ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது எப்படி?

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது எப்படி?
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது எப்படி?

தாங்கள் நினைத்தால் எதையும் உருவாக்கலாம், எதையும் அழிக்கலாம் என்பதே வல்லரசுகளின் எண்ணம். அப்படி அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஒருவர்தான் ஒசாமா பின்லேடன். ‌ தங்களுக்கு எதிராகத் திரும்பியதும், அவரை அழிப்பதற்காக அமெரிக்கா என்னவெல்லாம் செய்‌தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

சிறந்த கட்டுமானப் பொறியாளர். நிர்வாகத் திறமை மிக்கவர். பொருளாதாரத்தை ஆழமாகப் பயின்றவர். பெரும் பணக்காரர். பிறருக்குக் கடினமாகத் தோன்றும் பணிகளையெல்லாம் சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பவர். உயிரைத் துச்சமாக மதித்தவர். வல்லரசு நாடுகளையெல்லாம் நடுநடுங்கச் செய்தவர். பின் லேடன். உலகின் பார்வையில் கொடூரமான பயங்கரவாதி. வல்லரசு நாடுகளையெல்லாம் நடுநடுங்கச் செய்தவர். 2011-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் பதுங்கியிருந்த பின் லேடனை அமெரிக்க அதிரடிப் படையினர் சுட்டுக் கொன்றனர். இது ஒரே நாளில் நடந்துவிட்டதல்ல. பல ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டு, தகவல்கள் திரட்டப்பட்டு, பாகிஸ்தானுக்கே தெரியாமல் இந்தத் திட்டம் அரங்கேற்றப்பட்டது. இதற்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டது அமெரிக்காவின் சிஐஏ.

2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது, ஆப்கானிஸ்தானின் பயங்கவாதப் பயிற்சி முகாம் ஒன்றில் இருந்தார் ஒசாமா பின் லேடன். தாக்குதல் வெற்றிகரமாக முடிந்துவிட்டது எனத் தெரியவந்ததும், ஒசாமாவும் அவரது சகாக்களும் தங்களது மனைவிமார்களையும் குழந்தைகளையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். முதலில் அமெரிக்கா மீதான தாக்குதலுக்கு ஒசாமா தரப்பில் இருந்து மறுப்பு வந்தது. பல பத்தாண்டுகளாக இஸ்லாமியர்கள் என்ன துயரத்தை அனுபவித்து வருகிறார்களோ, அதனுடன் சற்றும் ஒப்பிட முடியாத குறைந்த துயரத்தையே அமெரிக்கா இப்போது அனுபவித்து வருகிறது என்று ஒசாமா அறிவித்தார். அந்த அறிவிப்பிலேயே, தாக்குதலுக்கு அல் கய்தா இயக்கமும், ஒசாமா பின்லேடனுமே காரணம் என்று ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டு விட்டது.

அதே நேரத்தில் பின்லேடனை உயிருடனோ பிணமாகவோ கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்தார். அமெரிக்க உளவுத்துறைகளும், அதிரடிப்படைகளும் ஒசாமாவைத் தேடத் தொடங்கின. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா மட்டுமல்லாமல் நேட்டோ தலைமையில் கூட்டுப் படைகளும் ஆப்கானிஸ்தானில் களமிறங்கின. ஒசாமாவை ஒழிப்பதே முதல் இலக்காக இருந்தது.

செப்டம்பர் 11- தாக்குதலுக்கு மறுநாள் ஆப்கானிஸ்தானின் காந்தகார், காபூல், ஜலாலாபாத் என பல நகரங்களுக்கு ஒசாமா பயணம் செய்தார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் பாகிஸ்தானுக்குள் நுழைந்திருக்கலாம் என்று நம்பப்பட்டது. அவ்வப்போது அல் ஜசீரா தொலைக்காட்சியிலும் இணையத்தளத்திலும் பின் லேடனின் உரைகள் வெளியாகின. பெரும்பாலும், அமெரிக்கத் தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்ற கருத்தை மறைமுகமாக உணர்த்துவதற்கு அவர் முயற்சி செய்தார். பின்னர் மறுப்பதைக் கைவிட்டுவிட்டார்.

அமெரிக்கா ஆப்கானிஸ்தானைத் தாக்கி அழித்தது. பதுங்குமிடங்களையும் குகைகளையும் நொறுக்கியது. பின் லேடன் கிடைக்கவில்லை. அவர் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கலாம் என்று அமெரிக்காவின் சந்தேகம் உறுதியானது. 2001 முதல் பல தருணங்களில், பின் லேடன் இறந்துவிட்டார் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகின. போரை நடத்துவதற்காக பின்லேடனைத் தேடுவதாகவும் சிலர் குற்றம்சாட்டினார்கள். ஆனால் அமெரிக்கா சில வீடியோ ஆதாரங்களைக் காட்டி, பின்லேடன் உயிருடன் இருப்பதை அவ்வப்போது தெளிவுபடுத்தியது.

பின்லேடன் பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1996-ஆம் ஆண்டு தலிபான் இயக்கம் மற்றும் பின்லேடனுக்கு எதிரான கொள்கை முடிவை அமெரிக்கா எடுத்தபோதே, சி.ஐ.ஏ. உளவு அமைப்பில் பின் லேடனைப் பிடிப்பதற்கென சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு அமெரிக்காவின் விமானப்படை உதவி செய்தது. பிரிடேட்டர் வகையிலான ஆளில்லா வேவு விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான நவீனக் கருவிகள் இந்தப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இந்தப் பிரிவு வலுப்படுத்தப்பட்டது. ஆளில்லா விமானங்களில் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட புதிய வடிவம் பின் லேடனைக் கொல்வதற்காகவே உருவாக்கப்பட்டது.

2007 முதல் 2009-வரை பின் லேடனின் இருப்பிடத்தை நெருங்குவதற்கான பல முக்கியத் தகவல்கள் சி.ஐ.ஏ. அமைப்புக்குக் கிடைக்கத் தொடங்கின. 1998-ஆம் ஆண்டில் இருந்தே பின் லேடன் செல்போன்களைப் பயன்படுத்தியதில்லை. அவருக்கு தனி நபர்கள் மூலமாகவே தகவல்களும் பொருள்களும் கிடைத்து வந்தன. கடிதத் தொடர்புகளும் மிக ரகசியமாகவே நடந்து வந்தன. குவான்டனமோ சிறையில் பிடித்து வைக்கப்பட்டிருந்த சிலரிடம் கடுமையாக விசாரணை நடத்தியதில், இந்தத் தகவல் தருவோர் பற்றிய விவரம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் அபோட்டோபாத் நகரில்தான் பின் லேடன் பதுங்கியிருக்கிறார் என்பதை அமெரிக்கா உறுதி செய்தது.

அதே நேரத்தில் சி.ஐ.ஏ. அமைப்பு அபோட்டோபாத்தை ஒட்டிய பகுதிகளில் போலியாக நோய்த் தடுப்பு மருந்துகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருந்தது. சேவ் த சில்ட்ரன் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் பல கிராமப்புறங்களில் சிஐஏ சார்பில் போலியாக மஞ்சள்காமாலை நோய்க்கான தடுப்பு மருந்துகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் குழந்தைகளின் ரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவை ஒசாமா பின் லேடனின் டிஎன்ஏவுடன் ஒப்பிடப்பட்டது. அபோட்டோபாத் பகுதியில் மட்டும் பல முறை போலியாகத் தடுப்பு மருந்துகள் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதன் மூலமே ஒசாமா பின் லேடனின் இருப்பிடம் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அமெரிக்க உளவாளிகளுக்கு ஷகீல் அப்ரிடி என்ற மருத்துவர் உதவி செய்தார்.

பல வழிகளிலும் அபோட்டோபாத்தின் குறிப்பிட்ட வீட்டில் பின் லேடன் இருப்பது உறுதியானது. அவரது இளம் மனைவி குழந்தைகளும் அந்த வீட்டில் இருந்தார்கள். 2011-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி இரவில் பின் லேடனைக் கொல்வதற்கு நேரம் குறிக்கப்பட்டது. அமெரிக்காவின் அதிபர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆளில்லா விமானங்களைக் கொண்டு தாக்கலாம் என்று முதலில் யோசனை தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக துல்லியத் தாக்குதல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. நேவி சீல் எனப்படும் அமெரிக்கக் கடற்படையில் சிறப்பு வாய்ந்த அதிரடிப் படை வீரர்கள் இந்த நடவடிக்கைக்குத் தேர்வு செய்யப்பட்டார்கள்.

அபோட்டோபாத் வீட்டின் நீள அகலங்கள் முற்றிலுமாக ஆய்வு செய்யப்பட்டிருந்தன. எனினும் பதுங்குகுழிகள் வீட்டுகள் இருக்கின்றனவா என்பதை மட்டும் உறுதி செய்ய இயலவில்லை. இதற்காக சுமார் 2 ஆயிரம் கிலோ எடையிலான வெடிபொருளை எடுத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது. வீட்டுக்கு மிக அருகிலேயே பாகிஸ்தானின் ராணுவ முகாம் இருந்ததால், அவர்களுடன் மோதல் ஏற்படாமல் திரும்பி வருவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் எங்கிருந்து நேவி சீல் வீரர்கள் புறப்பட்டார்கள் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. பாரசீக வளைகுடாவில் நின்றிருந்த ஓர் போக்கப்பலில் இருந்து புறப்பட்டிருக்கலாம் என் நம்பப்படுகிறது.

2011, மே முதல் தேதியன்று சுமார் 11 மணியளவில் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களில் சுமார் 20 வீரர்கள் பின் லேடன் வீட்டு மாடியில் தரையிறங்கினார்கள். அந்த நேரத்தில் மின்சாரம் தடைபட்டு, வீடு முழுவதும் இருளில் மூழ்கியது. அப்போது மூன்றாவது தளத்தில் பின் லேடன் தங்கியிருந்தார். இயந்திரத் துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் நேவி சீல் வீரர்கள் வீட்டுக்குள் நுழைந்து பின் லேடனைத் தேடினார்கள். பின் லேடனுக்கு தகவல் பரிமாற்றத்துக்கு உதவிய அல் குவைதி முதலில் எதிர்ப்பட்டார். அவரை நேவி சீல் வீரர்கள் சுட்டுக் கொன்றார்கள். அதைத் தொடர்ந்து மற்றொருவரும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். பின்னர் மூன்றாவது தளத்தில் குர்தா பைஜாமாவில் இருந்த பின் லேடனை பார்த்தும் சுடத் தொடங்கினார்கள். சில குண்டுகள் தவறின. பல குண்டுகள் பின் லேடனில் தலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாய்ந்தன. 40 நிமிடங்களில் மொத்தமும் முடிந்துபோனது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றுடன் பாரசீக வளைகுடாவில் இருந்த கப்பலுக்கு நேவி சீல் வீரர்கள் திரும்பினார்கள். உயரம், உடலமைப்பு, ரத்த மாதிரிகள் உள்ளிட்டவை உதவியுடன் கொல்லப்பட்டவர் பின்லேடன்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. யாரும் அவரது உடலை வாங்க மாட்டார்கள் என்பதால், அது கடலில் வீசியெறியப்பட்டது. நேவி சீல் வீரர்கள் நடத்திய அனைத்து நடவடிக்கைகளையும் பென்டகனில் இருந்தபடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரி ஒழிக்கப்பட்டார் என்று கொண்டாடினார்கள். அமெரிக்காவின் உதவியோடு உருப்பெற்று, அமெரிக்காவின் கையாலேயே பின்லேடனின் கதை முடிந்து போனது. ஆனால், அதுவே பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com