‘கோவிட் பாதித்த கர்ப்பிணிகளுக்கு குறைபிரசவ அபாயத்தை தடுப்பது எப்படி?’- மருத்துவர் அறிவுரை

‘கோவிட் பாதித்த கர்ப்பிணிகளுக்கு குறைபிரசவ அபாயத்தை தடுப்பது எப்படி?’- மருத்துவர் அறிவுரை
‘கோவிட் பாதித்த கர்ப்பிணிகளுக்கு குறைபிரசவ அபாயத்தை தடுப்பது எப்படி?’- மருத்துவர் அறிவுரை

கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்று உறுதியாகும் தாய்மார்களுக்கு, 60% முன்கூட்டியே பிரசவ வலி ஏற்பட்டு, குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது என சமீபத்திய ஆய்வொன்று கூறியுள்ளது. அமெரிக்காவை செய்த ஒரு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. ஆய்வில் ஆசியாவை சேர்ந்த பெண்களும், அமெரிக்க வாழ் இந்தியப் பெண்களுமே அதிகளவில் இச்சிக்கலுக்கு உள்ளாவது தெரியவந்துள்ளது.

லேன்செட் ரீஜினல் ஹெல்த் என்ற இதழில் வெளிவந்திருக்கும் இந்த ஆய்வு முடிவில், ஜூலை 2020 முதல் ஜனவரி 2021 வரை பிறந்த 2,40,000 குழந்தைகளின் மருத்துவ வரலாறு எடுத்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 9,000 கர்ப்பிணிகள் தொற்றுக்கு உள்ளானதாகவும், சிலருக்கு மிக மிக விரைவாகவே (32 வாரங்களுக்கு முன்னராகவே) குழந்தை பிறந்துவிட்டது எனக் கூறப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உறுதிசெய்யப்படும் கர்ப்பிணிகளுக்கும், உடல்பருமனுடன் இருக்கும் கர்ப்பிணிகளுக்கும் குறைபிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வில் சொல்லப்படுகிறது.

இந்த ஆய்வு முடிவுகள் யாவும், கர்ப்பிணிகளிடையே அச்சத்தை உருவாக்கும் சூழல் உள்ளது என்பதால், இதற்கான தீர்வாக என்னவாக இருக்கும் என்பது குறித்து மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் காவ்யா கிருஷ்ணகுமாரிடம் பேசினோம்.

“கர்ப்ப காலத்தில் கொரோனா வராமல் தற்காத்துக் கொள்வது மிகமிக முக்கியம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதேசமயம், ஒருவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அதை பயமின்றி எதிர்கொள்வதும் அவசியம். இந்த ஆய்வின் நோக்கமும் கூட, கர்ப்பிணிகளிடையே தடுப்பூசிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதானே தவிர, வேறேதும் இல்லை. இந்த ஆய்வின் முடிவில்கூட ஆய்வாளர்கள், கர்ப்பிணிகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். அதையே நானும் முன்மொழிகிறேன்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களுக்கு, கொரோனாவுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதாலேயே இதைக் கூறுகிறேன் என்றபோதிலும், உங்களுக்கும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அச்சம் தேவையில்லை. இப்படியானவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை, ‘முன்னெச்சரிக்கையாக இருங்கள்... ஒருவேளை தொற்று ஏற்பட்டாலும் பயப்படாதீர்கள்’ என்பதுதான். தடுப்பூசி எடுத்திருப்பதால், தொற்று ஏற்பட்டாலும் மிகவும் குறைவான பாதிப்பாகவே அது இருக்கும். அதனால் மருத்துவமனையில் அனுமதி பெறாமலேயே, வீட்டிலிருந்து ஓய்வெடுத்தபடியேகூட சரியாகிவிடலாம். ஆகவே, பயமே வேண்டாம். என்னைக்கேட்டால், இனிவரும் காலத்தில் குழந்தைக்கு திட்டமிடும்போதே தம்பதியினர் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு, பின் திட்டமிடுவதே சரியாக இருக்கும்.

அதேபோல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில கர்ப்பிணிகள், ‘அதுதான் தடுப்பூசி செலுத்தியுள்ளோமே, நாம் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியதில்லை’ என நினைப்பதை பார்க்கமுடிகிறது. அனைவரும் கட்டாயம் முறையாக மாஸ்க் அணிய வேண்டும். வெளியிடங்களுக்கு செல்வதை கட்டாயம் தவிர்க்கவும். வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகள் வைத்தாலும்கூட, அதிகப்படியான நபர்கள் கூடாதபடி பார்த்துக்கொள்ளவும். ஏனெனில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாதவாறு பாத்துக்கொள்வதுதான் பிரச்னையை தடுப்பதற்கான முழுமையான தீர்வு. ‘தொற்று ஏற்பட்டால்’ என்பது பிரச்னை எதிர்கொள்வதற்கான வழிதான். என் அறிவுரையெல்லாம், பிரச்னையை தடுக்க முற்படுங்கள். அதையும்தாண்டி, பிரச்னை வந்துவிட்டால், அடுத்தது என்ன என்பதையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

இதுவரை தடுப்பூசி செலுத்தவில்லை என்பவர்கள், இப்போதே செலுத்திக்கொள்ளவும். கர்ப்ப காலத்தில் 6 - 7 வது மாதங்களில் இருக்கும் சிலர், ‘குழந்தைப் பிறப்புக்குப்பின் தடுப்பூசி எடுக்கலாம்’ என நினைப்பதுண்டு. அது தவறு. இவர்களின் தயக்கத்தின் பின்னணியில், ‘இப்போது முதல் டோஸ் எடுத்துக்கொண்டால், இரண்டாவது டோஸ் எடுக்கும்போது குழந்தை அப்போதுதான் பிறந்திருக்கும். குழந்தை பிறந்த நேரத்தில், தடுப்பூசி டோஸ் போடுவது உகந்ததாக இருக்குமா - தாய்ப்பால் தர இயலுமா - அந்நேரத்தில் காய்ச்சலோ அல்லது வேறு ஏதேனும் பக்கவிளைவோ ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது’ என்பவையாகத்தான் இருக்கிறது. இதை அறிவியல்ரீதியாக அணுக வேண்டும். குழந்தை பிறப்பின்போது தடுப்பூசி எடுப்பதால் நிச்சயம் தாய்ப்பால் தருவதிலோ வேறு எதிலுமோ சிக்கல் இருக்காது என்கிறது அறிவியல். அதேநேரம் பக்கவிளைவுகள் ஏற்படுவதை தடுக்க இயலாது என்பதும் உண்மை. ஆனால், அது நிச்சயம் ஆபத்தான பக்கவிளைவாக இருக்காது. ஓரிரு நாளில் சரியாகிவிடும் லேசான பாதிப்பாகவே இருக்கும். அதற்கு மருத்துவர்கள் உரிய தீர்வை வழங்குவர். ஆகவே இப்படியான அச்சத்தை தவிர்க்கவும். இப்படியான தயக்கம் இருப்பவர்கள், ‘ஒருவேளை பிரசவ நேரத்தில் தொற்று உறுதியானால், என்ன செய்வோம்?’ என்பதை யோசித்து இப்போதே முன்னெச்சரிக்கையாக செயல்படவும்.

ஏற்கெனவே தொற்றிலிருந்து மீண்டிருக்கும் கர்ப்பிணி என்றால், தொற்றிலிருந்து மீண்ட குறிப்பிட்ட வாரங்களுக்குப் பின் அவர்களும் தடுப்பூசி எடுத்து தங்களை தற்காத்து கொள்வது அவசியம். உங்களுக்குத் தேவையான வைட்டமின்கள், இரும்புச்சத்துகள் அடங்கிய மருந்து மாத்திரைகளை மருத்துவர் வழிமுறையுடன் தவிர்க்காமல் உட்கொள்ளவும்.

தடுப்பூசி எடுக்கும் கர்ப்பிணிகள், முதல் 3 மாத கர்ப்பகாலத்தில் இல்லாமல், அதற்கு முன்னரோ பின்னரோ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் நல்லது. முதல் 3 மாதத்தில் குழந்தையின் உடல் வளர்ச்சிகள் நிறைவடைந்துவிடும் என்பதால் இந்தப் பரிந்துரை. ஒருவேளை அதற்கு முன்னரே தடுப்பூசி எடுக்கவேண்டுமென்றாலும்கூட, தங்களின் தனிப்பட்ட மருத்துவரிடம் ஒப்புதல் பெற்றபிறகு அதை செய்யவும்.

இப்படி தடுப்பூசி சார்ந்த விழிப்புணர்வு அதிகமாகி, அனைத்து கர்ப்பிணிகளும் பேறு காலத்துக்கு முன்னரே தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர் என்ற நிலை உருவாகும்போது, மேற்சொன்ன ஆய்வில் தெரியவருவது போன்ற குறைபிரசவ அபாயங்களை எளிதில் தடுக்கலாம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com