"நமது எம்.ஜி.ஆர்" - "நமது அம்மா"வாக மாறிய கதை !

"நமது எம்.ஜி.ஆர்" - "நமது அம்மா"வாக மாறிய கதை !
"நமது எம்.ஜி.ஆர்" - "நமது அம்மா"வாக மாறிய கதை !

அரசியல் பயணம் என்பது சில நேரங்களில் விறுவிறு திரைக்கதை கொண்டதாகவும், காட்சிகளும் சாட்சிகளும் மாறும் திரைப்படம் போலவே இருக்கும். அப்படித்தான் அதிமுகவின் திரைக்கதை ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் எழுதப்பட்டது. 2016 டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் மறைந்ததில், இருந்து அதிமுக கட்சியிலும், தமிழக அரசியலிலும் நிகழ்ந்த அடுக்கடுக்கான நிகழ்வுகளும் மாற்றங்களும் நாடே இதுவரை காணாதது. அதில் கால் நூற்றாண்டாக்கும் மேலாக அதிமுகவின் அதிகராப்பூர்வமான நாளேடான நமது எம்ஜிஆரும், இப்போது மாற்றம் கண்டு "நமது அம்மா" என இன்று முதல் வெளிவரவுள்ளது. அப்போது நமது எம்.ஜி.ஆர் நாளேடு வெளிவராதா ? என்று கேட்டால் வெளிவரும். ஆனால் அதிமுக ஆதரவாக இல்லாமல் சசிகலா குடும்பத்தினரின் ஆதரவு நாளேடாக தொடர்ந்து வெளிவரும்.

எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்தபோது கட்சிக்கென அதன் செயல்பாடுகள், தலைவர்களின் சுற்றுப்பயண அறிக்கைகள், நிர்வாக மாறுதல்கள் உள்ளிட்டவைகளை கட்சித் தொண்டர்களிடம் தெரிவிப்பதற்காக அண்ணா நாளிதழைத் தொடங்கினார். இது மட்டுமல்லாமல் கே.ஏ.கிருஷ்ணசாமியின் தென்னகம் உள்பட  பல பெயர்களில் கட்சிக்கென அப்போது பல பத்திரிகைகள் நடந்தன. ஆனாலும் அண்ணாவே அதிகாரப்பூர்வ நாளேடாக கட்சிக்கு இருந்தது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின், அதிமுக ஜெயலலிதா கட்டுப்பாட்டுக்கு வந்தது. அதன் பின், தனக்கென ஒரு நாளேடு வேண்டும் என விரும்பி 1988 ஆம் ஆண்டு நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் துவங்கப்பட்டது. இதன் நிறுவனராக ஜெயலலிதாவே இருந்தார்.

ஜெயலலிதாவின் ஆரம்ப கால பத்திரிகையாளர்களான நண்பர்கள் நமது எம்.ஜி.ஆரின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றனர். ஜெயலலிதா இருந்தவரை கட்சியைப்போன்றே கட்சிப் பத்திரிகையான நமது எம்.ஜி.ஆருக்கும்  ஒரே குரல்தான். ஜெயலலிதாவை மீறி எந்த வார்த்தையும் அவர் அனுமதி இல்லாமல் இடம்பெற்று பத்திரிக்கை வெளிவராது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் கட்சி இரண்டு அணிகளானது. இப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓர் அணியாகவும், (இவர்கள்தான் தேர்தல் ஆணையத்தின்படி அதிகாரப்பூர்வ அதிமுக) பின்பு, சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இதனால் நமது எம்ஜிஆர் நாளிதழில் அதிமுக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து செய்திகள் வெளியிடப்படுகிறது. இதனால் அதிமுக அரசின் செயல்பாடுகள் நமது எம்ஜிஆரில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. கட்சியினர் எல்லாருக்கும் பொதுவான கட்சிப் பத்திரிகையாக இதுவரை இருந்த 'நமது எம்.ஜி.ஆர்' இனிவருங்காலங்களில் சசிகலா தரப்பினரின் கருத்துக்களை மட்டும் தாங்கிவரும் 'எனது எம்.ஜி.ஆர்' என மாறியது. இதன் காரணமாகவே ஜெயலலிதா பிறந்தநாளான இன்று நமது அம்மா என்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழ் தொடங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com