போலி சமூகவலைதள கணக்கு வழியாக பணம் கேட்கும் மோசடி கும்பல்களிடமிருந்து தப்பிப்பது எப்படி?

போலி சமூகவலைதள கணக்கு வழியாக பணம் கேட்கும் மோசடி கும்பல்களிடமிருந்து தப்பிப்பது எப்படி?
போலி சமூகவலைதள கணக்கு வழியாக பணம் கேட்கும் மோசடி கும்பல்களிடமிருந்து தப்பிப்பது எப்படி?

சமூகத்தில் முக்கிய பொறுப்பிலிருக்கும் அல்லது பிரபலமடைந்திருக்கும் ஒருவரின் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி, முகம் தெரியா நபர்களிடமிருந்து சமூக வலைதளம் வழியாக பணம் பறிக்கின்றார்கள் சிலர்.

சமீபத்தில்கூட, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனின் பெயரில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு அவர் பெயரில் பணமோசடி நடந்திருந்தது. ஆட்சியர் விஜயகார்த்திகேயன், சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவைகளில் தீவிரமாக ஈடுபடுபவர். அதனால் இயல்பாகவே இவரின் சமூக வலைத்தள கணக்கை பாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில், இவரின் உண்மையான பேஸ்புக் தளத்தை போலவே பெயர், போட்டோக்களை வைத்து போலி கணக்கை துவங்கி சில நபர்களுக்கு மெசேஜ் மூலமாக பணம் கேட்கப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த நபர்கள் ஆட்சியரின் அலுவலத்துக்கு சென்று, 'நேரில் வந்துவிட்டோம் - உங்கள் கையில் பணத்தை தருகிறோம்' என குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். இருப்பினும் அந்த சமூகவலைதள கணக்கிலிருந்து ஜி-பே மூலம் பணம் அனுப்ப சொல்லி நிர்ப்பந்தப்படுத்தியதால் சந்தேகமடைந்து, விஷயத்தை கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

விஷயம் அறிந்த ஆட்சியர், தன் பெயரில் தொடங்கப்பட்ட போலி கணக்கு தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் கொடுத்து, பேஸ்புக் தளத்திற்கும் ரிப்போர்ட் செய்துள்ளார். மேலும் தன்னுடைய பெயரில் வரும் இதுபோன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர்.

முன்பெல்லாம், ஏடிஎம் கார்டு நம்பர், சிவிவி நம்பர், மொபைலுக்கு வரும் ஓடிபி எண் கேட்டு பண மோசடியில் ஈடுபடும் நபர்கள்தான் தற்போது இதுபோன்ற சமூக வலைதள மோசடி வேலையில் ஈடுபடுகின்றனர் என்கிறார்கள் சைபர் கிரைம் பிரிவை சேர்ந்த காவல்துறையினர்.

சைபர் கிரைம் தரப்பில் இந்த மோசடியை தடுப்பது பற்றி கூறும்போது, “நவீன யுகத்தில், மோசடி கும்பல் தங்களின் தளத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள். எங்களால் முடிந்தவரை அவர்களை கண்காணித்து தடுத்து வருகிறோம். இருப்பினும் எங்கள் தடுப்பு நடவடிக்கையில், எங்களுக்கு மக்களின் ஆதரவும் தேவை. அவர்கள் மத்தியிலான விழிப்புணர்வுதான் எங்களுக்கான ஆயுதம். சமூக வலைதள பயனாளர்களை, வயதின் அடிப்படையில் இருதரப்பில் பிரிக்கலாம். ஒருபக்கம், 20 -35 வயதினரும், மற்றொரு பக்கம் 40 – 60 வயதினரும் இருக்கின்றார்கள்.

முதல் தரப்பினர், பெரும்பாலும் உஷாராணவர்கள்தாம். ஆகவே மோசடி செய்யும் நபர்களின் டார்கெட், இரண்டாவது தரப்பினர்தான். காரணம், அவர்களுக்கு சமூக வலைதள பயன்பாடு புதிது. போலி ஃபேஸ்புக்/ட்விட்டர் கணக்கை பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை. ஆகவே உதவி என யாராவது கேட்டவுடன், செய்ய துணிகின்றனர். இந்த உடனடி முடிவுதான் ஆபத்தாகிவிடுகிறது.

சமூக வலைதளம் வழியாக உதவி கேட்கும் நபர்கள் யாராக இருந்தாலும், உடனடி முடிவு கூடவே கூடாது. சம்பந்தப்பட்ட நபருக்கு போன் செய்து, பேசிவிட்டு உதவி செய்யலாம். நேரடியாக அறிமுகமான நபரென்றால், நேரில் சென்று பார்த்து விசாரித்துவிட்டு அவர் கையில் பணத்தை கொடுக்கலாம். முன்பின் அறிமுகமில்லாத, தொலைபேசி வழி நட்பு கூட இல்லாத ஒருவருக்கு சமூகவலைதள கணக்கை மட்டும் அடிப்படை ஆதாரமாக வைத்து உதவி செய்வது, முட்டாள்தனம்.

நேரில் சென்றோ, தொலைபேசி வழியாகவோ ஒருவருக்கு உதவி தேவைப்படுவதை உறுதிசெய்துவிட்டு, பின் உதவும்போது போலி கணக்குகளை எளிதில் கண்டறிய முடியும். இப்படியான கணக்குகள் தெரியவரும்போது, உடனடியாக அதை காவல்துறைக்கோ சைபர் கிரைமுக்கோ தெரியப்படுத்த வேண்டும்.

மக்கள் மத்தியில் இதுசார்ந்த விழிப்புணர்வில் முன்னேற்றம் வந்தால்தான், எங்களாலும் குற்றங்களை தடுக்க முடியும்” என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com