பட்டாசு வெடிக்கையில் கண்களை பாதுகாப்பது எப்படி? மருத்துவர் பரிந்துரைக்கும் முதலுதவி ஆலோசனை

பட்டாசு வெடிக்கையில் கண்களை பாதுகாப்பது எப்படி? மருத்துவர் பரிந்துரைக்கும் முதலுதவி ஆலோசனை
பட்டாசு வெடிக்கையில் கண்களை பாதுகாப்பது எப்படி? மருத்துவர் பரிந்துரைக்கும் முதலுதவி ஆலோசனை

தீபாவளி நெருங்குவதால் பட்டாகளால் ஏற்படக்கூடிய கண் காயங்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள், ஒருவேளை கண்ணில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நாம் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்து அனைவருமே தெரிந்து வைத்துக்கொள்வது அவசியப்படுகிறது.

சென்னை அகர்வால் கண் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் மருத்துவர் சுமதி, “ஒவ்வொரு தீபாவளி திருவிழா காலத்தின்போதும் பட்டாசுகள், வெடிகள் / வாணவேடிக்கைகள் ஆகியவற்றினால் 8 நபர்கள் உயிரிழக்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு தீக்காயங்கள், கண்களில் காயங்கள் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் விபத்து நிகழ்வுகளில் கைகளுக்கு அடுத்து, இரண்டாவதாக மிகப்பொதுவாக காயமடையும் பகுதி கண்கள்தான். இதனால் ஏற்படும் கண் காயங்களினால், கண்களில் லேசான எரிச்சல்களிலிருந்து, மீண்டும் சரிசெய்யமுடியாத பார்வைத்திறன் சேதம் வரை அல்லது நிரந்தரமாக பார்வைத்திறன் இழப்பு வரை ஏற்படக்கூடும். ஆகவே, பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட சாத்தியமுள்ள ஆபத்துகள், கண் காயங்களின் வகைகள், கண் காயங்கள் ஏற்படும்போது செய்யப்பட வேண்டிய முதலுதவி வழிமுறைகள் பற்றி பொதுமக்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது” என்கிறார்.

தொடர்ந்து அவரேவும், முதலுதுவி மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

யாருக்கெல்லாம் ஏற்படுகிறது பட்டாசு காரணமாக ஏற்படும் கண் பாதிப்புகள்? “பட்டாசு மற்றும் வெடி காரணமாக ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுள் சுமார் 50% நபர்கள் அருகிலிருப்பவர்கள் மற்றும் அந்த இடத்தைக் கடந்து செல்பவர்கள்தான். இப்படி பட்டாசால் பாதிக்கப்படுவோருக்கு கண் இமைகள், கண்கள் மற்றும் மற்றும் கண்களுக்குப் பின்னாலுள்ள மெல்லிய எலும்புகள் அதிகம் சேதப்படுகிறது. வெடிக்கப்படும் பட்டாசுகள்தான் இவற்றை சேதப்படுத்தக்கூடும்.

பொதுவாக கண்களில் இப்படி சேதம் ஏற்படுகையில், அது ‘திறந்தநிலை கோள காயங்கள்’ மற்றும் ‘மூடப்பட்டுள்ள கோள காயங்கள்’ என இருவகையாக வகைப்படுத்தப்படுகின்றன. இதில் திறந்தநிலை கோள காயங்கள் என்பது, பட்டாசின் வெடிப்புத்துகள்கள் ஏற்படுத்தும் கண்ணுக்குள்ளான காயங்கள் - பட்டாசு ஊடுருவதால் ஏற்படும் காயங்கள் போன்றவற்றை உள்ளடக்கும். இதேபோல மூடப்பட்ட கோள காயங்கள் என்பவை, கண் சுவர்களில் கிழிசல் இல்லாமல், கண்களுக்கு ஏற்படும் சேதங்களை குறிக்கும்.

பட்டாசுகள் எப்படி கண்ணை பாதிக்கிறது? வெடிகள், பட்டாசுகள் ஆகியவற்றின் திசைவேகம் மற்றும் அவற்றிலிருந்து தெறிக்கும் துகள்கள்தான் கண்களை மோதுகின்றபோது பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அத்துடன், பட்டாசுகளில் வைக்கப்படுகின்ற வெடிமருந்தில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதால், கண்களில் ரசாயன மற்றும் வெப்பநிலை சார்ந்த தீக்காயங்களை அவைகள் ஏற்படுத்தக்கூடும். பட்டாசுகளின் துகள்கள் கண்களில் புகுந்து மாட்டிக்கொள்ளும்போது அந்நியப்பொருட்களினால் கண்கூட்டுக்குள் சேதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. பட்டாசிலிருந்து வெளிவரும் புகையினால் கண்களில் எரிச்சலும் மற்றும் கண்களிலிருந்து நீர் வடிதலும் ஏற்படுகிறது.

பட்டாசினால் கண் பாதிப்பு ஏற்படுகையில் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது?

“ஒருவருக்கு கண்களில் காயம் ஏற்படும்போது, அவர் ஒருபோதும் கண் கோளங்களை தேய்க்க / கசக்கக்கூடாது. ஏனெனில், அது ரத்தக்கசிவை அதிகரிக்கும் அல்லது காயத்தை இன்னும் மோசமாக்கிவிடும். கண்களுக்கு ஒத்தடம் போன்ற அழுத்தத்தையும் தரக்கூடாது. கண்களை தேய்ப்பதை விட தண்ணீர் ஊற்றி கண்களை அலசுவது இன்னும் அதிக ஆபத்தானது என்பதால், அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கண்களில் சிக்கியுள்ள எந்தவொரு துகள்களையும் அகற்ற ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது. தூய்மையான நீரில் கண்களை மூழ்கச் செய்வது அல்லது தொடர்ச்சியாக தண்ணீர் மூலம் கழுவுவதே சிறந்த முதலுதவியாக இருக்கும். கண்களை பரிசோதிப்பதை மருத்துவர்களுக்கு சிரமமாக ஆக்கிவிடும் என்பதால், கண் சொட்டு மருந்துகள் அல்லது ஆயின்மென்ட்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். OTC மருந்துகள் மற்றும் வலிநிவாரணி மருந்துகளையும் பாதிக்கப்பட்டவர்கள் எடுக்கக்கூடாது. காயங்களுக்கு சிகிச்சை பெற கண் மருத்துவர்களை நேரில் சென்று சந்திப்பதை அவர்கள் ஒருபோதும் தாமதிக்கக்கூடாது.

ஏறக்குறைய அனைத்து வெடிகள், பட்டாசுகளுமே ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்றபோதிலும் ராக்கெட்டுகள், வெடிகுண்டுகள் மற்றும் பறந்துசென்று வெடிக்கக்கூடிய வேறு பட்டாசுகள் ஆகியவையே பெரும்பாலான கண் காயங்களுக்கு காரணமாக இருக்கின்றன. புஸ்வாணம் மற்றும் வெடிக்கின்ற பட்டாசுகளில் வெடித்ததற்குப் பிறகு அதிக வேகத்தில் பயணிக்கக்கூடிய எண்ணற்ற சிறு துகள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த துகள்களே, கண் கட்டமைப்பிற்கு உடல்சார்ந்த அல்லது இயக்கம் சார்ந்த சேதத்தை விளைவிக்கின்றன. மேலும் விழித்திரை சார்ந்த சிக்கல்களுக்கும் இவை வழிவகுக்கும். கம்பி மத்தாப்புகள், கையில் பிடித்து வெடிக்கும் பட்டாசுகள் பார்ப்பதற்கு தீங்கற்றவையாக தோன்றக்கூடும். ஆனால், தங்கம் அல்லது கண்ணாடியை உருக்கத் தேவைப்படும் அளவிற்கு 1800 டிகிரி ஃபாரன்ஹீட் வரையிலான வெப்பநிலையில் அவைகள் எரிகின்றன. ஆகவே, சருமத்தின் இரண்டு முழு அடுக்குகளை அழிக்கிறவாறு மூன்றாம்நிலை தீக்காயங்களை விளைவிக்கும் சாத்தியத்திறன் இவைகளுக்கு இருக்கின்றன. ஆகவே எந்தவொரு வெடிப்பொருளாக, பட்டாசாக இருந்தாலும் அதை மிகவும் கவனத்துடன் அனைவரும் உபயோகிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

குழந்தைகள் பட்டாசு உபயோகிக்கையில், பெரியவர்களது மேற்பார்வையின் கீழ் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பெரியவர்களிலும்கூட பட்டாசுகள் மற்றும் பிற வெடிகளை கையாளும் நபர்கள், கண்களை பாதுகாக்கின்ற கண்ணாடிகளை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் மற்றும் குறைந்தது 3 அடி தூரத்தில் பட்டாசுகளை கொளுத்த வேண்டும். அதை வேடிக்கை பார்க்கும் நபர்கள் யாராக இருப்பினும் குறைந்தது 5 மீட்டர்கள் இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். கான்டாக்ட் லென்ஸ்கள் வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடும் என்பதால், பட்டாசுகளை வெடிக்கும்போது அவைகளை அகற்றிவிடுவதும், வழக்கமான கண் கண்ணாடிகளைப் பயன்படுத்துவதும் நல்லது” என்றார்.

மருத்துவரின் இந்த அறிவுறுத்தலுடன் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவோமாக!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com