"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்

"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்
"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்

இந்தியாவில் கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் சென்னையில் கோரத்தாண்டவமாடிய கொரோனா தற்போது கிராமங்களில் அடுத்தக்கட்ட பாய்ச்சலை தொடங்கி பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை ஆற்றினாலும், அதனால் சாமானிய மக்களின் வாழ்வு என்னவோ தினமும் கேள்விக்குறியாகிக் கொண்டே செல்கிறது.

அரசு தளர்வுகளை அறிவித்து இழந்த வாழ்வாதாரத்தை வெல்ல உதவினாலும், மக்களிடம் ஆழப்பதிந்திருக்கும் கொரோனா குறித்த பயத்தை வெல்ல யார் உதவுவது என்ற கேள்வி இங்கு எழுகிறது. அந்த பயத்தின் பலன் தான் இன்று சாமானியர்கள் தங்களது தொழிலை தூக்கி எறிந்து விட்டு, மாற்றுத்தொழிலுக்கு மாறியிருப்பது. இங்கு இதையாவது நடத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் மலைப்பகுதிகளில் வாழும் கிராம மக்கள் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தை எப்படி சமாளிக்கிறார்கள், அவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு முழுமையாக சென்று சேர்ந்திருக்கிறதா, என்ற கேள்வி எழுந்தது. அதனை தெரிந்து கொள்ள களக்காடு முதுமலைப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கீதா விடம் பேசினேன்.

கொரோனா தொற்று சம்பந்தமான விழிப்புணர்வு மலைப்பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் எப்படி இருக்கிறது?

உண்மையில் மிக நன்றாகவே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஊடகம். அதன் மூலம் தான் கொரோனாத் தொற்று சம்பந்தமான தகவல்களை அறிந்து கொண்டோம். முதல் இரண்டு மாதங்களுக்கு யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அத்தியாவசிய தேவைக்களுக்காக வெளியே வரும் நபர்கள் முக கவங்களை அணிந்து கொள்வர். வீட்டிற்கு திரும்பும் போது கை கால்களை தண்ணீரை வைத்து சுத்தமாக கழுவிக் கொள்வர்.

வருமானத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? போக்குவரத்து வசதி கூட இல்லையே?

நான் வாழ்ந்து கொண்டிருப்பது மலை அடிவாரமான அகஸ்தியர் நகர் காணி குடியிருப்பு. அங்கு கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்களுக்குத் தேவையான பொருட்களை நாங்கள் வாங்க வேண்டும் என்றால், மலையில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள வி.கே.புரத்திற்கு தான் வர வேண்டும். இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் வந்து விடுவார்கள்.
வாகனமில்லாதவர்கள் நடந்து சென்றுதான் பொருட்களை வாங்க வேண்டும்.

பயத்தின் காரணமாக வீட்டினுள் இருந்த இரண்டு மாதங்களில் வனத்துறை சார்பில் எங்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. ரேஷன் பொருட்களும் கிடைத்தன. அதில் அரிசி கிடைத்தது. ஆற்றில் செல்லும் மீன்களை பிடித்து குழம்பு வைத்துக் கொண்டோம். மூன்று வேளையும் சோறுதான். அது போக எங்களுக்கு சொந்தமான இடத்தில் கப்பக்கிழங்கை விளைவித்து அவித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். தற்போது மழைக்காலம் என்பதால் அதற்கு பாதகம் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களாக சாலைகளின் ஓரம் உள்ள செடிகளை பிடுங்குவதற்கான வேலையை வனத்துறையினர் வழங்கி வருகின்றனர். அதன் மூலம் எங்களது வாழ்வாதாரம் கொஞ்சம் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

மருத்துவத் தேவை மற்றும் இதர தேவைகளுக்கு என்ன செய்கிறீர்கள்?

இது வரை எங்கள் கிராமத்தில் யாருக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட வில்லை. இந்த இடைப்பட்ட காலங்களில் ஒரு சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ஆனால் அதனை கைவைத்திய முறையில் செய்த கஷாயம் கொண்டே சரிசெய்து கொண்டோம். வாரத்தில் சனிக்கிழமை அன்று, நடமாடும் மருத்துவமனை மலைக்கு வரும். அதிலும் நாங்கள் சோதனை செய்து கொள்வோம். இந்த கொரோனா ஊரடங்கில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நடமாடும் மருத்துவமனை வருகிறது.

குழந்தைகளுக்கான கல்வித் தேவை எப்படியிருக்கிறது. ஆன்லைன் கல்விக்கு அங்கு சாத்தியம் இருக்கிறதா?

அதுதான் இங்கு பெரும் பிரச்னை. இங்குள்ள பள்ளியில் 10 வகுப்பு வரை மட்டுமே உள்ளது. ஆகையால் மேற்படிப்பிற்காக குழந்தைகள் மலையின் கீழ் தான் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும் குழந்தைகள் காலை 6.30 மணி பேருந்தை பிடிக்க வேண்டும். மாலை 7.30 பேருந்தைப் பிடிக்க வேண்டும். அகஸ்தியர் காணி குடியிருப்பில் 20 குடும்பங்களுக்கு இன்று வரை மின்சாரம் வழங்கப்பட வில்லை. இதற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இன்னும் வந்த பாடியில்லை. அங்கு இருக்கும் குழந்தைகள் இன்று வரை மண்ணெண்ணெய் விளக்கில் தான் படிக்கிறார்கள்.

ஆன்லைன் வழிக்கல்விக்கு இங்கு சுத்தமாக வாய்ப்பே இல்லை. ஏனெனில் இங்கு செல்போன் டவர் கிடையாது. ஆனால் சில நாட்கள் முன்பு பி.எஸ்.என்.எல் அதிகாரிகரிகள் மலையின் மீது டவர் நிறுவுவதற்கான இடங்களை ஆராய்ந்து சென்றனர்.

மக்கள் கூட்டம் இல்லாமல் இருப்பது காட்டிற்கு தூய்மைக்கு எந்த அளவுக்கு உதவியிருக்கிறது?

அது காட்டுக்கு மட்டுமல்ல எங்களின் வாழ்விற்கும் உதவியிருக்கிறது. பொதுவாக இந்த ஆடி மாதத்தில் சொரிமுத்து ஐய்யனார் கோவில் திருவிழா நடக்கும். அதற்கு ஏராளாமான பக்தர்கள் வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆற்றிலே விட்டுச் சென்று விடுவார்கள். நாங்கள் அந்தத் தண்ணீரைதான் குடிப்போம். ஆனால் மக்கள் வரத்து இல்லாததால் தண்ணீர் கண்ணாடி மாதிரி இருக்கிறது. காடும் மிகத்தூய்மையாக இருக்கிறது.

- கல்யாணி பாண்டியன் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com