41 ஆண்டுகால பெருங்கனவை நனவாக்க இந்திய ஹாக்கிக்கு நவீன் பட்நாயக் பங்களித்தது என்ன?

41 ஆண்டுகால பெருங்கனவை நனவாக்க இந்திய ஹாக்கிக்கு நவீன் பட்நாயக் பங்களித்தது என்ன?
41 ஆண்டுகால பெருங்கனவை நனவாக்க இந்திய ஹாக்கிக்கு நவீன் பட்நாயக் பங்களித்தது என்ன?

41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு மொத்த நாடே வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்க, இந்த வெற்றிக்கு பின்புலமாக இருந்த ஒருவருக்கு நன்றி தெரிவித்தார் இந்திய அணி வீரர் மன்பிரீத் சிங். "நம் அனைவருக்கும் இது சிறந்த தருணம். சிறப்புமிக்க இந்தத் தருணத்தில் ஒரு பெரிய நன்றியை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஜிக்கு தெரிவிக்க விரும்புகிறேன். அவருடைய ஊக்குவிப்பு மற்றும் ஹாக்கி குறித்த தொலைநோக்கு பார்வையால்தான் மொத்த நாடும் கொண்டாடும் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. இந்தப் பயணம் முழுவதும் எங்களுக்கு ஆதரவளித்தார் நவீன் பட்நாயக் ஜி. அவரின் இந்த உதவிக்கு ஒட்டுமொத்த அணியின் சார்பாக மிகப்பெரிய நன்றியை தெரிவிக்கிறேன்" என்று நெகிழ்ச்சியோடு பேசியிருந்தார்.

இவர் மட்டுமல்ல, ஹாக்கி விளையாட்டை உன்னிப்பாக கவனித்து வரும் ஒவ்வொருவரும் இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றிக்குப் பின்னால் உள்ள நவீன் பட்நாயக்கின் பங்களிப்பை பாராட்டுகின்றனர். அப்படி என்ன பங்களிப்பு செய்தார்? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.

நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு ஹாக்கி விளையாட்டில் இந்தியா செய்த இந்த சாதனைகளுக்கும் ஒடிசா மாநிலத்துக்கும் இந்திய ஹாக்கிக்கும் என்ன தொடர்பு என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்னால், சில முன்கதைகளை இங்கே தெரிந்துகொள்வோம். ஒலிம்பிக்கின் காலிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி மூன்று முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது.

இந்த வெற்றிக்கு பின் சில நிமிடங்கள் கழித்து, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், வீராங்கனைகளை வாழ்த்தும் வீடியோ ஒன்றை பகிர்ந்துகொண்டார். இதேபோல் நேற்று இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலம் வென்றதும் வீரர்களிடம் வீடியோ காலில் பேசி மகிழ்ந்தார் பட்நாயக். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஹாக்கி மீது நவீன் பட்நாயக் வைத்திருக்கும் காதலை, ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

இன்று நேற்றல்ல, நவீன் பட்நாயக் ஹாக்கி மீது தீராத ஆர்வம் கொண்டிருப்பது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாக்கி விளையாட்டை நேசிக்கும் மனிதர் அவர். இன்னும் சொல்லப்போனால் நவீன் பட்நாயக் ஒரு ஹாக்கி வீரரும்கூட. சிறுவயதில் தான் படித்த டூன் பள்ளியின் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பட்நாயக். அந்த வயதில் ஹாக்கி மீது ஏற்பட்ட ஆர்வம் அவரிடம் தீராத காதலாக மாறியது. இதுவே ஒருகட்டத்தில் இந்திய ஹாக்கி அணியின் ஸ்பான்சராக ஒடிசா மாநிலம் மாறும் அளவுக்கு வித்திட்டது. ஆம், இப்போது இந்திய ஹாக்கி அணிகளின் அதிகாரபூர்வ ஸ்பான்சர் ஒடிசா மாநில அரசுதான். இந்திய அணிகள் விளையாடிய போட்டிகளை பார்த்தவர்களுக்கு ஹாக்கி வீரர்களின் ஜெர்சிக்கு முன்னால் ஒடிசா என்று தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பது தெரிந்திருக்கும்.

இந்திய அணிக்கு ஸ்பான்சராக ஒடிஷா மாநிலம் மாறியது ஒரு இக்கட்டான தருணத்தில்தான். 2018-ம் ஆண்டு வரை `சஹாரா நிறுவனம்' இந்திய அணிக்கு ஸ்பான்சராக இருந்தது. அடுத்தடுத்து நிதி சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு வந்த சஹாரா நிறுவனம், இதன்காரணமாக 2018-ல் இந்திய அணிக்கான தனது ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிகொள்வதாக அறிவித்தது. இந்த தருணத்தில் வெற்றி, தோல்வி என ஹாக்கி விளையாட்டில் தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணிக்கு ஸ்பான்சர்ஷிப் கொடுக்க பெரிய நிறுவனங்கள் தயக்கம் காட்டியன. அப்போது, தயக்கமே இல்லாமல் தாமாக முன்வந்து ஸ்பான்சர் பொறுப்பை ஏற்றது நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசு.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியா தேசிய ஹாக்கியின் ஜூனியர்கள் உட்பட அனைத்து வகையிலான அணிகளுக்கும் ஸ்பான்சர் செய்வதுடன், ஹாக்கி விளையாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளாக மைதானம், உட்கட்டமைப்பு போன்ற தேவைகளை சரி செய்வதற்காக ரூ.120 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்கி ஹாக்கி இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டது ஒடிசா அரசு. இந்த ஒப்பந்தத்தை முன்னின்று செய்தார் நவீன் பட்நாயக். ஒரு மாநில அரசு, தேசிய அணிக்கு ஸ்பான்சர் செய்வது இதன்மூலம் வரலாற்றில் முதல் முறையாக நடந்தது. இப்படித்தான் இந்திய ஹாக்கி விளையாட்டில் ஒடிசா அரசு நுழைந்தது.

இதன்பின் ஸ்பான்சர் என்பதோடு நின்றுவிடாமல் ஒவ்வொரு படிநிலைகளிலும் ஹாக்கி விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து நவீன் பட்நாயக்கின் ஒடிசா அரசு. ஒப்பந்தத்தில் போடப்பட்ட ரூ.120 கோடியை தாண்டி ஒவ்வொரு ஆண்டும் ஹாக்கி விளையாட்டுக்காக மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதி ஹாக்கி வீரர்களின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக்காக செலவு செய்யப்படுகிறது. இதற்கு ஒரு உதாரணம், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு 265 கோடி ரூபாய் ஒதுக்கிய ஒடிசா இந்த ஆண்டு இதனை 370 கோடி ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதுமட்டுமில்லாமல், டாடா குழுமத்துடன் இணைந்து, ஹாக்கி உயர் செயல்திறன் மையத்தை (Hockey High-Performance Centre) புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நிறுவியது.

ஹாக்கியில் திறமையான, உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக தொலைநோக்கு பார்வையுடன் இந்த மையம் திறக்கப்பட்டது. சிறந்த வீரர்களை உருவாக்கும் பொருட்டு இந்த மையம் தற்போது 2500-க்கும் மேற்பட்ட இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதே மைதானத்திலும் மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் முக்கிய ஹாக்கி போட்டிகளை நடத்தியும் காட்டியது ஒடிசா அரசு. 2018-இல் உலகக் கோப்பை, 2014 சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் 2017-இல் ஹாக்கி உலக லீக் இறுதிப் போட்டிகள் இதில் முக்கியமானவை. வரும் 2023-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையை புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடத்த இருக்கிறது. இதற்காக ரூர்கேலாவில், நவீன் பட்நாயக் அரசாங்கம் நாட்டின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியமாக 20,000 பார்வையாளர்கள் அமரும் வகையில் ஒரு மைதானத்தை பழங்குடித் தலைவர் பிர்சா முண்டாவின் பெயரில் கட்டி வருகிறது. இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மட்டும் ரூ.110 கோடி.

இதெல்லாம் ஹாக்கிக்கும் ஒடிசாவுக்கும் இருக்கும் தொடர்பை வெளிப்படுத்துகிறது. நாட்டின் மற்ற மாநிலங்களை விட ஹாக்கி விளையாட்டை அதிகம் நேசிக்கும் மாநிலம் ஒடிசாதான். இந்திய ஹாக்கியின் சிறந்த வீரர்களாக அறியப்படும் திலீப் டிர்கி, இக்னேஸ் டிர்கி, லாசரஸ் பார்லா, சுனிதா லக்ரா போன்றோரை கொடுத்தது ஒடிசா தான் என்பதே இதற்கு சிறந்த சான்று. இப்படி அம்மக்கள் ஹாக்கி மீது கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாகவே நவீன் பட்நாயக் இந்திய அணிக்கு உதவி வருகிறார். இந்த உதவியால் தற்போது இந்தியாவின் பெருங்கனவை ஒலிம்பிக்கில் நிறைவேற்றியுள்ளது இந்திய ஹாக்கி படை. வரும் ஆண்டுகளில் இந்திய அணி ஹாக்கி விளையாட்டுகளில் கோலோச்ச ஒடிசா அரசின் உதவி தொடரும் என்கிறார் பட்நாயக்.

இந்தியாவின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு, டோக்கியோவில் இருந்த வீரர்களுடன் வீடியோ காலில் பேசிய நவீன் பட்நாயக், "உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த தருணத்தில் ஒடிசாவைப் போலவே இந்தியாவும் மிகவும் உற்சாகமாக உள்ளது. நாங்கள் அனைவரும் உங்கள் பின்னால் இருக்கிறோம்" என்றார். பதிலுக்கு பேசிய இந்திய கேப்டன், "அனைவரும் கிரிக்கெட்டை ஆதரிக்கும்போது நீங்கள் ஹாக்கியை தேர்ந்தெடுத்து ஆதரித்தீர்கள். அதற்கான முடிவுதான் இன்று நீங்கள் காண்பது. இந்த நேரத்தில் மிகப்பெரிய நன்றி சொல்ல விரும்புகிறேன், சார்" என்றார்.

அவர் சொன்னது போல, எல்லோரும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த, அழிவின் விளிம்பில் இருந்த இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை தேர்வு செய்து தற்போது இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ள பட்நாயக்கிற்கு உண்மையில் ஒரு பெரிய சல்யூட் சொல்லியே ஆக வேண்டும்.

சல்யூட் .. நவீன் பட்நாயக் சார்..!

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com