காதலுக்கு மட்டுமா மரணமில்லை ! காதல் படைப்புகளும் மரிப்பதில்லை !
காதலை சொல்லாத கவிஞர்கள் இல்லை. காதலை படைக்காத கதாசியர்களும் இல்லை. படைப்பிலக்கியத்தில் “காதல்” என்ற மூன்றெழுத்து மந்திரம்தான் எங்கேயும் எப்போதும் முதலிடம் பிடித்திருக்கிறது. ஏனென்றால்… காதல்… மானுடங்கள் மட்டுமின்றி எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் விஷயம். எல்லா ஜீவன்களும் ஏதோ ஒரு கணத்தில் காதல் வயப்பட்டவைதான்!
மயில் தோகை விரித்தாடுவதும் காதலால் தான். தன் காதல் மயிலை வயப்படுத்தத்தான். பட்டாம்பூச்சி சிறகடித்துப்பறப்பதும் கூட தன் இணையை கவர்வதற்காகத்தான். ஆண்மான், பெண் மான் தண்ணீர் குடிப்பதை விட்டுக்கொடுத்ததும் காதலால் தான். புழுவுக்குள்ளும் காதலுண்டு. பூச்சிகளும் காதலால் கசிந்துருகுபவையே. ஐந்தறிவு பறவை… விலங்கினங்களையே காதல் பாடாய் படுத்தும்போது… ஆறறிவு மனிதர்களின் காதலை அளவிடவே முடியாததாகிவிடுகிறது. அதனால் தான் காதலை மையப்படுத்திய படைப்பிலக்கியங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. ”அம்பிகாபதி- அமராவதி” இன்னும் முனுமுனுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஷேக்ஸ்பியரின் ”ரோமியோ ஜூலியட்", "கிங் லியர்" "மேக் பத்" , . ஒத்தல்லோ" இன்னும் காதலோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த "ஃபோர் வேல்ப் ட்ராஜடி" மகுடத்தை இன்னும் ஷேக்ஸ்பியரை தாண்டி யாராலும் மறு கடக்க முடியவில்லை. "ஒத்தல்லோ"வில் தனது காதலி டெஸ்டிமோனா விற்கு கொடுத்த ஒரு கைக்குட்டை படைத்தளபதி இடம் இருப்பதைக்கண்டு சந்தேகம் கொண்ட காதலன் டெஸ்டிமோனா அவை தலையணையால் அமுத்தி கொலை செய்யும் போது கூட, "ஐ கில் தீ... அப்பான் ஐ இஸ் தீ" என்ற வார்த்தைகளைச் சொல்லி, அதாவது உன்னை கொலை செய்வதற்கு முன் உன்னை முத்தமிட்டுக் கொள்கிறேன் என்று முத்தமிட்டுக் கொலை செய்யும் "ஒத்தெல்லோ" காதல் காலத்தால் மறையாதது..
ஆங்கில இலக்கியங்கள் மட்டுமல்ல... தமிழ் இலக்கியங்களும் காதலால் கசிந்துருக வைத்திருக்கின்றன. கற்புக்கரசியாய் சித்தரிக்கப்படும் கண்ணகியின் கணவனுக்கும் கூட மாதவியின் மேல் காதல் தான் மலர்ந்திருக்கிறது. புறநானூறு, அகநானூறுகளும் கூட முழுக்க முழுக்க காதலை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கின்றன. வான் புகழ் வள்ளுவன் கூட அறம் பொருளோரு, காதலை சொல்லும் இன்பத்தை ஒரு பாலாக வைத்திருக்கிறான். உலக அதிசிய சின்னமான தாஜ்மகாலும் கூட காதலின் வெளிப்பாடாய் பார்க்கப்படுகிறது. போர்வாள் மீசைக்காரன் பாரதியும் கூட காதலை விட்டுவைக்கவில்லை.சுதந்திர வேட்கை அவனின் கவிதைகளில் இருந்தாலும் "காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா" "நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா" என துவங்கி, "காற்று வெளியிடை கண்ணம்மா... நம் காதலை எண்ணிக் களிக்கின்றேன்,." வரை மகாகவியின் காதலை அடுக்கிக் கொண்டே போகலாம்.
சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் -"பொன்னகரம்" கதையை விடவா காதல் கதை வேண்டும். காதல் கணவனை மருத்துவச் செலவிற்கு பணம் இல்லாமல் மாற்றானிடம் தனது உடலை விட்டு தன் கணவனை காப்பாற்றிய நெஞ்சை உருக்கும் காதல் கதையை இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். "கற்பு கற்பு" என்று பீற்றிக் கொள்கிறீர்களே... இதுதாண்டா பொன்னகரம்" என்று முடித்திருப்பார் புதுமைப்பித்தன். இப்படி இலக்கியவாதிகள், இலக்கியங்கள் காதலை மையப்படுத்தியிருக்க… சம நூற்றாண்டு கால எழுத்தாளர்களும் அதே காதல் யுக்தியையே கையாண்டிருக்கிறார்கள். மு.கருணாநிதியின் பொன்னர்- சங்கர், ரோமாபுரி பாண்டியன், பாயும் புலி பண்டார வன்னியன் துவங்கி பராசக்தி வரை கலைஞரின் காதல் தமிழகத்தை கதிகலங்க வைத்திருக்கிறது.
ஜெயகாந்தனின் பாரிசுக்கு போ, சில நேரங்களில் சில மனிதர்கள், மூங்கில் காட்டு நிலா, சினிமாவுக்குப் போன சித்தாளு, கோகிலா என்ன செய்துவிட்டாள் என காதலில் கருக்களில் உருவான அவரது படைப்புகள் ஏராளம் ஏராளம். வரலாற்று புதின எழுத்தாளர் சாண்டில்யனின் யவன ராணி, கன்னி மாடம், கடல் புறா அனைத்தும் ரசிகர்களை காதலால் திளைக்க வைத்தவை. கல்கியின் பொன்னியின் செல்வனும் இன்னும் ரசிகர்களின் கண்ணுக்குள்ளே நிற்பவை. சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போம்" , ஆலினால் காதல் செய்வீர், கரை எல்லாம் செண்பகப்பூ, அனிதாவின் காதல்கள் போன்ற காதல் கதைகளுக்கு இன்னும் குறையவில்லை ரசிகர் பட்டாளம்.
அனுராதா ரமணனின் காதலோடு ஒரு காதல் கதை |, காணாமல் போன கனவுகள், காதலால் வளர்ந்தேன், இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள், கண் சிமிட்டும் மின்மினிகள், நிறம் மாறும் நெஞ்சம், மாயங்கள் உன்னாலே என அடுக்கிக்கொண்டே போகலாம் காதல் கதைகளை...
நினைத்தாலே இனிக்கும் காலம் அது. இதுபோன்று சாண்டில்யன், கல்கி, தி.ஜானகிராமன், அனுராதா ரமணன், இந்துமதி, ரமணிச்சந்திரன், இந்திரா பார்த்தசாரதி, திலகவதி, எனத்துவங்கி தற்போதைய பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் வரை என காதலை மையப்படுத்தும் எழுத்தாளர்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால் காதல், காதல், காதல் என்று தன் வாழ்நாள் எழுத்தின் அதிக சதவீதத்தை காதலுக்காக அர்ப்பணித்தவர் என்றால் அது… "பாலா" என்று செல்லமாக அழைக்கப்படும் மறைந்த பாலகுமாரன் தான். அவரது எழுத்து பித்தர்களால் அழைக்கும் செல்லப்பெயர். “எழுத்துச்சித்தர்” இந்த பட்டம் எல்லாம்… அவரின் “உடையார்”, “கங்கை கொண்ட சோழன்” போன்ற படைப்பிலங்கியங்களுக்கு பின்னால் இருக்கலாம். ஆனால் ஆரம்ப பாலகுமாரன் எழுத்துக்கள் முழுக்க முழுக்க காதலால் போர்த்தப்பட்டவை. ரசிகர்களுக்கு தனது எழுத்தால் போதை ஏற்றப்பட்டவை.
காதல்… எல்லோருக்கும் வருவது… எல்லோருக்குள்ளும் உள்ளுக்குள் ஊறித்திளைத்திருப்பது என்பதனாலேயோ என்னவோ… காதல் மீது காதல் கொண்டவர்களின் கைகளில் எல்லாம் பாலாவின் ஏதாவது ஒரு புத்தகம் இருந்திருக்கிறது. ஏனென்றால் ”மலரினும் மெல்லியது காதல்” என்பதை உடைத்து “அதனினும் மெல்லியது பாலாவின் படைப்புகள்” என்று சொல்லும் அளவிற்கு எல்லோரையும் காதலால் கட்டிப்போட்டார் பாலா. கணையாழியில் கவிதைகளாய் எழுத்தை துவக்கினாலும், சிறுகதை, நாவல், என்பனவற்றிக்கு இடையில் சுய சரிதையை விளக்கும் “முன்கதை சுருக்கம்”மும், “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?”வும் எழுத்துலகில் தனி முத்திரையை பதித்தன.
வெளிப்படையான சுய சரிதைகளில் “ஷோபாடே”யின் “மை லைஃப்”பை சொல்வார்கள். அதை விடவும் தான் யார், வந்த வழி எப்படி என்பதை மிகவும் வெட்ட வெளிச்சமாக சொன்னது இந்த இரண்டு சுய சரிதை படைப்புகள். அதிலும் உண்டு மறைக்கப்படாத காதல். ஒரு படைப்பாளனின் ஒளிவு மறைவுமற்ற தன்னிலை வெளிப்பாடு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. புகைப்பழக்கத்தில் துவங்கி எதிர்வீட்டு “சியாமளா”வின் காதல் உறவு வரையிலான அந்தரங்கங்களை ஒரு பிரபல எழுத்தாளன் மறைக்காமல் சுயசரிதையில் குறிப்பிட்டது பாலாவின் இயல்பான, யதார்த்தமான காதல் எழுத்துக்களுக்கு மணி மகுடமாக அமைந்தன.
புத்தகங்களின் விற்பனையும் பல பதிப்புகளை தாண்டின. சக எழுத்தாளர்களால் பாலவின் காதல் விமர்சனத்திற்கும் ஆளாகின. ”எழுத்துச்சித்தர்”ருக்கும் கணையாழி கவிஞருக்கும் இடையே உள்ள பாலாவை தெரிந்து கொள்ள வேண்டுமானால் “முன்கதைச்சுருக்கம்”, ”இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?”வை தொட்டுப்பார்க்கலாம். காதலை இயல்பாக சொல்வது, அதிலும் எல்லோருக்குள்ளும் எழும், எல்லோரும் பார்க்கும் யதார்த்த காதலை சொன்னது ஆகியவற்றால்தான் அப்போதைய முன்னணி எழுத்தாளர்களை விட அதிகளவிலான ரசிகர்களை பெற முடிந்தது. பதிப்பகங்களும் பிறரை புறந்தள்ளி பாலாவிற்கு முக்கியத்துவம் கொடுத்தன. அதிக விலையுள்ள பாலவின் புத்தகங்கள் அப்போதே அதிகளவில் விற்பனையாகின.
காதலின் ஆழமான வெளிப்பாடுகளை சொன்ன ”மவுனமே காதலாக…”, “கெட்டாலும் ஆண்மக்கள்…: சிறுகதைகள் அந்தக்கால விற்பனையில் முதலிடம் பிடித்தன. ”வைபோகங்களுக்கு புத்தகங்களை பரிசளியுங்கள்” என்பது எல்லா இலக்கியவாதிகளும், சான்றோரும் சொல்லும் கூற்று. ஆனால் அதிகளவில் பரிசளிக்கப்பட்ட புத்தகங்கள் பட்டியலில் பாலாவினுடையதுதான் முதலிடம் பிடித்திருக்கிறது. அந்த அளவிற்கு, பாலாவின் நாவல் தலைப்புகளும் பலரின் மனதின் கருத்தை சொல்வதாகவே, பிரதிபலிப்பாதாகவே அமைந்திருந்தன. ”என்றென்றும் அன்புடன்”, “அன்புக்கு பஞ்சமில்லை”, “இனியெல்லாம் சுகமே” புத்தகங்கள் எல்லோரும், எல்லா வைப்போவத்திற்கும் பரிசளிப்பாதாய் இருந்தது.
காதலி தனது காதலனுக்கு “ஆருயிரே மன்னவரே”யையும், “உள்ளம் கவர் கள்வன்”னையும் கொடுத்தார்கள். காதலன், தனது காதலிக்கு “என் கண்மணி”யையும், “நிலாவே வா”வையும், ”காதல் வெண்ணிலா”வையும், “சுந்தரி கண்ணால் இரு சேதி”யையும், “தாயுமானவன்”னையும் தந்து கவர்ந்தார்கள். தோழிக்கென “என்னுயிர்த்தோழி”, தோழனுக்கென “ரகசிய ஸ்நேகிதனே…”, தந்தார்கள். மொத்தத்தில் காதலர்கள் “உறவில் கலந்து உணர்வில் நனைந்து”, “இனிது இனிது காதல் இனிது”, “என்னுயிரும் நீயல்லவோ”, “மவுனமே காதலாக…”, ”நீ வருவாய் என…” என பகிர்ந்தார்கள். காதலன், காதலி மட்டுமல்லாது தோழன், தோழியருக்குள்ளும் இருப்பது காதல் தான் என்ற பாலாவின் படைப்புகளின் வெளிப்பாடுகளே இவைகள்.
காதலர்களுக்காகவே படைத்தவை என்பதை உணர்த்துவதாக இடையிடையே கதைகளில் கவிதைகளும் இடம்பெற்றன. தனி கவிதை தொகுப்பான “விட்டில் பூச்சிகள்”ளில் வரும் “நீலக்குழல் விளக்கில் முட்டி முட்டி பால் குடிக்கும் விட்டில் பூச்சிகள்” என்ற ஹைக்கூ… பெரிய கவிதைகளாய் நாவல்களை அலங்கரித்திருக்கிறது. அவற்றில் ”நிலாவே வா” நாவலில் ஒரு கவிதை வரும். மழை நேரம் அது… கவிதை… இது…
“சில நேரம் சிரிப்பு வரும் சில நேரம் அழுகை வரும்…
உன்னைப்பிரிந்து திரும்புகையில் உள் மனது ஜதிபோடும்!
ஜதிபோடும் உள்மனடு சுதி சேர்க்கும் இடியோசை
ஊர் தூங்கும் இரவினிலே உன் கவிதை மழை போல…
மழைபோல உன் கவிதை தெருவெல்லாம் வழிந்தோட…
நான் நடந்து போகையிலே என் காலடியில் உன் கவிதை!
உன் கவிதை காலடியில்… என் மனது உன் மடியில்…
நீ பார்த்த என் கண்ணில் மழைச்சாரல் இதமாகி!
இதமான மழைச்சாரல்…
யார் போவார் வீட்டுக்கு?”
என்ற ”நிலாவே வா” நாவலில் வரும் காதல் கவிதைகள் எல்லாம் பாலாவின் ரசிகர்களால் இன்னும் அசை போட்டுக்கொண்டிருப்பவை. பரிசளித்த புத்தகங்களில் கருப்பு பேனாக்களால் அழியாத அடிக்கோடுகளிட்டவை. ”ஆற்று மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு அரைப்படி தண்ணீரை வாங்கி குளிப்பவனை எனக்கு பிடிப்பதில்லை. முன்னே சென்று முங்கி குளி” என்பதெல்லாம் கூட காதல் பரந்து விரிந்து கிடப்பட்தற்கு உவமையாய் சொல்லும் எழுச்சி தரும் இலக்கிய படைப்புகளில் சில.
கட்டுரைகளில் “இனிது இனிது காதல் இனிது” இன்னும் காதலர்கள் கைகளில் தவழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதும் அடிக்கோடிட்ட பக்கங்களோடு என்பது தனிச்சிறப்பு பெற்றதாக அமைந்துள்ளது. பாலாவின் காதலை படித்தவர்கள், பகிர்ந்தவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர… பாலாவும் ரசிகர்களுடனேயே எழுத்தில் அடுத்த அடிக்கு பயணித்தார். அப்படித்தான் “கரையோர முதலைகள்”.
மாமிசம் உண்ட முதலைகள் பல் இடுக்குகளில் சிக்கிய மாமிசத்தை களைய வாயை திறந்தபடி அசையாமல் படுத்திருக்கும். காகங்கள் வந்து அந்த மாமிசங்களை கொத்தி உண்ணும். மாமிசம் பிடிக்கும் தனக்கு, அந்த பறவைகள் உதவி செய்வதால் அதை எந்த காரணத்தாலும் உண்ணாதாம் முதலைகள். ”முதலைகள் தர்மம் மாறாதது…” என்ற கரையோர முதலைகளில் பாலா சொல்லித்தான் தெரியும் முதலைகள் பற்றி.
இப்படி, “பயணிகள் கவனிக்கவும்”, “மெர்க்குரிப்பூக்கள்”, “பந்தையப்புறா”, இரும்புக்குதிரைகள்”, “ஆனந்தவயல்”, ”கைவீசம்மா கைவீசு” என சமூக அக்கறையோடு பயணித்து, யோகி ராம்சுரத்குமாரின் சீடராகி “விசிறி சாமியார்”, “நானே எனெக்கொரு போதிமரம்” என படைப்பின் படிக்கட்டுகள் ஆன்மிகமாய் மாறி “உடையார்”, “கங்கை கொண்ட சோழன்” என வரலாறுகளோடு விரிந்து பரவியது. இடையிடையே சினிமா கதை வசனங்களும் உண்டு. அந்த வகையில், திரைப்பட இயக்கமும் என கவிஞர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர், கதை வசனகர்த்தா என பாலாவின் பன்முகத்தை வெளிப்படுத்தியது.
ஒரு படைப்பாளனின் வெற்றி அவனது ரசிகர்கள் கையில் தான் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் பாலா. அதனால் தான், தனது புத்தகங்களை திறந்ததும் ரசிகர்களின் விமர்சன கடிதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் பிரசுரிக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வந்திருக்கிறார். தனது முகநூலின் பதிவுகளில் நண்பர்களிடம் கலந்துரையாடுபவர், விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் நேரடியாக பதில் சொல்பவர். யாராவது தொடர்பு எண் கேட்டால் தனது தனிப்பட்ட சொந்த தொடர்பு எண்ணை பதிவிடும் குணம் கொண்டவர். அந்த எண்ணில் தொடர்பு கொண்டால் நேரடியாக பாலாவே அலைபேசியை எடுத்து பேசும் அளவிற்கு எல்லாவற்றிலும் உண்மையானவர். எதிலும் வெளிப்படையானவர்.
ஆனால்… ”தற்போது அந்த எண்ணில் அழைத்தால்… அழைப்பு மணி மட்டுமே போய்கொண்டிருக்கும்… இல்லையேல் அந்த அலைபேசி அணைக்கப்பட்டிருக்கும்… ஒருவேளை யாராவது பேசலாம்… ஆனால் “பாலா” குரலை இனி கேட்கமுடியாது என்பது ரசிகர்களால் தாங்கிக்கொள்ள முடியாத துயரம். அதோடு… ஆயிரமாயிரம் பக்கங்களை எழுதிக்கொட்டிய அவரது ஆறாவது விரல்… அந்த வீட்டில் அமைதியாகிவிட்டிருக்கிறது. ஆனாலும் அதன் பதிவுகள் உலகெங்கும் பரவிக்கிடக்கிறது. வீடுகளெங்கும் வீற்றிருக்கிறது. குறிப்பாய் காதலர்களிடையே கலந்திருக்கிறது.
காதலர்கள் என்றால்... காதலித்தவர்கள், காதலித்துக்கொண்டிருப்பவர்கள், காதலிக்கப்போகிறவர்கள் இவர்களோடு, காதல் கல்யாணத்தில் முடியாமல் போனாலும் இன்னும் மறையாத… மறக்க முடியாத காதலோடு வாழ்ந்துகொண்டிருக்கும் லட்சக்கணக்கான காதலர்களோடு கலந்திருக்கிறார் இந்த பாலா என்ற பாலகுமாரன்.
இந்த காதலர் தினத்தில் அவரை நினைவு கூறுவதும் அதற்காகவே. அந்த பாலா… வீடுகளில், நூலகங்களில் புத்தகங்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். காதலர் இதயங்களோடு தினமும் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில்… அந்த வடிவில் அவர், இனிவரும் பலப்பல புதிய தலைமுறைகளையும் காதலால் பார்க்க இருக்கிறார். பாலா போன்று காதலித்த அந்த பல படைப்பாளிகளும் பலர் இப்போது இல்லை. அவர்களின் படைப்புகள் இன்னும் இதயத்திற்குள் இருக்கும் காதலோடு தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால்… காதலுக்கு மட்டும் என்றும் எப்போதும் மரணம் இல்லை என்பதில்லை. காதலர்களை மகிழ்வித்த காதல் படைப்பிலக்கியங்களும் ஜென்மங்களுக்கும் மரிப்பதில்லை !
- ரமேஷ் கண்ணன்

