சாக்‌ஷி மாலிக் முதல் நீரஜ் வரை... - இந்திய விளையாட்டில் ஹரியானா கெத்து காட்டுவது எப்படி?

சாக்‌ஷி மாலிக் முதல் நீரஜ் வரை... - இந்திய விளையாட்டில் ஹரியானா கெத்து காட்டுவது எப்படி?
சாக்‌ஷி மாலிக் முதல் நீரஜ் வரை... - இந்திய விளையாட்டில் ஹரியானா கெத்து காட்டுவது எப்படி?

இந்திய விளையாட்டு வரலாற்றில் கடந்த பல தசாப்தங்களாக கோலோச்சி வருகின்றனர் ஹரியானா மாநில வீரர்கள். இந்தியாவின் அறிவிக்கப்படாத விளையாட்டு மையமாகவும் ஹரியானா திகழ்ந்து வருகிறது. இது எப்படி தொடங்கியது, அம்மக்கள் விளையாட்டில் ஏன் இவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளார்கள் என்பதை விரிவாக பார்ப்போம்.

டோக்கியோ ஒலிம்பிக் இந்தியாவுக்கு மறக்க முடியாத ஒலிம்பிக்காக மாறியிருக்கிறது. எந்த ஒலிம்பிக்கிலும் இல்லாத வகையில் இந்த முறை இந்தியாவில் இருந்து 127 விளையாட்டு வீரர்கள் வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை, பாட்மிண்டன், குதிரையேற்றம், ஃபென்சிங், கோல்ஃப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, பாய்மரம், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளுதூக்குதல் உள்ளிட்ட 18 வெவ்வேறு விளையாட்டுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினர். என்றாலும், இந்தியாவின் பதக்க கனவை நிறைவேற்றியது தனிநபர் என்ற முறையில் ஆறு பேர். பதக்கம் வென்ற ஆறு பேரில் இந்தியாவின் தங்கப் பதக்க ஏக்கத்தை தீர்த்த நீரஜ் சோப்ரா, வெள்ளி வென்ற ரவிக்குமார் தாஹியா, வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா ஆகிய மூன்று பேர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒவ்வொரு முறையும் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவை பெருமைப்படுத்த வைக்கும் ஹரியானாவே இந்த முறையும் இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளது. அதிக அளவு வீரர்களை ஒலிம்பிக்கிற்கு அனுப்பியதும் ஹரியானவே. 31 தடகள வீரர்கள் அந்த மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக்கில் கலந்துகொண்டுள்ளனர். இது மொத்த இந்திய அணியில் 25% ஆகும்.

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தனிநபர் ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற பட்டியலில் ஹரியானா மாநிலத்துக்கே முதலிடம். காமன்வெல்த், தேசிய சாம்பியன்ஷிப் என்று மற்ற போட்டி தொடர்களிலும் ஹரியானாவே இந்திய அளவில் டாப். 2014-ஆம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுக்களில் இந்தியா வென்ற 64 பதக்கங்களில் 19 ஹரியானா வீரர்கள் வென்றது. ஏன் 2010-ல் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற 101-இல் 27 பதக்கங்கள் ஹரியானா வீரர்கள் வென்றவை.

இப்படி தடகளம் முதல் மல்யுத்தம், கபடி போன்ற விளையாட்டுகளில் ஹரியானாதான் இந்தியாவின் விளையாட்டு மையமாக திகழ்ந்து வருகிறது. கடந்த தசாப்தங்களில் இந்தியா வென்ற பதக்கங்கள் இந்த உண்மையை உணர்த்தும். கடந்த இரண்டு தசாப்தங்களாக, நம் நாடு நுழைந்த ஒவ்வொரு விளையாட்டிலும், மற்ற மாநிலங்களை விட, ஹரியானாவே மொத்த விளையாட்டு வீரர்களில் பெரும் பகுதியை வழங்கி இருக்கிறது.

சாத்தியமானது எப்படி? இந்திய மொத்த மக்கள் தொகையில் 2% அளவே உள்ள ஹரியானா ஒரு விவசாய மாநிலம். விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட இந்த மாநில மக்களிடம் விளையாட்டின் மீது அதீத ஆர்வம் வந்தன் பின்னணியில் இந்திய ராணுவம் பிரதான அங்கம் வகிக்கிறது என்றால் பலரும் ஆச்சர்யப்படக்கூடும். ஆனால், அதுதான் உண்மை. 1970 பசுமை புரட்சிக்கு பின்னரே ஹரியானா விவசாயத்தில் பல மடங்கு முன்னேறியது. ஆனால், அதற்கு முன்னர் இம்மாநில இளைஞர்கள் பலரும் தங்கள் குடும்ப வருமானத்திற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளில் சேரத் தொடங்கினர். விவசாய பின்னணியில் இருந்து ராணுவத்தில் இணைந்த இவர்களில் சிலர் ராணுவ ஆதரவுடன் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களாக மாறினர்.

ஹரியானா சார்பில் ஆரம்பத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒலிம்பியன்கள் அனைவரும் ராணுவ பின்னணியைக் கொண்டிருந்தனர். 1956 ஒலிம்பிக்கில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹரியானா வீரர்களான லீலா ராம் மற்றும் தேவி சிங், ராம் மேஹர் ஆகிய மூவரும் ராணுவத்தில் இருந்தவர்கள். இதுபோன்ற ஹரியானா ஒலிம்பியன்கள் ஓய்வு பெற்ற பிறகு, தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க தொடங்கினர். அடுத்தடுத்த தலைமுறையினரை விளையாட்டுகளில் கலந்துகொள்ள ஊக்குவிக்கவும் அவர்களை வடிவமைக்கவும் அவர்கள் பெரும் பங்கு வகித்தனர்.

அவர்களிடம் பயிற்சி பெற்றவர்கள் விளையாட்டுகள் அசத்த அவர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட சலுகைகள் கிடைத்தன. இப்படி, நாளைடைவில் பதக்கம் வெல்வது என்பதை தாண்டி ஓர் அரசு வேலை கிடைப்பதற்கும் அதனால் வாழ்வாதாரம் பெறுவதற்கும் ஒரு வழியாக விளையாட்டு இவர்களில் ஊறிப்போனது. இதனால் கிராம மட்டங்களில் தடகளம், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் இம்மாநில மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினர். ஆண்கள் மட்டுமே என்றில்லாமல், பெண்களுக்கும் விளையாட்டின் கதவை திறந்துவிட்டனர். இதற்கு சிறந்த உதாரணம் ஹரியானாவில் பிரபல மல்யுத்த குடும்பத்தைச் சேர்ந்த ஆறு மல்யுத்த வீரர்களான போகத் சகோதரிகள் மற்றும் சாக்‌ஷி மாலிக் போன்றோர்.

என்றாலும் இதற்கு விதை போட்டது ராணுவம்தான். 1960, 1964, 1968 ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட இந்தியாவின் மூத்த ஒலிம்பியன்களில் ஒருவரான உதய் சந்த், ``முன்பு, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் நாட்டின் மல்யுத்த மையங்களாக இருந்தன. அவர்களுக்கு அரசு ஆதரவும் பின்னணியில் இருந்தது. ஆனால் ஹரியானா விளையாட்டில் தன்னை நிலைநிறுத்தியதில் இராணுவத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இன்று, இந்திய மல்யுத்தம் என்றால் ஹரியானா என்றளவுக்கு வந்துள்ளது என்றால் அதற்கும் இது மிகப்பெரிய காரணமாக அமைத்தது" என்று முன்பு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த உதய் சந்த், ராணுவ வீரராக ஓய்வு பெற்ற பிறகு, இரண்டு தசாப்தங்களாக பல இளம்வீரர்களுக்கு பயிற்சியளித்தார். இவரிடம் பயிற்சி பெற்றவர்களில் ஏராளமானோர் சர்வதேச பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இவர் மட்டுமல்ல, பலர் இதுபோன்று பயிற்சி மையங்களை தொடங்கி இளைஞர்களை பயிற்றுவிப்பதை தலைமுறை தலைமுறைகளாக தொடர்ந்தனர். அவர்களால் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு ஆழமாக வேரூன்றப்பட்டு தற்போது இந்த நிலையை ஏற்றியிருக்கிறது.

ஹரியானாவும் மல்யுத்தமும்! மல்யுத்த விளையாட்டையும் ஹரியானாவையும் பிரிக்க முடியாதது. அந்த அளவுக்கு அந்த மாநில மக்கள் மத்தியில் மல்யுத்தம் ஊறிப்போய் இருக்கிறது. அதிலும் ஹரியானாவின் கிராமப்புறங்களில் மல்யுத்தம் ஒருங்கிணைந்தே காணப்படுகிறது. எந்தளவுக்கு என்றல், ஹரியானாவின் கிராமங்களில் முன்பு, ஒரு முடி ரொக்கப் பணம் அல்லது நெய் பானை போன்ற வித்தியாசமான பரிசுகளுடன் வாரம் வாரம் மல்யுத்த போட்டிகள் நடக்குமாம். இந்த பழமையான கலாசாரம்தான் இன்று உலக தரத்தில் சிறந்த விளங்கும் மல்யுத்த வீரர்களை உருவாக்கி வருகிறது. மேலும், மல்யுத்த விளையாட்டு என்றாலே இந்தியாவில் ஹரியானா மாநிலம்தான் என பேர் சொல்லும் அளவுக்கு சர்வதேச அளவில் தங்களது காலடியை அழுத்தமாக பதிவு செய்து வருகின்றனர் அம்மாநில வீரர்கள்.

வரலாற்று சிறப்புமிக்க பானிபட் போர் நிகழ்ந்த மண்ணுக்கு பக்கத்தில் உள்ள சோனிபட் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமமும் மல்யுத்த விளையாட்டுக்கு பெயர்பெற்றது என்றாலும், நஹ்ரி மற்றும் நஹ்ரா ஆகிய இரண்டு பஞ்சாயத்துகளும் மல்யுத்த வீரர்களை உற்பத்தி செய்வதில் புகழ்பெற்றவை. இந்த கிராமங்கள் முழுவதும் மல்யுத்த வீரர்களுக்கு குறைவே இல்லை. அர்ஜுனா விருது பெற்ற இரண்டு மல்யுத்த வீரர்கள் சத்வீர் சிங் மற்றும் மகாவீர் சிங் மற்றும் 18 வயதில், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் போட்டியிட்ட இளம் மல்யுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆன ஆகியோர் அமித் குமார் தஹியா இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள்தான். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவிக்குமார் தாஹியா நஹ்ரி கிராமத்தைச் சேர்ந்தவர்தான்.

1956 ஒலிம்பிக் முதலே மல்யுத்தத்தில் பிரிவில் ஹரியானா வீரர்கள் பங்கெடுத்து வருகின்றனர். 1956-ல் லீலா ராம் மற்றும் தேவி சிங் ஆகியோர் முதன்முதலாக மல்யுத்தத்தில் ஹரியானா சார்பில் கலந்துகொண்டனர். பின்னர் 1961 உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த உதய் சந்த். இப்படி ஒன்றிரெண்டாக ஆரம்பித்த இந்த எண்ணிக்கை தற்போது 10 முதல் 15 வீரர்களை சர்வேதேச போட்டிகளுக்கு அனுப்பும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

மல்யுத்தத்தை போல் குத்துச்சண்டை போட்டிகளிலும் ஹரியானா வீரர்கள் இந்திய அளவில் குறிப்பிட்ட பங்காற்றி வருகின்றனர். 2004 மற்றும் 2016-க்கு இடையிலான நான்கு ஒலிம்பிக்கில், ஹரியானாவைச் சேர்ந்த 14 ஆண்கள் குத்துச்சண்டை விளையாட்டுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கின்றனர்.

மாநில அரசின் ஆதரவு! ராணுவம் ஹரியானா விளையாட்டு வீரர்களுக்கு ஆரம்ப உந்துதலைக் கொடுத்து என்றால், அவர்களை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றதில் அம்மாநில அரசின் பங்கு அதிகம். யார் ஆட்சி வந்தாலும், கட்சி பாகுபாடின்றி வீரர்களை ஊக்கப்படுத்த தவறவில்லை. உள்கட்டமைப்பு ரீதியாக மேம்படுத்தவில்லை என்றாலும், ஹரியானா மாநில அரசு சர்வதேச பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு மிக உயர்ந்த பணப் பரிசுகளை வழங்கி வருகிறது. ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு மத்திய அரசு ரூ.75 லட்சம் தரும் வேளையில் ஹரியானா அரசு ரூ.6 கோடி வழங்குகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றால் ரூ.1.5 கோடி கொடுக்கிறது.

2000-ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹரியானாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அப்போதைய முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா முதன்முதலாக ஒரு கோடி ரூபாய் பரிசாக அறிவித்தார். இந்த பரிசுத் தொகை அம்மாநிலத்தின் கிராமப்புறங்கள் மற்றும் நகரங்கள் முழுவதும் வெகுவாக பேசப்பட்டது. இது மக்களை கவரவும் செய்தது. சவுதாலா முதல் பூபிந்தர் சிங் ஹூடா, தற்போதைய முதல்வர் மனோகர் லால் கட்டார் வரை அனைவரும் விளையாட்டுக்கு முன்னுரிமை அளித்தனர்.

இதேபோல் அரசு வேலைகளும். ஹாக்கி வீரர் மம்தா கராப் மற்றும் கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா ஆகியோர் விளையாட்டில் சிறந்து விளங்கியதற்காக டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளனர். குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். இதுவரை 19 விளையாட்டு வீரர்கள் டிஎஸ்பிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் சப்-இன்ஸ்பெக்டர்களாகவும் இன்ஸ்பெக்டர்களாகவும் ஆனார்கள். இதுபோன்று மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சியே வீரர்களுக்கு அவர்களின் திறமைகளை மேம்படுத்தி சிறந்து விளங்க வைக்கிறது.

``பண ஊக்கத்தொகை மற்றும் அரசு வேலை போன்றவை அதிக இளைஞர்களை விளையாட்டுகளை நோக்கி ஈர்க்கிறது. இது ஹரியானாவின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். இதனால் கிராமப்புறங்களில், ஒரு விளையாட்டு வீரர் மிகுந்த மரியாதையை பெறுகிறார். அது மற்றவர்களை விளையாட்டுகளில் சேர தூண்டுகிறது" என்று குத்துச்சண்டை விஜேந்தர் சிங் ஒருமுறை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அரசு உதவி போன்றவற்றால், கபடி, வட்டு எறிதல், துப்பாக்கிச் சுடுதல், ஹாக்கி என கிரிக்கெட்டை தாண்டி பல விளையாட்டுகளில் நாளுக்கு நாள் ஹரியானா வீரர்கள் தங்கள் ஈடுபடுத்தி திறனை மேம்படுத்தி வருகின்றனர்.

இதனால், 2008 பெய்ஜிங்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், 2016 ரியோ ஒலிம்பிக் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நாட்டின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற யோகேஷ்வர் தத், ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற சுஷில் குமார், மற்றும் சீமா புனியா, இதோ இப்போது நீரஜ் சோப்ரா, ரவிக்குமார் தாஹியா, பஜ்ரங் பூனியா போன்ற வீரர்கள் சர்வதேச தளங்களில் இந்தியாவை தலைநிமிர செய்து வருகின்றனர்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com