ஓடிடி திரைப் பார்வை: 'ஹோம்' - இந்தியக் குடும்பங்கள் கொண்டாடத்தக்க சினிமா!

ஓடிடி திரைப் பார்வை: 'ஹோம்' - இந்தியக் குடும்பங்கள் கொண்டாடத்தக்க சினிமா!

ஓடிடி திரைப் பார்வை: 'ஹோம்' - இந்தியக் குடும்பங்கள் கொண்டாடத்தக்க சினிமா!
Published on

குடும்பம் என்கிற அமைப்பை விட்டு வெளியேறினால்தான் நமது வாழ்வு சுதந்திரமாக அமையும் என நினைப்பவரா நீங்கள்..? 'ஆம்' எனில் நீங்கள் தற்போது அனுபவிக்கும் சுதந்திரத்தை உங்களுக்கு தந்திருப்பதே உங்கள் குடும்பம்தான் என்கிற உண்மையைச் சொல்கிறது 'ஹோம்' எனும் மலையாள சினிமா.

அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் இப்படத்தை ரோஜின் தாமஸ் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் இந்திரன்ஸ், ஸ்ரீநாத் பாசி, மஞ்சு பிள்ளை உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். தன் முதல் சினிமாவை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் ஆண்டனி தனது அடுத்த சினிமாவை இயக்கும் முயற்சியில் இருக்கிறார். ஆலிவர் ட்விஸ்ட்டாக வரும் இந்திரன்ஸ் ஆண்டனியின் தந்தையாக நடித்திருக்கிறார்.

இளவயதில் வீடியோ கேசட் தொழில் செய்து வந்த ஆலிவர் ட்விஸ்ட் முதுமை நெருங்கும் காலத்தில் வீட்டில் இருக்கிறார். மனைவி, பிள்ளைகள் என எல்லோரும் அவர் மீது நல்ல அன்பு வைத்திருந்தாலும் கூட ஏதோ ஒரு சின்ன தாழ்வு மனப்பான்மை அவருக்கு இருக்கிறது. ஏற்கெனவே இரண்டாவது படம் சிக்கலில் இருக்கும் ஆண்டனிக்கு தன் காதலியுடன் சிறு முரண்களும் உருவாகிறது. இந்தக் கதாபாத்திரங்களுக்கு இடையே அழகான காட்சிகளுடன் இதமான நகர்கிறது 'ஹோம்' எனும் இந்த சினிமா.

இக்கதையின் ஹீரோவாக இந்திரன்ஸ் இருக்கிறார். படத்தின் துவக்கம் முதல் இறுதிவரை அவரே படத்தின் ஆன்ம அச்சு நகராமல் தாங்கிப் பிடிக்கிறார். நாம் நமது குடும்பத்தாருடன் என்னதான் அன்புடன் இருப்பதாக நினைத்துக் கொண்டாலும், உண்மையில் நாம் நமது குடும்ப உறுப்பினர்களை பரஸ்பரம் புரிந்து வைத்திருக்கிறோமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது 'ஹோம்'. அது குறித்து நம்மை ஒருமுறை சுயபரிசோதனை செய்துகொள்ளச் சொல்கிறது இந்த சினிமா.

கூடவே தற்கால இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு செல்போன்களும் சமூக வலைதளங்களும் எப்படி முட்டுக் கட்டையாக இருக்கின்றன என்கிற உண்மையை பிரசாரமற்ற வகையில் சுவாரஸ்யமான பாணியில் நமக்கு புரிய வைக்கிறது 'ஹோம்'.

வீட்டில் பிள்ளைகளால் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என வருந்தும் இந்திரன்ஸ் வாழ்க்கையும் அசாதாரமானதுதான். அதுவே 'ஹோம்' சினிமாவின் திரைக்கதை கொடுக்கும் சர்ப்ரைஸ். அவ்வகையில் சிறப்பான திரைக்கதையினை எழுதி வென்றுள்ளார் ரோஜின் தாமஸ். ஒளிப்பதிவு, களத்தேர்வு என எல்லாமே சிறப்பு. படத்தின் நீளம் சற்று அதிகம்தான் என்றாலும் நேரம் போவதே தெரியாத அளவிற்கு சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருக்கிறது இந்த பேமிலி டிராமா.

சில சினிமா விளம்பரங்களில் குடும்பங்கள் கொண்டாடும் என அறிவிப்பார்களே... உண்மையில் குடும்பங்கள் கொண்டாடும் சினிமாவாக இந்த 'ஹோம்' திரைப்படத்தைச் சொல்லலாம். இந்தியக் குடும்பங்கள் அவசியம் பார்க்க வேண்டிய சினிமா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com