வாட்ஸ் அப் தராத வசதிகள், 'ரியல் டைம்' மெசேஜிங் சேவை... - எப்படி இருக்கிறது 'Honk' செயலி?

வாட்ஸ் அப் தராத வசதிகள், 'ரியல் டைம்' மெசேஜிங் சேவை... - எப்படி இருக்கிறது 'Honk' செயலி?
வாட்ஸ் அப் தராத வசதிகள், 'ரியல் டைம்' மெசேஜிங் சேவை... - எப்படி இருக்கிறது 'Honk' செயலி?

இணைய உலகில் புதிதாக ஒரு மெசேஜிங் செயலி அறிமுகம் ஆகியிருக்கிறது. 'மெசேஜிங் சேவையா? ஏற்கெனவே வாட்ஸ் அப் இருக்கிறது. டெலிகிராம் இருக்கிறது, ஃபேஸ்புக் மெசஞ்சரும், ஹைக்கும் இருக்கின்றனவே… இவை போதாது என்று புதிதாக ஒரு மெசேஜிங் சேவையா?' என அலுத்துக்கொள்ளத் தோன்றினாலும், 'அட அப்படியா!' என கேட்க வைக்கும் புதுமையான அம்சங்களுடன் அறிமுகம் ஆகியிருக்கிறது ஹாங்க் (Honk).

ஆம், ஹாங்க் - இந்தப் பெயரில்தான் புதிய மெசேஜிங் செயலி அறிமுகம் ஆகியிருக்கிறது. மெசேஜிங் செயலியில் என்ன புதுமை இருந்துவிட முடியும் என்ற சந்தேகம் இன்னமும் உங்களுக்கு இருந்தால், வாட்ஸ் அப் போன்ற மெசேஜிங் செயலிகளுக்கும், ஹாங்கிற்குமான முக்கிய வேறுபாட்டை தெரிந்து கொள்ளுங்கள்.

ஹாங்கில் செய்திகளை அனுப்புவதற்கான செண்ட் பட்டேனே கிடையாது. அது மட்டும் அல்ல; இதில் செய்திகளின் வரலாறும் கிடையாது. அதாவது, எல்லா செய்திகளும் பகிர்ப்பட்டு, படிக்கபட்டவுடன் மறைந்து விடும்.

'அட, கேட்க புதுமையாக தான் இருக்கிறது. ஆனால், செய்திகளை அனுப்பாமல் எப்படி நண்பர்களுடன் உரையாடுவது?' - இந்த கேள்விக்கு பதிலாக தான் ஹாங்கின் உடனடி உரையாடல் தன்மை அமைகிறது.

அதாவது, ரியல் டைம் உரையாடல். ஹாங்கில் நீங்கள் செய்திகளை டைப் செய்தால் போதும், அதை யாருக்கும் அனுப்ப வேண்டாம். ஏனெனில், அவர்கள் மறுமுனையில் இருந்த செய்திகளை படித்து, பதிலையும் டைப் செய்து, உடனடி உரையாடலில் பங்கேற்பார்கள். அதேபோல நண்பர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ளும்போதும், அவர்கள் டைப் செய்யும் செய்திகளை நீங்கள் போன் திரையில் பார்த்தபடி பதில் அளிக்கலாம்.

ஹாங்க் இதை 'லைவ் டைப்பிங் வசதி' என்கிறது. நேரடி பேச்சு போலவே ஒரு உடனடித்தன்மையை இதன்மூலம் பெறலாம் என்கிறது. அதற்கேற்ப, ஹாங்கில் உரையாடும்போது, உங்களுக்கு என்று ஒரு செய்தி குமிழும், அருகே உங்கள் நண்பர்கள் பதிலுக்கான குமிழும் தோன்றும்.

உங்கள் குமிழில் டைப் செய்யும்போதே நண்பர்கள் அதை வாசித்து, தங்கள் குமிழில் பதில் அளிக்கலாம். தப்பும் தவறுமாக டைப் செய்தாலும் அவையும் திரையில் தோன்றும். ஆனால், வளவளவென்று எல்லாம் டைப் செய்ய முடியாது. அதிகபட்சம் 160 எழுத்துகள்தான் அனுமதி. அதற்கு மேல் டைப் செய்ய வேண்டும் என்றால், அடுத்த செய்திதான். அதுவும் பழைய செய்தியை புதுப்பித்தால்தான் அடுத்த செய்தியை டைப் செய்ய முடியும்.

ஆக, ஏற்கெனவே படிக்கப்பட்ட செய்தி மறைந்துவிடும். எனவே, உரையாடல் வரலாறு எல்லாம் சேமிக்கப்படாது. எல்லாமே அந்த நொடி சார்ந்தது. ஒரு காலத்தில் இணையத்தில் பிரபலமாக இருந்த ஐ.ஆர்.சி எனப்படும் இணைய உரையாடல் வசதியை போன்றது இது.

'இன்ஸ்டண்ட் மெசேஜிங்' எனப்படும் உடனடி செய்தி வசதியும் இதே ரகம்தான். இந்த சுவாரஸ்யமான அம்சத்தைதான் நவீன மெசேஜிங்கில் ஹாங்க் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறது.

ஹாங்கில் செய்திகளை அனுப்ப முடியாதே தவிர, நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம். அதாவது, தகவல் அனுப்பலாம். இது ஹாங்க் என குறிப்பிடப்படுகிறது. நண்பர்கள் உரையாடலில் இல்லாதபோது இந்த வசதியை பயன்படுத்தலாம். அவசரம் என்றால், தொடர்ந்து ஹாங்குகளை அனுப்பி வைக்கலாம்.

உரையாடலில் ஈடுபடும்போது, வார்த்தைகளுடன் இமோஜிகளையும் பயன்படுத்தலாம். தேவை எனில், நமக்கான பிரத்யேக இமொஜிகளை வார்த்தைகளுடன் பொருத்து, வேண்டும்\போது அந்த மாய வார்த்தைகளை பயன்படுத்தலாம்.

போனில் உள்ள கேமராவையும் பயன்படுத்தி செய்திகளுடன் படங்களையும் பகிரலாம்.

ஹாங்க் செயலியை தரவிறக்கம் செய்தவுடன் பயனர் பெயர் பதிவு செய்து, மற்ற விவரங்களை சமர்பித்து நமக்கான கணக்கை உருவாக்கி கொள்ளலாம். இப்போதைக்கு ஐபோனில் அறிமுகம் ஆகியுள்ளது. ஆண்ட்ராய்டு வடிவம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாங்க் செயலி பற்றி மேலும் அறிய ஹாங்க் இணையதளம்: https://honk.me/

- சைபர்சிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com