எப்படி இருக்கிறது தமிழ்ப் பதிப்புத் தொழில்? மனந்திறக்கும் பதிப்பாளர்கள்

எப்படி இருக்கிறது தமிழ்ப் பதிப்புத் தொழில்? மனந்திறக்கும் பதிப்பாளர்கள்
எப்படி இருக்கிறது தமிழ்ப் பதிப்புத் தொழில்? மனந்திறக்கும் பதிப்பாளர்கள்

ஒரு தொழிலையையும் விட்டுவைக்கவில்லை கொரோனா. தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் புத்தகக் கடைகள் மூடப்பட்டன. பதிப்பகங்கள் செயலிழந்தன. அச்சகங்கள், பைண்டிங், டிடிபி, புத்தக வடிவமைப்பு என பதிப்புத் தொழிலுடன் தொடர்புடைய பல துணைத் தொழில்களும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. புத்தக விற்பனையில் இருந்து தொடங்குகிறது பதிப்புத் தொழிலின் வளர்ச்சி. கடந்த ஐந்து மாதங்களாக என்ன செய்வதென புரியாமல் இருந்த பதிப்பகங்கள் மெல்ல இயங்கத் தொடங்கியுள்ளன. ஆனால் இழந்த பொருளாதார நஷ்டத்தை ஈடுகட்ட பல மாதங்கள் ஆகலாம்.

எப்படி இருக்கிறது பதிப்புத் தொழில் என சில பதிப்பாளர்களிடம் பேசினோம்...

ஒளிவண்ணன், எமரால்டு பதிப்பகம், துணைத்தலைவர் பப்பாசி
மக்களிடம் புத்தகங்கள் வாங்கும் பழக்கம் பொதுவாகவே குறைவாகத்தான் இருக்கிறது. இந்த கொரோனா நாட்களில் புத்தகம் வாங்குவது அடியோடு குறைந்துவிட்டது. பழைய புத்தகங்கள் விற்பனையானால்தான் புதிய புத்தகங்களைப் பதிப்பிக்கலாம். அச்சுத் தொழிலும் முடங்கிவிட்டது. பதிப்பகங்களைப் பொறுத்தவரையில், ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சிதான் மிகப்பெரும் நம்பிக்கை. அதுவே நடைபெறமுடியாத நிலை.

ஈரோடு, நெய்வேலி, மதுரை ஆகிய நகரங்களில் நடக்கும் புத்தகக் காட்சிகளும் சிறிய அளவில் உதவியாக இருப்பவை. அவையும் நடக்கவில்லை. பதிப்பாளர்களில் இரண்டு வகை. பள்ளி, கல்லூரி பாடநூல்களை வெளியிடுபவர்கள். அடுத்து பொதுவான நூல்களை வெளியிடும் பதிப்பாளர்கள். பல மாதங்களாக கல்வி நிலையங்கள் மூடிக்கிடக்கின்றன. ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. மாணவர்கள் புத்தகங்கள் வாங்கமுடியவில்லை. கடன் வாங்கி புத்தகங்களை அச்சிட்டவர்கள் என்ன செய்வார்கள்?

புத்தகக் கடைகள், பதிப்பகங்கள் பற்றி அரசுக்கு கவனமில்லை. எந்த அறிவிப்புகளும் வரவில்லை. புத்தகங்கள்தான் ஒரு தலைமுறையை உருவாக்கக்கூடியவை. அறிவையும் கற்பனையையும் புத்தகங்களே வளர்க்கும். கணக்கு வழக்கு இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்காலம் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை. இன்னொரு ஆபத்தும் பிடிஎப் வடிவத்தில் வந்திருக்கிறது. அது தவறான நடைமுறை என்பதே தெரியாமல் செயல்படுகிறார்கள். இது மிகப்பெரிய அளவுக்கு பதிப்புத் தொழிலைப் பாதிக்கும்.

சிவ. செந்தில்நாதன், பரிசல் பதிப்பகம்
எனக்கு என்ன செய்வதென்று புரியாமல் நாட்கள் கடந்துள்ளன. ஏதோ நல்ல வாசகர்கள் இருப்பதால் என்னைப் போன்ற பதிப்பாளர்கள் பிழைத்துக்கொண்டிருக்கிறோம். மார்ச் முதலே பல மாதங்களாக புத்தகக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மக்களிடம் பணப் புழக்கம் இல்லை. நாங்கள் புதிய புத்தகங்களைக் கொண்டுவரமுடியவில்லை. புத்தகக் கடைக்கு வாடகை கொடுக்ககூட பலரிடம் பணமில்லை. மாதக்கணக்கில் பூட்டி வைத்திருக்கிறார்கள்.

நூலக ஆணையும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அன்பளிப்பு வழங்கினால்தான் ஆர்டர் கிடைக்கும். தமிழக அரசு பதிப்பாளர்களுக்கு வழங்கும் தொகையில் நலவாரியத்திற்காக 2.5 சதவீதம் பிடித்தம் செய்தார்கள். அந்தப் பணத்தில் ஒரு பைசாவைக்கூட திருப்பித் தரவில்லை. சில்லறை புத்தக விற்பனையைத் தவிர்த்து, சென்னை புத்தகக் காட்சியை நம்பித்தான் இருக்கிறோம். இந்த காலகட்டத்தில் அதற்கும் வாய்ப்பில்லை.

புத்தகம் என்றால் பதிப்பாளர் மட்டுமில்லை. டிடிபி, லேஅவுட், அச்சு, பைண்டிங் வரையில் எத்தனையோ பேர் உள்ளார்கள். இங்கே பாதிப்பு அளவில்லாமல் இருக்கிறது. இப்போதுதான் இயல்பு நிலை திரும்பிவருகிறது. பதிப்பகங்கள் திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் இயங்கத் தொடங்கியுள்ளன. அரசு ஏதாவது செய்தால்தான் தமிழ்ப் பதிப்புத் தொழில் மீண்டும் புத்துயிர் பெறும்.

மு. வேடியப்பன், டிஸ்கவரி புக் பேலஸ்
பதிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. புத்தகத் தயாரிப்புப் பணிகள் நடைபெறவில்லை. அனைத்தும் முடங்கியுள்ளன. தமிழகத்தில் பதிப்புத் தொழில் ஸீரோ நிலையில்தான் இருக்கிறது. இனிமேல்தான் வளர்ச்சியை நோக்கி எழுந்துவரவேண்டும். ஐந்து மாதங்களாக எதுவும் நடக்கவில்லை.

நாங்கள் புத்தகங்களை சலுகை விலையில் வாசகர்களுக்குக் கொடுத்தோம். வாட்ஸ் ஆப் மூலம் ஆயிரம் புதிய வாசகர்கள் எங்களுக்குக் கிடைத்தார்கள். அதில் கிடைத்த சிறு வருமானத்தை வைத்து நாட்களை நகர்த்தினோம். மறுபதிப்பு கொண்டுவரமுடியவில்லை. காலச்சுவடு பதிப்பகம் சென்னை அலுவலகத்தை மூடிவிட்டது. விகடன் பிரசுரம் புதிய புத்தக வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கிழக்குப் பதிப்பகம் புத்தக விற்பனையகங்களைக் குறைத்துள்ளது.
பிரபலமான பெரிய பதிப்பகங்கள்கூட பொருளாதார இழப்புகளால் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன.

ஊரடங்கில் நல்ல விஷயமும் நடந்துள்ளது நம்பிக்கை அளிக்கிறது. பல புதிய வாசகர்கள் உருவாகியுள்ளார்கள். கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் எஸ்ரா போன்றவர்கள் தங்களுடைய படைப்புகளுக்கு அதிக அளவில் விமர்சனம் வருவதாகக் கூறியுள்ளார்கள். இந்த நாட்களில் பல வாசகர்கள் வாங்கிவைத்திருந்த புத்தகங்களை அதிக அளவில் வாசிக்கத் தொடங்கியுள்ளனர்.  தமிழகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு சுமார் ரூ. 10 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகும் என்று கணித்தால், பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com