அடல்ட் பேய் கதைகளிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதான் விடுதலை...? ‘ஹாஸ்டல்’

அடல்ட் பேய் கதைகளிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதான் விடுதலை...? ‘ஹாஸ்டல்’
அடல்ட் பேய் கதைகளிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதான் விடுதலை...? ‘ஹாஸ்டல்’

அடி கப்பியாரே கூட்டமணி (Adi Kapyare Kootamani) என்ற மலையாள சினிமாவின் தமிழ் ரீமேக்கான ‘ஹாஸ்டல்’ இன்று வெளியாகியிருக்கிறது. அசோக் செல்வன், சதீஸ், ப்ரியா பவானி சங்கர், நாசர், முனிஷ்காந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்த சினிமாவை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

ஆண்கள் தங்கும் விடுதிக்குள் அசோக் செல்வன் உதவியுடன் ரகசியமாக விசிட் செய்கிறார் நாயகி ப்ரியா பவானி சங்கர். பிறகு யார் கண்ணிலும் படாமல் அவர் அந்த ஹாஸ்டலை விட்டு வெளியேறினாரா இல்லையா என்பதே படத்தின் திரைக்கதை. விடுதி வார்டனாக முனிஷ்காந்த், பொறுப்பாளராக நாசர் என பலரும் கலந்துகட்டி ஹாஸ்டலை ஒரு நகைச்சுவை சினிமாவாக கொடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் அது நகைச்சுவை சினிமாவாகவும் இல்லாமல் 18+ சினிமாவாகவும் வராமல் அந்தரத்தில் நின்றதே துன்பம்.

அடிப்படையில் இப்படத்தில் காட்டப்படுவதுபோல இத்தனை செயற்கையான ஹாஸ்டலை நாம் எங்குமே பார்த்திருக்க முடியாது. கிபி ஆயிரத்து தொல்லாயிரத்து எண்பதுகளின் மாணவர்களைப்போல நடந்து கொள்கிறார்கள் விடுதி மாணவர்கள். அவர்களது அறையுமே கூட அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை 80 காலகட்டங்களில் வந்திருந்தால் இப்படம் ஓரளவு வெற்றிகண்டிருக்கலாம்.

ஆசை அடங்காத பெண் பேய் ஒரு ஆண் இணையை அடைய முயல்வதும், அதனை விரட்ட பாதிரியார் ஜெபம் செய்வதும் என அரத பழைய அதே பேய் கதையை மீண்டும் மீண்டும் திரையில் காட்டி ரசிகர்களுக்கு பேய் பிடிக்க வைத்திருக்கிறார்கள்.

“நமக்கெல்லாம் பேஸ்ட் இருக்க வரைக்கும் தான் மரியாதை” என்பது போன்ற அறுவெறுப்பான வசனங்களை அடல்ட் காமெடி என இயக்குநர் நினைத்திருப்பார்போல. அசூயை உணர்வைத்தரும் பேசக் கூசும் வார்த்தைகளை, வசனங்களை, காட்சிகளை துளியும் தயக்கமின்றி படம் முழுக்க அள்ளித்தெளித்திருத்திருக்கிறார் இயக்குநர். பேயினை காட்ட தகுந்த கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இல்லை. பட்ஜட் பிரச்னையாக இருக்கலாம். இந்த சிக்கலை இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் சேர்ந்து சரி செய்ய முயன்றிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் பூபோ ஷாஷி படம் முழுக்க கேப் விடாமல் இசைத்து தள்ளியிருக்கிறார். படத்தின் கதையில், திரைக்கதையில், வசனத்தில் இல்லாத ஆழத்தை எப்படி இசைத்தும் உயிரேற்றித்தர முடியாது. ஒளிப்பதிவாளர் ப்ரவின் குமார் பேய் இருக்கும்போது ஒரு ஷாட் பேய் மறைவதற்கு ஒரு ஷாட் என கம்போஸ் செய்திருக்கிறார். வேகமாக ரஷ்யன் ஆங்கிளில் கேமராவை ஆட்டினால் பேய் மறைந்து போகும் உணர்வை ரசிகர்கள் பெற முடியுமா என்ன...? விட்டலாச்சாரியா காலத்து டெக்னிக் இது. சின்னச் சின்ன சாப்ட்வேர்களில் கூட எத்தனையோ நல்ல கிராபிக்ஸ் வேலைகளை செய்யமுடியும் எனும் காலத்தில் கேமரா டெக்னிக் பயன்படுத்தி பேயை திரைப்படுத்தியிருப்பது இந்திய சினிமா பேய்களுக்கு படக்குழு செய்திருக்கும் அவமானம்.

குறைவான காட்சிகளே சதீஸ் வருகிறார். முதல் பாதியின் துவக்கத்தில் வரும் சதீஸ் பிறகு ரொம்ப காட்சிகளுக்கு காணாமல் போய்விடுகிறார். பிறகு மீண்டும் இணைந்து கொள்கிறார். அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பு ஓகே. நாசர் போன்ற சீனியர் நடிகர்கள் இது போன்ற மூன்றாம் தர கதைகளில் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் இருப்பது அவர்களை வளர்த்த சினிமாவிற்கு அவர்கள் செய்யும் மரியாதையாக இருக்கும். முனிஷ் காந்தின் வசனங்கள் சில ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன. ரவிமரியான் முட்டாள் அடியாட்களை வைத்துக் கொண்டு நாயகியை தேடுகிறார். இதே போன்ற கதாபாத்திரத்தில் எத்தனை படங்கள் தான் ரவிமரியான் நடிப்பார். சமீபத்தில் வெளியான இடியட் சினிமாவிலும் ரவிமரியானுக்கு இதே போன்றதொரு கதாபாத்திரம் தான் கொடுத்திருந்தார்கள். ஹாஸ்டலில் ரவிமரியானின் காட்சிகள் தனி ட்ராக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

அடல்ட் பேய் காமெடி படங்களுக்கு தமிழ் சினிமாவானது முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது என்பதே ஹாஸ்டல் நமக்குச் சொல்லும் செய்தி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com