1875-ல் தொடங்கிய தகராறு... அசாம் - மிசோரம் எல்லைப் பிரச்னையும் பின்புலமும்: ஒரு பார்வை

1875-ல் தொடங்கிய தகராறு... அசாம் - மிசோரம் எல்லைப் பிரச்னையும் பின்புலமும்: ஒரு பார்வை
1875-ல் தொடங்கிய தகராறு... அசாம் - மிசோரம் எல்லைப் பிரச்னையும் பின்புலமும்: ஒரு பார்வை

அசாம் - மிசோரம் எல்லை பிரச்னையில் ஏற்பட்ட வன்முறையில் 6 காவல்துறையினர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு என்ன காரணம் என்பதை விரிவாக பார்ப்போம்.

அசாமின் கச்சார் மற்றும் மிசோரமின் கோலாசிப் மாவட்டத்திற்கு இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. குறிப்பாக அய்தலாங் நார் என்ற பகுதியை அசாம் காவல்துறையினர், கடந்த ஜூன் மாதம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நாள் முதலாக அங்கு பதற்றமான சூழல் நிலவியது. எல்லைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் பணியில் இருந்த அசாம் காவல்துறையினர் மீது கம்பு, கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். மிசோரம் காவல்துறையினர் இயந்திர துப்பாக்கிகளை வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அசாம் அரசு குற்றம்சாட்டியுள்ளது. பின்னர் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், அசாம் மாநில காவல்துறையினர் 6 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

எல்லையில் இருந்த விவசாயிகளின் குடிசை வீடுகள், அரசு வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சாலையில் சென்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நிலைமை மோசமானதால் அங்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டு இருமாநில காவல்துறையினரும் வெளியேற்றப்பட்டனர்.

இருதரப்பு மோதலுக்கான காரணம்: அசாம் - மிசோரம் மாநிலங்கள் சுமார் 164 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. அசாம் மாநிலத்தில் பாரக் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள கச்சார், கரிம்கஞ்ச், ஹாய்லாகன்டி ஆகிய மாவட்டங்களும், மிசோரம் மாநிலத்தின் அய்சவால், கொலாசிப், மமித் ஆகிய மாவட்டங்களும் எல்லைப் பகுதிகளாகும். இந்த 160 கி.மீ எல்லையில் ஏற்பட்டுள்ள கலவரம் தற்போது சுதந்திர இந்தியாவில் புதிய சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. ஆனால், இந்த எல்லைப் பிரச்னை சுந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயேர் காலத்தில் இருந்து தொடர்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

மிசோரம், 1972-இல் யூனியன் பிரதேசமாகவும், 1986-இல் ஒரு மாநிலமாகவும் மாறுவதற்கு முன்பு, அசாமில் லுஷாய் ஹில்ஸ் மாவட்டம் என்ற பகுதியில் இருந்தது. இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஐஸ்வால் ஆக இருந்தது. லுஷாய் மலைகளை கச்சார் சமவெளியில் இருந்து பிரிக்கும் அறிவிப்பு 1875-ஆம் ஆண்டு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து அசாம் - மிசோரம் எல்லைத் தகராறு இருந்து வருகிறது.

இதனையடுத்து, 1933-ம் ஆண்டு மற்றொரு எல்லைப் பிரிவினை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 1875-இல் மிசோரம் மக்களின் கருத்தை கேட்டு இந்த எல்லை பிரிக்கப்பட்ட நிலையில் 1933-இல் மிசோரம் மக்களின் ஒப்புதலைப் பெறாமல் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த பிரிவினையை ஏற்க முடியாது என்றும், 1875 அறிவிப்பை அதற்கு பதிலாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் மிசோரம் மாநிலத்தின் நிலைப்பாடு. இன்றளவும் இந்த நிலைப்பாட்டில் தான் மிசோராம் மாநிலம் இருந்து வருகிறது. ஆனால், அசாம் 1933 எல்லை பிரிவினையை பின்பற்றி வருகிறது. இந்த எதிரெதிர் நிலைப்பாடே மோதலுக்கு மையப்புள்ளியாக இருந்து வருகிறது.

எல்லைத் தொடர்பான சர்ச்சை பல ஆண்டுகளாக நீட்டித்து வருகிறது என்றாலும், 1995-ம் ஆண்டு முதல் அதனை தீர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. என்றாலும், தொடர்ச்சியாக பல முறை சிறிதும் பெரிதுமாக கலவரங்கள் இரு மாநிலங்களிலும் நடந்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கூட அசாமின் கச்சார் மாவட்டத்தில் உள்ள லைலாப்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், மிசோரம் மாநிலத்தில் உள்ள கோலாஷிப் மாவட்டத்தின் பொதுமக்கள் சிலரும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை மையம் அமைத்ததற்காக இந்த கலவரம் ஏற்பட்டது.

ஜூலை 26 அன்று என்ன நடந்தது?

ஜூலை 26 அன்று மாலை 4.40 மணியளவில் அசாமின் கச்சார் மாவட்டத்தில் லைலாப்பூரை ஒட்டியுள்ள மிசோரத்தின் கோலாசிப் மாவட்டத்தில் உள்ள எல்லை நகரமான வைரெங்டேயில் வன்முறை வெடித்தது. முன்னதாக, ஜூலை 24-ஆம் தேதி ஷில்லாங்கிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விசிட் அடித்தவர், அங்கு பேசும்போது, ``நரேந்திர மோடி அரசு வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையிலான அனைத்து எல்லை மோதல்களையும் தீர்க்க ஆர்வமாக இருக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

இப்படி அறிவித்த 48 மணி நேரத்திற்குப் பிறகு, அசாம் - மிசோரம் எல்லை ஒரு பெரிய பதற்றத்தை அதிகரித்தது. இரு மாநில முதல்வர்களான ஜோரம்தங்கா மற்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துக்கொண்டே வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ``ஜூலை 25-ஆம் தேதி, சில்சார் மாவட்ட வன அதிகாரியிடமிருந்து லைசால்பூர் அருகே எல்லை அருகே உள்ள தங்கள் மாநில வனப்பகுதியில் மிசோரம் கட்டும் சாலை குறித்து எங்கள் அரசு நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. ரிசர்வ் வனப்பகுதிக்குள் ஒரு சாலை நிர்மாணிக்கப்படுவது மட்டுமல்ல, வனப்பகுதிக்குள் மிசோரம் காவல்துறையின் புதிய ஆயுதக் களஞ்சியமும் இருந்தது என்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜூலை 26-ஆம் தேதி போலீஸ் ஐ.ஜி, கச்சார் எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆணையர் தலைமையிலான குழு இந்த இடத்தை பார்வையிடச் சென்றது.

அந்தக் குழு, சிஆர்பிஎஃப் முகாமுக்கு அடுத்ததாக உருவாக்கப்பட்ட புறக்காவல் நிலையம் அகற்றப்பட வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தபோது, ஒரு மலையடிவாரத்தில் இருந்த ஏராளமான பொதுமக்கள் குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இது எங்கள் அதிகாரிகளை சிலரை மரணத்திற்கும், சிலரை காயங்கள் ஏற்படவும் வழிவகுத்தது. பொதுமக்கள் ஆயுதம் ஏந்தியிருந்தார்கள் என்பதைக் காட்ட என்னிடம் வீடியோ ஆதாரங்கள் உள்ளன. இப்போது கேள்வி என்னவென்றால், அவர்களுக்கு ஆயுதம் கொடுத்தது யார்?" என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஆனால் மிசோராம் அரசோ, ``போலீஸ் ஐஜி ஒருவர் தலைமையில், சுமார் 200 அசாம் காவல்துறையினர் காலை 11.30 மணியளவில் மிசோரம் எல்லைக்குள் நுழைந்து, சிஆர்பிஎஃப் பணியாளர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்பு காவலை மீறி சென்று, வைரெங்டே மற்றும் லைலாப்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த பல வாகனங்களையும் அசாம் காவல்துறை சேதப்படுத்தியது" என்று அசாம் அரசு மீது குற்றம் சாட்டியது. இதுபோன்று ஒருவரை ஒருவர் இரு மாநில அரசுகளும், முதல்வர்களும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

நிலைமை மோசமடைய மத்திய உள்துறை அமைச்சர், இரு மாநில முதல்வர்களுடன் நேரடியாக தொலைப்பேசியில் பேசி எல்லைப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண வலியுறுத்துடன், எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு மாநில காவல்துறையையும் வெளியேற்றிவிட்டு சிஆர்பிஎப் போலீஸாரை அங்கு நிறுத்த உத்தரவிட்டார். தற்போது, அமைதி நிலவி வந்தாலும், காலம் காலமாக நடந்து வரும் இந்த எல்லை பிரச்சனையை விரைவில் சரி செய்ய வேண்டும் என்பதே இரு மாநில மக்களையும் தாண்டி நிலவும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com