இந்தியாவில் எத்தனை புலிகள் இருக்கிறது? - ஒரு பார்வை

இந்தியாவில் எத்தனை புலிகள் இருக்கிறது? - ஒரு பார்வை

இந்தியாவில் எத்தனை புலிகள் இருக்கிறது? - ஒரு பார்வை

புலிகள் என்றாலே எப்போதும் எல்லோருக்கும் ஆச்சரியம்தான். அதன் தோற்றத்தை நேரில் பார்த்தால் உடம்பில் பயம் பக்கென்று பற்றிக்கொள்ளும். ஆனால் காடுகளில், புலிகள் மனிதனின் கண்களுக்கு அவ்வளவு எளிதாக அகப்பட்டுவிடாது. ஏனென்றால் நாம் எல்லோரும் பார்த்து பயப்படும் புலிகள் பொதுவாகவே கூச்சசுபாவம் கொண்ட உயிரினம் என்பதுதான் உண்மை. மனிதனின் வாசம் அதற்கு தெரிந்தவுடன் நாம் இருக்கும் பக்கமே வராது. அதனால்தான் புலிகள் காப்பக சுற்றுலாக்களில்கூட புலிகளை காண்பது என்பது அரிதிலும் அரிதான நிகழ்வாகவே இருக்கும்.

ஆனால் அப்படிப்பட்ட புலிகள் கடந்த கால் நூற்றாண்டு காலமாக பெரும் அழிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் புலிகளை காக்க வேண்டும் என்பதற்காகவே 2010-ஆம் ஆண்டு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் புலிகள் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற உச்சி மாநாட்டில் புலிகளை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை உயர்த்தவும் சர்வதேச நாடுகள் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தை நினைவுபடுத்தும் விதமாகவும், புலிகளை பாதுகாக்கவும், புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூலை 29-ஆம்தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் புலிகள்

இந்தியாவில் மொத்தம் 2,967 புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது. புலிகளை காக்க இந்தியா தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்காகக்தான் 1973 ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி, புலியை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவித்தது. அழகும், கம்பீரமும் அதன் உறுமலும்தான் புலிக்கு இந்திய தேசிய விலங்கு என்ற பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

1973 ஆம் ஆண்டு வங்காளப் புலி (பெங்கால் டைகர்) இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் பல்வேறு காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை வெகுவேகமாக குறையத் தொடங்கியது. இதனால், புலிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடந்து வருகின்றது. 2006 ஆம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பின் முடிவில் இந்தியக் காடுகளில் 1,411 புலிகள் உள்ளதாகவும், 2010-ம் ஆண்டில் 1,706 புலிகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நடந்த புலிகள் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 2,226 புலிகள் இருப்பதாக அறியப்பட்டு இருந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளது.

அதுவும் 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்து. 2018 புலிகள் கணக்கெடுப்புக்காக 1,21,337 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட வனப்பகுதிகளில் 26,838 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. வன உயிரினங்களின் நடமாட்டத்தை அறிந்து அந்த கேமராக்கள் படம்பிடித்தன. அந்த கேமராக்களில் மொத்தம் 3,48,58,623 படங்கள் பதிவாகியிருந்தன. அந்த படங்களைக் கொண்டு அதிநவீன மென்பொருள் மூலமாக மொத்த புலிகளின் எண்ணிக்கை துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மொத்தம் 2,967 புலிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதில் மத்தியப் பிரதேசம் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. மத்தியப் பிரதேச காடுகளில் மட்டும் 526 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-இல் மத்தியப் பிரதேசத்தில் 308 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 526 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அதிக புலிகள் வாழும் இரண்டாவது மாநிலமாக கர்நாடகா உள்ளது. இங்கு 524 புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

இதற்கடுத்தப்படியாக உத்தராகண்ட் மாநிலத்தில் 442 புலிகளும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 312 புலிகளும் வசிக்கின்றன. இந்தப் பட்டியிலில் தமிழகத்துக்கு 5 ஆம் இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 264 புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கோவா, கர்நாடகம், கேரளம், தமிழகம் அடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் 981 புலிகள் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தொடர்ந்து புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியான விஷயம் என சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2006 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 76 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை , 2010-ல் 163 ஆகவும், 2014-ல் 229 ஆகவும் உயர்ந்தது. தற்போது தமிழகத்தில் 264 ஆக புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் , சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என நான்கு புலிகள் காப்பகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புலி - மனிதன் மோதல்

மனிதனை கண்டாலே தன்னை மறைத்துக்கொள்ளும் கூச்சசுபாவம் உள்ள உயிரினமான புலி சில நேரங்களில் மனிதர்களை விரும்பும். அவ்வாறான புலிகளைதான் நாம் "மேன் ஈட்டர்" என அழைப்போம். சுதந்திரத்துக்கு முந்தையக் காலக்கட்டத்தில் இருந்தே இந்தியாவில் "மேன் ஈட்டர்" தொடர்பான கதைகள் ஏராளம்.

வேட்டையாடியும் காட்டுயிர் ஆர்வலருமான ஜிம் கார்பேட் மேன் ஈட்டர் புலிகள் குறித்த நிஜக் கதைகளை எழுதியுள்ளார். புலி மட்டுமல்ல சிறுத்தைகள் கூட மேன் ஈட்டராக அறியப்படுவதுண்டு. ஜிம் கார்பட்டின் "குமாயுன் புலிகள்", சிறுத்தைகளை வைத்து எழுதிய "ருத்ரபிரயாகையின் ஆட்கொல்லி சிறுத்தைகள்" ஆகிய புத்தகங்கள் சூழலியலாளர்களுக்கு இப்போதும் ஓர் கையேடு என்றே கூறலாம்.

தமிழகத்தில் கூட "மேன் ஈட்டர்" புலிகள் அண்மையில் கூட இருந்தன. இங்கு 2014, 2015, 2016 ஆம் ஆண்டில் மேன் ஈட்டராக அறியப்பட்ட புலிகள் நீலகிரி மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது. இந்த மேன் ஈட்டர் புலிகளால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது இத்தகைய நடவடிக்கையில் இறங்குகிறது வனத்துறை.

மகாராஷ்டிராவில் மேன் ஈட்டராக கருதப்பட்ட ஆவ்னி என்ற பெண் புலி 13 பேரை கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் புலியை அம்மாநில வனத்துறை சுட்டுக்கொன்றது. உலக புலிகள் தினமான இன்று "மேன் ஈட்டர்கள்" குறித்து சற்றே தெரிந்துக்கொள்ளலாம்.

எப்போது ஒரு புலி மேன் ஈட்டராக மாறுகிறது ?

பொதுவாக ஒரு புலி எப்போதும் மனித மாமிசத்தை விரும்பாது. மனிதனின் வாடையை நுகர்ந்தாலே புலி பல கிலோ மீட்டருக்கு அப்பால் சென்றுவிடும். உதாரணத்துக்கு ஒரு புலி மானை வேட்டையாடினால், உடனடியாக அதனை தின்றுவிடாது. அந்த மானை சில மணி நேரம் வைத்து அதன் மாமிசம் லேசான பின்புதான் உண்ணும். அப்படிப்பட்ட நிதானமான குணமுடையது புலி. ஒரு புலியின் அதிகப்பட்ச ஆயுட்காலம் 15 ஆண்டுகள். வயதான புலிகளே பொதுவாக மேன் ஈட்டராக மாறும் என்று சில விலங்கியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஒரு சில புலிகள் காயத்தின் காரணமாகவும் மேன் ஈட்டராக மாறும். அதாவது, வயோதிகம் காயம் காரணமாக அதனால் வேகமாக ஓடி வேட்டையாட முடியாது. எனவே, அப்போது ஒரு மனிதனின் ரத்தத்தை ருசித்துவிட்டால், பின்பு அது மனிதனை மட்டுமே வேட்டையாடும் மேன் ஈட்டராக மாறிவிடும். ஒரு பெண் புலி மேன் ஈட்டராக மாறிவிட்டால் அதன் குட்டிகளும் எதிர்காலத்தில் அதாவது வயதான பின்பு மேன்ஈட்டராக மாறிவிடும் என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஊருக்குள் புகும் மேன் ஈட்டர்களை சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்களை திருப்திப்படுத்துவதற்காகவே வனத் துறை அதிகாரிகள் புலிகளை சுட்டுக் கொல்கின்றனர் என்று சூழலியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உதாரணத்துக்கு 1997 ஆம் ஆண்டு வால்பாறை பகுதியில் சுற்றித் திரிந்த மேன் ஈட்டர் புலி மயக்க மருந்து செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது. பிறகு, இந்தப் புலி வன உயிரியல் காப்பகத்துக்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட்டது. பின்பு அந்தப் புலி இயற்கையாகவே மரணம் அடைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com