கோடைக்காலம்... தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படி?
கோடைக்காலம் ஆரம்பித்து தண்ணீர் தட்டுப்பாடும் வந்துவிட்டது. தெருக்கள் தோறும் தண்ணீருக்காக கடும் சண்டையே நடக்கிறது. ஒரு குடம் தண்ணீருக்காக ஒரு மைல் தூரம் நடக்கும் அளவிற்கு கூட மோசமான நிலைமை கிராமத்தில் இருக்கிறது. ஆனால் கிடைக்கின்ற நீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற குறைந்தபட்ச விழிப்புணர்வு கூட நம்மில் பலருக்கும் இல்லை. அன்றாட வாழ்க்கையில் நாம் என்னென்ன முறைகளை கடைபிடித்தால் ஓரளவிற்கு நீரை சேமிக்க முடியும் என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.
* ஒழுகும் குழாய்கள், டாய்லெட் கசிவுகளை உடனடியாகப் பழுது பார்க்கலாம்.
* வாஷ் பேசினில் தண்ணீரைத் திறந்துவிட்டுக்கொண்டே பல் துலக்குவது, முகம் கழுவுவதற்குப் பதிலாக, தேவையான தண்ணீரை மட்டும் எடுத்துப் பயன்படுத்தலாம்.
* ஷவரில் குளிப்பதைவிட பக்கெட்டில் தண்ணீரைப் பிடித்துக் குளிக்கலாம்.
* காலை கடன்களை சிக்கன நீரால் முடிக்கலாம். துணி அலம்பிய நீரால் குளியல் அறையை சுத்தப்படுத்தலாம். பாத்திரம் கழுவியநீரினை மரம் செடி கொடிகளுக்கு பயன்படுத்தலாம். . கீழ் மற்றும் மேல் நிலை தொட்டிகளை கவனமுடன் கையாளலாம். சுழற்சிக்கு பயன் படா நீரினை மழை நீர் சேமிப்பு துளையினுள் செலுத்தலாம். சிறு துளைகளிட்ட பாட்டில்களை பயன்படுத்தி வீட்டு செடி கொடிகளை சொட்டு நீர் விட்டு வளர்க்கலாம். வழிகள் ஆயிரம்.
*தண்ணீர் மட்டம் உயர மழை நீர் சேகரிப்பு மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் . மேலும் கழிவு நீர் மேலாண்மை ஒருவொரு வீட்டிற்கும் அவசியம் . இதை அனைவரும் கடைபிடித்தால் நாம் நீர் மேலாண்மையில் தன்னிறைவை அடையலாம்.
*தண்ணீர் சிக்கனம் பற்றிய சிறு குறிப்புகளை குழாய்க்கு அருகில் ஒட்டிவைப்பது பயன் அளிக்கும், குழந்தைகளுக்கு பெரியவர்கள் தண்ணீர் சிக்கனத்தை செயல்முறை விளக்கத்துடன் புரியவைப்பது சிறந்த பலன் அளிக்கும்
இவ்வாறு ஒவ்வொரு நாளும் நாம் சிறுக சிறுக தண்ணீரை சேமிக்கும் போது அதன் தட்டுப்பாட்டை குறைக்கலாம். நிம்மதியான வாழ்விற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்று. தண்ணீரை சேமிப்போம். வருங்கால சந்ததியினரை காப்போம்.