நம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் ?

நம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் ?
நம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் ?

பொங்கல் பண்டிகை என்றாலே உற்சாகம்தான். காரணங்கள் பல இருந்தாலும், நகரவாசிகளுக்கு தொடர் விடுமுறை என்பதே பொங்கல் பண்டிகைக்கான குதூகலத்துக்கு முதல்படியாக இருக்கிறது. அதுவும், இந்தாண்டு சனி, ஞாயிறு என சேர்த்து மொத்தம் 6 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் பொங்கல் ஏற்கெனவே களைக்கட்டியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவில்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் பல்வேறு வடிவங்களில் மக்கள் கொண்டாடுகின்றனர். மேலும் தாய்லாந்து நாட்டில் ‘சொங்க்ரான்’ என்ற பெயரிலும், லாவோஸில் ‘பிம லாவோ’ என்ற பெயரிலும், மியான்மரில் ‘திங்க்யான்’ என்ற பெயரிலும், நேபாளத்தில் ‘மாகே சங்கராந்தி’ என்ற பெயரிலும், இலங்கையில் புத்தாண்டாகவும் இப்பண்டிகையைக் கொண்டாடி அந்தந்த நாடுகளின் மக்கள் மகிழ்கிறார்கள். 

பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாள் மட்டுமல்ல, இந்த உலகை வாழவைக்கும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாகவும் இருக்கிறது. கதிரவனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்விழா நமது முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளது. சூரிய வழிபாடு நமதுநாட்டில் தொன்றுதொட்டு நிலவி வருவதாகும். நாட்டின் பல இடங்களில் பழமையான சூரியன் கோவில்கள் இன்றும் உள்ளன. எனவே, நம் நாட்டில் "மகர சங்கராந்தி" நாளில் மற்ற மாநிலங்களில் என்னவெல்லாம் செய்கிறார்கள், எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள், பொங்கலின் சுவை பிற மொழிப் பேசும் மாநிலங்களில் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

லொஹரி

பஞ்சாப், ஹரியானா, இமாச்சாலப் பிரதேசம் மாநிலங்களில் அறுவடைத் திருநாளை "லொஹரி" என்ற பெயரிலும், ஹரியானாவில் "மாகி" என்ற பெயரிலும் கொண்டாடி மகிழ்கிறார்கள். இமாச்சல பிரதேசத்தில் "மகா சாஜா" என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் பெயர்கள் வேறாக இருந்தாலும் கொண்டாடும் முறை ஒன்றுதான். பஞ்சாப் மாநில மக்களின் முக்கியப் பண்டிகை லொஹரிதான். எனவே இதனை மாற்று மதத்தினரும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள். லொஹரிபண்டிகையன்று பஞ்சாப் குடும்பத்தினர் அனைவரும் தீயை மூட்டி அதைச் சுற்றிலும் அமர்ந்து கொள்வார்கள். அப்போது பாரம்பரிய பாடல்களுடன் நடனமாடி மகிழ்கிறார்கள். லொஹிரி பண்டிகை இனிப்பாக எள் மற்றும் வெல்லம் கலந்து செய்த பண்டங்கள் வழங்கப்படும். 

மகர் சங்கராந்தி

மகர்சங்கராந்தி என்ற பெயரிலேயே உத்தரப்பிரதேசம், பீகாரிலும், ராஜஸ்தானில் "மகர் சக்ராத்" என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.ஆனால், அறுவடை நாளாக ஒரு பக்கம் இருந்தாலும். இதனை பாவங்களை தீர்க்கும் நன் நாளாகவே அம்மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். எனவே, மகரசங்கராந்தி தினத்தன்று கங்கை, யமுனை, நர்மதா போன்ற புண்ணிய நதிகளில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், மகர சங்ராந்தியின் குதூகலம் மற்றும் கொண்டாட்டங்கள் நதிக்கரைகளில்தான் பார்க்கமுடியும். பனி காலம் என்பதால் உடலுக்குச் சூட்டைத் தரும் வெல்லம் மற்றும் எள் தவறாமல் இடம்பெறும். இத்துடன் கேழ்வரகுக் கிச்சடியும் செய்து சாப்பிடுகிறார்கள். 

பழங்குடியினரின் மகரசங்கராந்தி

ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மட்டும் ஆட்டம், பாட்டம் என இதை ஒரு வாரம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் என்பதால், தம் அறுவடைகளை முடித்த லாபத்தின் சந்தோஷத்தைக் கொண்டாட ஆண், பெண் இருபாலருமே மது அருந்துவதை பண்டிகையின் ஒரு அங்கமாகக் கருதுகிறார்கள். இந்த நாளுக்காக ஒரிசாவின் பூரி ஜெகநாத் கோயிலில் இரண்டுமுறை அலங்காரங்கள் செய்து சிறப்புப் பூஜைகள் செய்கிறார்கள். சத்தீஸ்கர் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவது உண்டு.

உத்ராயண்

குஜராத்தில் இந்தப் பண்டிகையின் பெயர் "உத்ராயண்". பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகை என்றுதான் அதைக் கூற வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் நபருக்கு ஒரு பட்டம் எனக் காலை முதல் மாலை வரை பறக்க விட்டபடியே இருக்கிறார்கள். பட்டங்களுக்காகவே மகர சங்ராந்தி அன்று அகில உலக அளவில் பட்டங்கள் பறக்கவிடும் போட்டிகளை அகமதாபாத், ராஜ்கோட், பரோடா மற்றும் சூரத் ஆகிய நகரங்களில் அரசே ஏற்று நடத்திவருகிறது. ஏராளமானவர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் பார்வையாளர்களாக வரும் வெளிநாட்டவர்களும் பட்டம் விடுவதற்காகப் பெரும்பாலான எண்ணிக்கையில் பங்கேற்பது உண்டு. இங்குள்ளவர்களுக்கு பலவகைகளான காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படும் 'உண்டியா' எனும் பதார்த்தத்தை பூரியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். 

போஹாலி பிஹூ

அஸாம் மாநிலத்தில் அறுவடைத் திருநாளை "போஹாலி பிஹூ" என்ற பெயரில், மகரசங்கராந்தி மாத்தின் முதல் நாள் கொண்டாடுகிறார்கள். போஹாலி பிஹூவக்கு முந்தைய நாளில் அஸாமிக்கள் உறவினர்களுடன் ஒரே இடத்தில் கூடி இரவு அசைவ உணவு விருந்தை ருசிப்பார்கள். போஹாலி பிஹூ நாளில் மூங்கில் மற்றும் வைக்கோல் கொண்டு 'மேஜி' என்றழைக்கப்படும் ஒன்றை பிரமிடுகள் வடிவில் செய்வார்கள். இதை அறுவடை செய்த நிலங்களில் அமைத்து பூஜை செய்து நாம் போகியில் எரிப்பதுபோல் எரித்து விடுவார்கள். அசாம் மாநில அரசு இரண்டு நாள் அரசு விடுமுறை அளிக்கிறது. மேற்கு வங்கத்தில் ‘பௌஸ் சங்கராந்தி’என்ற பெயரில் அனுசரிக்கப்படுகிறது. 

ஆந்திரம், கர்நாடகம்

ஆந்திரம் மாநிலத்தில் மகரசங்கராந்தி என்ற பெயரிலேயே கொண்டாடப்படுகிறது. இங்கும் மகர சங்ராந்தி என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், பெரும்பாலும் நம் பொங்கல் திருநாளைப் போல்தான். முதல் நாள் போகி, மறுநாள் மகர சங்ராந்தி மற்றும் மூன்றாவது நாள் கன்னுமா என மூன்று நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள். பானையில் சூரியப் பொங்கல் வைத்து உண்டு மகிழ்கிறார்கள். இவர்களின் கன்னுமா என்பது மாட்டுப் பொங்கலாகும். முதல் இருநாள் மட்டும் அரசு விடுமுறை. கர்நாடகாவிலும் மகர சங்ராந்தி என்ற பெயரிலேயே அழைக்கப்படும் பொங்கல் இங்கு ஒரேஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com