பணமில்லை; பயிற்சியில்லை.. ஆனால் உலக அரங்கில் சாதித்த தங்க மங்கை ஹிமா
பின்லாந்தின் டாம்பியர் நகரில் நடந்த உலக தடகள சாம்பியன் போட்டியில் 400 மீட்டர் பந்தய தூரத்தை 51.46 நொடிகளில் கடந்து தங்கம் வென்றுள்ளார் 18 வயதேயான ஹிமா தாஸ். இவர் தங்கம் வென்றதன் மூலமாக 20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற இந்தியப் பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.
இந்தியாவிற்கு மீண்டுமொரு மறக்க முடியாத தருணத்தை ஹிமா தாஸ் அளித்துள்ளார். இந்திய நாட்டின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டியதற்காக அவரை லட்சக்கணக்கான மக்கள் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சுரேஷ் பிரபு, முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் என பலரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஹிமா தாஸ் பிறந்த அசாம் மாநிலம் மட்டுமல்ல..ஒட்டுமொத்த இந்தியாவும் அவரது சாதனையை கொண்டாடுகிறது.
18 மாதங்களில் சாதித்த ஹிமா
18 வயதான ஹிமா தாஸ் கடந்த ஆண்டு தான் தனது தடகள வாழ்க்கையை தொடங்கினார். பதினெட்டே மாதங்களில் அவர் சர்வதேச போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நாகயோன் மாவட்டத்தின் திங் கிராமத்தை சேர்ந்தவர் ஹிமா. பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு விவசாயி. ஹிமாவுக்கு முறையான பயிற்சி அளிக்க அவரது தந்தையிடம் பணம்கூட இல்லை. அவரது ஊரில் கூட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.
ஹிமா தன்னுடைய விவசாய நிலத்தில் ஓடிதான் பயிற்சி எடுத்துக் கொண்டார். 18 மாதங்களுக்கு முன்பு அசாமின் சிவசாஹர் நகரில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில்தான் முதன்முதலாக பங்கேற்றார். தன்னுடைய கடுமையான உழைப்பால் தற்போது இந்த உச்சத்தை எட்டியுள்ளார். ஹிமா தாஸ் தற்போது 100 மீ, 200 மீ, 400 மீ மற்றும் 400 மீட்டர் ரிலே ஆகியவற்றில் பங்கெடுத்து வருகிறார்.
ஹிமா தாஸும் மற்ற தங்க மங்கைகளும்
ஹிமா தாஸ் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார். பி.டி.உஷா ஆஸ்திரேலியாவின் கன்பெர்ராவில் நடைபெற்ற போட்டியின் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 51.61நொடிகளில் கடந்ததே அவரது சாதனையாக இருந்தது. தற்போது ஹிமா தாஸ் 51.46 நொடிகளில் ஓடி அவரது சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த ஜூன் 27ஆம் தேதி குவாஹத்தியில் நடைபெற்ற போட்டியில் தனது தடகள வரலாற்றின் உச்சமாக 400 மீட்டரை 51.13 நொடிகள் கடந்து இருந்தார். அப்போது, இந்தியாவின் முன்னாள் தடகள வீராங்கனை கே.எம்.பெனமல் 2001 ஆம் ஆண்டு பதிவு செய்திருந்த 51.21 நொடிகள் என்ற ரெக்காடை முறியடித்தார். பி.டி.உஷாவின் சாதனையை முதலில் முறியடித்தவர் கே.எம்.பெனமல்தான். இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது மஞ்ஜூட் கவுர் 51.05 நொடிகளில் 400 மீட்டர் பந்தயத்தில் செய்த ரெக்காடே இன்று வரை யாராலும் முறியடிக்கப்படாமல் உள்ளது.
ஒரே ஆண்டில் அசுர வளர்ச்சி
1. 400மீ ஓட்டப்பந்தயங்களில்..
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பாட்டியால பெடரேஷன் கோப்பை தொடரில் 53.21 நொடிகள்
ஏப்ரல் மாதம் நடைபெற்ற கோல்டன் கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் 51.32 நொடிகள்
ஜூன் மாதம் குவாஹத்தியில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் தொடரில் 51.13 நொடிகள்
2. 200மீ ஓட்டப்பந்தயங்களில்..
2017 மே மாதம் பாங்காங்கில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் 25.27 நொடிகள்
பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற இந்திய ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் 24.26 நொடிகள்
ஜூன் 27ம் தேதி குவாஹத்தியில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் 23.10 நொடிகள்
3. 100 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில்..
2017, மே 15ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஜிபி போட்டியில் 12.57 நொடிகள்
2018ம் ஆண்டு நடைபெற்ற பாட்டியாலா இந்தியன் ஜிபி போட்டியில் 11.74 நொடிகள்
கால்பந்தில் இருந்து ஓட்டபந்தயம்
ஹிமா தாஸ் தொடக்கத்தில் கால்பந்து வீராங்கனையாகதான் இருந்து வந்தார். அதற்கான பயிற்சியையும் தனது பள்ளி விளையாட்டு ஆசிரியரிடம் எடுத்துக் கொண்டார். ஆனால், கால்பந்தாட்டத்தைக் காட்டிலும் தனிப்பட்ட ஓட்டப்பந்தயங்களில் கவனம் செலுத்துமாறு ஆசிரியர் அறிவுரை கூறியுள்ளார். அவரது அறிவுரையை ஏற்று ஹிமா தாஸும் ஓட்டப்பந்தயங்களில் கவனம் செலுத்தினார்.