றுக்கொள்ளாமலும், அழுது புலம்பாலும், எதிர்நீச்சல் போட்டு சாதித்துக்காட்டி பெண்களுக்கு மதிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் பம்பிள் அமைகிறது.

பம்பிள் செயலி என்றதுமே முதலில் சொல்லப்படுவது, பெண்களுக்கு முக்கித்துவம் அளிக்கும் தன்மை தான். இணைய உலகில் எண்ணற்ற டேட்டிங் சேவைகள் இருந்தாலும், டேட்டிங்கிற்கான அழைப்பை முதலில் மேற்கொள்ளும் வாய்ப்பை பெண்களிடம் வழங்கிய முதல் செயலி பம்பிள் தான்.

இதை தான் பெண்கள் முதல் அடியை எடுத்து வைப்பது என்கிறது பம்பிள். டேட்டிங் செயலிகள் செயல்படும் விதத்தை அறிந்தவர்கள், இது ஏன் சிறப்பானது என்பதை புரிந்து கொள்ளலாம். இணையத்தின் முதல் டேட்டிங் சேவைகளில் ஒன்றான மேட்ச்.காம் துவங்கி, டேட்டிங் செயலயை இப்படியும், அப்படியும் தள்ளிவிடும் சுவாரஸ்யமான செயலாக்கிய நவீன\ செயலியான டின்டர் (Tinder ) வரை எல்லா டேட்டிங் செயலிகளும் அடிப்படையில், பொருத்தமான ஆண்களையும், பெண்களையும் இணைத்து வைக்க உதவி செய்கின்றன.

ஆனால், இந்த பொருத்தம் பார்த்தல் அல்கோரிதம்களால் வழிநடத்தப்படும் வகையில் முன்னேறியிருந்தாலும், எப்போதும் ஆண்களே அழைப்பு விடுக்கும் வகையில் டேட்டிங் செயலிகள் அமைந்திருப்பதில் எந்த மாற்றமும் இல்லை. டேட்டிங் செயலி என்றில்லை பொதுவாக சமூகத்திலும் ஆண் அழைப்பிற்கு பெண் காத்திருக்கும் நிலை தானே இயல்பாக கொள்ளப்படுகிறது. ( இந்த இடத்தில், மீண்டும் கோகிலா பாடல் காட்சி தொடர்பை அடிக்குறிப்பில் வாசிக்கவும்).

மாற்றத்தின் பாதை

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் டேட்டிங் செயல்முறையில் பெண்கள் ஓடி ஒளியும் நிலையே இருக்கிறது. அல்லது பதற்றத்துடன், பயந்து கொண்டே துணை தேட வேண்டியிருக்கிறது. இந்த பயணத்தில் அவர்கள் மோசமான அனுபவங்களை எதிர்கொள்வதும் வாடிக்கையாக இருக்கிறது. அத்துமீறலில் துவங்கி, சீண்டி விடுதல், ஆபாச வார்த்தைகள் அல்லது அரை நிர்வாண படங்களை பெறுவது என பலவிதமான சோதனைகளை பெண்கள் டேட்டிங் செயலிகளில் எதிர்கொள்ளலாம்.

அதற்காக, டேட்டிங் செயலிகள் மோசமானவை என்று அர்த்தம் இல்லை. டேட்டிங் செயலிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் முறையை, ஆதிக்க உணர்வு கொண்ட ஆண்கள் தவறாக பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதே விஷயம். இதை ஏற்காமல் வாதிடலாம். ஆனால், டேட்டிங் செயலிகள் என்றில்லை, பொதுவாகவே இணையத்தில் பெண்கள் பாதுகாப்பற்று உணரும் நிலை இருக்கிறது என்பது தானே வேதனையான யதார்த்தம்.

இந்த பின்னணியில் தான், பம்பிள், டேட்டிங்கிற்கான அழைப்பு விடுக்கும் அதிகாரத்தை பெண்களிடம் வழங்கும் மேடையாக அறிமுகமானது. மற்ற டேட்டிங் செயலிகள் போலவே, பம்பிள் செயலியிலும் ஆண்களும் பெண்களும் தங்களுக்கான அறிமுக பக்கத்தை அமைத்துக்கொண்டு பொருத்தமான துணை பரிந்துரையை எதிர்பார்க்கலாம் என்றாலும், இந்த மேடையில் பெண்கள் பாதுகாப்பாக உணரலாம். ஏனெனில், உரையாடலை மேற்கொள்ளலாம் என முதலில் அழைப்பு விடுக்கும் உரிமை அவர்களுக்கு தான் இருக்கிறது. உள்நோக்கம் மிக்க அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர்கள் திண்டாட வேண்டிய அவசியம் இல்லை.

இளமைக்காலம்…

பெண்களை மையமாக கொண்ட இந்த டேட்டிங் சேவையை விட்னி உருவாக்கியதற்கான காரணம் தனிவாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவமே மூலக்காரணம். ஆம், டேட்டிங் வெற்றிக்கதையான டின்டர் செயலியை உருவாக்கிய நிறுவனர் குழுவில் அவரும் முக்கிய அங்கத்தினராக இருந்தார். ஆனால், நிறுவனத்தில் அவரது இடம் அங்கீகரிகப்படாமல் அலட்சியம் செய்யப்பட்டதோடு, காதலரான இணை நிறுவனரால் தவறாக நடத்தப்பட்டு அவமானத்திற்கு உள்ளாகவும் செய்தார். இதனால் வெகுண்டெழுத்து அவர் உருவாக்கிய சேவை தான் பெண்களுக்கான பம்பிள் டேட்டிங் செயலி.

அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் பிறந்து வளர்ந்த விட்னி, டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகளில் பட்டம் பெற்ற பிறகு, தொழில்நுட்ப உலகில் பணியாற்ற விரும்பினார். இதனிடையே தெற்காசிய பயணம் ஒன்றில், பெரும்பாலானவர்கள் செல்போனை பயன்படுத்தும் விதத்தைப்பார்த்த போது, தொழில்நுட்பம் சார்ந்து ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. இந்த எண்ணத்துடன், ஹாட்ச் லேப்ஸ் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணியாற்றினார்.

இங்கிருந்த ஒரு குழுவினர், கார்டிபை எனும் செயலியை உருவாக்கியிருந்தனர். இணைய சலுகளை அளிக்கும் கார்டுகளை ஸ்வைப் செய்து தேர்வு செய்யும் வகையில் இது அமைந்திருந்தது. இந்த எண்ணத்தை அடிப்படையாக கொண்டு, டேட்டிங் செயலியை இக்குழு உருவாக்க விரும்பியது. வழக்கமான டேட்டிங் தளங்கள் போல அல்லாமல், உறுப்பினர்கள் அறிமுகத்தை பார்த்ததும், பிடித்திருந்தால் இந்த பக்கம் ஸ்வைப் செய்யலாம், பிடிக்காவிட்டால், எதிர்பக்கமாக ஸ்வைப் செய்து அடுத்த அறிமுகத்தை பார்க்கும் வகையில் இந்த செயலி அமைந்திருந்தது. இப்படி தான் 2012 ல் டின்டர் டேட்டிங் செயலி அறிமுகமானது.

டேட்டிங் படலத்தை ஒரு கேமிற்கான சுவார்ஸ்யம் கொண்டதாக மாற்றிய இந்த தள்ளிவிடும் ( ஸ்வைப்) வசதியே டின்டர் செயலியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தாலும், இந்த வெற்றியில் விட்னியும் முக்கிய பங்காற்றினார். இணை நிறுவனர்களில் ஒருவரான விட்னி, மார்க்கெட்டிங்கிற்கு பொறுப்பேற்றுக்கொண்டு டிண்டர் செயலியை அமெரிக்க கல்லூரி வளாகங்களுக்கு கொண்டு சென்றார். அவர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளே இளம் பயனாளிகள் மத்தியில் டிண்டர் செயலியை பிரபலமாக்கி, அது ஒரு பிராண்டாக வலுப்பெற அடித்தளமாக அமைந்தது.

காதல் கசந்தது

இதனிடையே இணை நிறுவனர்களில் ஒருவரான ஜஸ்டீன் மாட்டினை (Justin Mateen) அவர் டேட்டிங் செய்யத்துவங்கினார். இந்த அனுபவமே கசப்பானதாக மாறி நிறுவனத்தில் இருந்து அவர் வெளியேற காரணமானது. விட்னி கூற்றுப்படி, மாட்டீன் அவரிடம் மோசமான காதலராக அவதூறாக நடந்து கொண்டார். அதோடு, நிறுவனத்தில் அவரது பங்களை அங்கீகரிக்க மறுத்தனர். இயக்குனர் குழு கூட்டங்களில் நிறுவனர்கள், அதை ஏதோ ஆண்கள் சங்கம் போல நடத்தியதாக விட்னி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். நிறுவன வெற்றியால் கோடிகள் புரளும் நிலையில், வர்த்தக அந்தஸது தலைக்கேற தாங்கள் ஏதோ எல்லாம் வல்ல பையன்கள் போல நடந்து கொண்டவர்கள், தன்னை நிறுவனராக கருதாமல் சிறு பெண் போல நடத்தியதாக அவர் மனம் வெதும்பி கூறியிருக்கிறார்.

இதனால் வெறுத்துப்போய் வெளியேறியவர், பாலியல் சீண்டல், வர்த்தக துரோகம் ஆகிய அம்சங்களை மையமாக கொண்டு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துக்கொள்ளப்பட்டாலும், சிலிக்கான் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அத்துமீறும் ஆண்களுக்கு எதிராக பெண்கள் துணிந்து அடையாளம் காட்டத்துவங்கிய மீடு இயக்கம் அமெரிக்காவில் வலுப்பெற்ற சூழலில், விட்னியின் வழக்கும், போராட்டமும் தீவிரமாக அலசப்பட்டது.

ஸ்டார்ட் அப் உலகில், இணை நிறுவனர்கள் புறக்கணிக்கப்படுவதோ, ஏமாற்றப்படுவதாக உணர்வதோ புதிதல்ல. ஆனால், விட்னி விஷயத்தில் நிறுவனர்கள் மோதலில், பெண்கள் மீதான ஒடுக்கு முறையும் சேர்ந்திருந்தது. விட்னி, டிண்டர் நிறுவர்களை மட்டும் அல்ல, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையையும் எதிர்த்து போராட விரும்பினார். இந்த வேட்கையோடு புதிய செயலி ஒன்றை துவக்க விரும்பினார். புதுயுகத்திற்கான இன்ஸ்டாகிராமாக அது இருக்க வேண்டும் என விரும்பினார்.

அநீதிக்கு எதிராக

புது யுக இன்ஸ்டாகிராம் எனும் போது, அவதூறான கருத்துக்களை வெளியிட அனுமதிக்காமல், நேர்நிறையான கருத்துக்களை மட்டுமே அனுமதிக்கும் ஒரு சேவையாக அது அமைய வேண்டும் என நினைத்தார். பெரும்பாலான இணைய மேடைகளில், அவதூறுகளும், சீண்டல்களும் இயல்லாகி விட்ட நிலையில், இணையத்தை கொஞ்சம் கருணை மிக்க இடமாக மாற்ற விரும்பும் எண்ணத்துடன் நல்லவிதமான பகிர்வுகளை மட்டுமே ஊக்குவிக்கும் ஒரு சேவையை துவக்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தார்.

ஆன்லையின் பயனாளிகளின் பொறுப்பான தன்மையை ஊக்குவிக்கும் ஒன்றை துவக்க விரும்பினேன்’ என்று அவர் இது பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மேலும், தான் துவக்க விரும்பும் சேவை டேட்டிங் சேவையாக இருக்க கூடாது என்றும் தீர்மானித்திருந்தார். இந்த நிலையில் தான், அவரை சந்தித்த இணைய தொழில்முனைவோரான ஆண்ட்ரி ஆண்ட்ரீவ், மீண்டும் டேட்டிங் பக்கம் வாருங்கள் என அவருக்கு அழைப்பு விடுத்தார்.

பெண்ணுக்கு நீதி

விட்னி மனம் மாறி இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாலும், டேட்டிங் சேவையை துவக்கினாலும் அது பெண்களை மையம் கொண்டதாக, பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என உறுதியாக இருந்தார். இதன் பயனாகவே பெண்கள் முதல் அடியை எடுத்து வைக்க விரும்பும் பம்பிள் சேவை உருவானது.

பம்பிள் சேவையை அறிமுகம் செய்த போது, விட்னி தனது மாக்கெட்டிங் நிபுணத்துவத்தை முழு விச்சில் செயல்படுத்தினார். ஒரு இணைய சேவையை அல்ல, ஒரு பிராண்டை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். பம்பிள் சேவை முழு அளவில் தயாராகாத நிலையிலேயே, அதற்கான விளம்பர முயற்சிகளை மேற்கொண்டு விழிப்புணர்வை உண்டாக்கினார். பம்பிள் ஒரு வாழ்வியல் பிராண்ட் என்பதை நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் மத்தியிலும் பயனாளிகள் மத்தியிலும் ஆழ பதிய வைத்தார்.

பம்பிள் சேவையின் தொழில்நுட்ப அம்சங்களும் இந்த பார்வைக்கு ஏற்ப அமையவே இந்த செயலி பெரும் வெற்றி பெற்றது. அது தரும் பாதுகாப்பிற்காக பெண்கள் விரும்பி பயன்படுத்தினர் என்றா, தங்கள் பெண்ணிய ஏற்பை வெளிப்படுத்த விரும்பிய ஆண்களும் இந்த செயலியை ஆதரித்தனர். பம்பிள் வெற்றிக்கதை, டிண்டர் வெற்றியில் தனது மார்க்கெட்டிங் முயற்சி அங்கீகரிக்கப்படவில்லை என அவர் மனம் வெதும்பியதற்கான ஆறுதலாக அமைந்ததோடு, அவர் யார் என்பதையும் உலகிற்கு உணர்த்தியது.

இந்த வெற்றியின் முக்கிய அம்சமாக, தனது 31 வது வயதில் பம்பிள் நிறுவனத்தை பங்குச்சதையில் அறிமுகம் செய்து கோடிஸ்வர தொழில்முனைவோர் அந்தஸ்தை பெற்று உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தார். பம்பிள் பங்குகள் அறிமுக விழா மேடையில், அவரது கணவர் தங்களது ஒரு வயது குழந்தையை விட்னி கைகளில் கொடுத்ததும், குழந்தையோடு தாயாக அவர் வெற்றி புன்னகையோடு காட்சி அளித்ததும் புது யுக காட்சி தான்.

(மீண்டும் கோகிலா படத்தில் சின்னஞ்ன்சிறு வயதில் பாடல் காட்சி, நாயகன் கமல் பெண் பார்க்க வரும் போது, நாயகி பாடுவது போல் அமைந்திருக்கும். பெண் பார்க்கும் படலத்தை இயல்பாக ஏற்றுக்கொண்டால் இந்த காட்சியும் இயல்பாக தோன்றும். ஆனால், பெண் பார்க்க ஆண் தான் வரவேண்டுமா? ஏன் ஆண் பார்க்கும் படலம் இல்லை என்பது போன்ற கேள்விகளை கேட்டுக்கொள்ளத்துவங்கினால், இந்த காட்சியின் பின்னே இருக்கும் ஆணாதிக்க உணர்வு புரியும். இது போல சமூகத்தில் நிறைந்திருக்கும் ஆணுக்கு பெண் காத்திருக்கும் செயல்முறைகளை மனதில் கொள்ளும் போது விட்னியின் இணைய பயணத்தை புதிய வெளிச்சத்தில் புரிந்து கொள்ளலாம். அவரே சொல்வது போல இதை எல்லாம் மாற்ற வேண்டும் என எழுதி வைத்துக்கொண்டு செயல்படாவிட்டாலும், சிறு வயது முதல் மனதில் பதிந்த சித்திரங்கள் தன்னை பெண்கள் சார்பாக செயல்பட வைத்தது)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com