பணம் பண்ண ப்ளான் B - 13: சிபில் ஸ்கோர் முதல் இஎம்ஐ வரை... வீட்டுக்கடனும் சில புரிதல்களும்!

பணம் பண்ண ப்ளான் B - 13: சிபில் ஸ்கோர் முதல் இஎம்ஐ வரை... வீட்டுக்கடனும் சில புரிதல்களும்!
பணம் பண்ண ப்ளான் B - 13: சிபில் ஸ்கோர் முதல் இஎம்ஐ வரை... வீட்டுக்கடனும் சில புரிதல்களும்!

'வீட்டுக்கடன் வாங்குவதற்கு இதைவிட சரியான தருணம் இருக்க முடியாது' என்பதை பலரும் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைந்தவட்டியில் வீட்டுக்கடன் கிடைக்கிறது. 6.7 சதவீதம் என்னும் வட்டியில் சில வங்கிகள் கடன் கொடுத்து வருகின்றன. பெரும்பாலான வங்கிகள் 7 சதவீதத்துக்குள் வீட்டுக்கடன் வைத்திருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த சூழலுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைந்த வட்டி விகிதமாகும். அதனால் வீடு வாங்குவதற்கு இதுவே சரியான தருணம். வீட்டுக்கடன் என்பது அவசியமான ஒன்று. ஆனால், அதை வாங்கும் முன் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

எவ்வளவு காலத்துக்கு கடன்? - வீட்டுக்கடன் பெரிய தொகைக்கு வாங்க இருக்கிறோம். அதனால் நீண்ட காலத்துக்கு வாங்குவதே சரி. ஆனால், மிகவும் நீண்ட காலத்துக்கு வாங்குவது சரியல்ல. 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை வாங்குவதே சரியானது என்பதே நிதி ஆலோசகர்களின் கருத்து. இதைவிட அதிக காலத்துக்கு வாங்குவதால் பெரிய அளவுக்கு இஎம்ஐ குறையாது. அதேசமயத்தில் கூடுதல் காலம் கடன் செலுத்த வேண்டி இருக்கும் என்பது சுமையாக மாறிவிடும். அதிக ஆண்டுகள் வேலை இருக்க வேண்டும், நிதி ஆதாரம் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கின்றன.

சிபில் ஸ்கோர்: வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன்பு உங்களுடைய சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்கிறது என்பதை கவனித்துகொள்வது நல்லது. 750-க்கு மேல் சிபில் ஸ்கோர் இருந்தால் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். ஒருவேளை குறைவாக இருந்தால் கூடுதல் வட்டி செலுத்த வேண்டி இருக்கும். அதேபோல வீட்டுக்கடனுக்குள் செல்வதற்கு முன்பே, சொந்த தொகை எவ்வளவு இருக்கிறது, எந்த வங்கியில் கடன் வாங்கப் போகிறோம், எவ்வளவு வட்டிக்கு கடன் வாங்கப் போகிறோம், எவ்வளவு இஎம்ஐ செலுத்த போகிறோம் என்பதை முழுமையாக தெரிந்த பிறகு வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கவும். இருக்கும் தொகைக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டால், அதன் பிறகு வீடு என்பது சென்டிமென்டாக மாறிவிடும். அதன் பிறகு எவ்வளவு வட்டி என்றாலும் கடன் வாங்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படுவோம்.

அவசர கால நிதி: வீட்டுக்கடன் என்பது நீண்ட கால பொறுப்பு. அதனால் அவசர கால நிதியை உருவாக்கி வைத்திருப்பவது அவசியம். வேலை இழப்பு ஏற்படலாம், மருத்துவ அல்லது அவசர கால செலவுகள் உருவாகலாம். அதனால், ஆறு மாதம் முதல் ஓர் ஆண்டு வரையிலான காலத்துக்கு அவசரகால நிதியை உருவாக்கி வைத்திருப்பவது அவசியம். தவிர, ஒருவருடைய மாத சம்பளத்தில் 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரைதான் கடனுக்கான இஎம்ஐ இருக்க வேண்டும். ஒருவேளை எந்தக் கடனும் இல்லை எனில் பிரச்னையில்லை. ஆனால், ஏற்கெனவே கார்கடன், பர்சனல் லோன் ஆகியவை இருக்கும் பட்சத்தில் அனைத்து இஎம்.ஐ.களின் அளவும் அதிகபட்சம் 40 சதவீதத்துக்கு மேல் செல்லக் கூடாது.

நீங்கள் சரியாக வீட்டுக்கடன் தவணை செலுத்திவருகிறீர்கள் என்றால், வீட்டுக்கடன் நிறுவனங்கள் டாப் அப் லோன் வழங்கும். ஆனால் கடன் கிடைக்கிறதே என்பதற்காக டாப் அப் லோன் வாங்க வேண்டாம். அந்த கடன் தேவையா, அதனை சரியாக கட்ட முடியுமா என்பதை தெரிந்துகொண்டே வாங்கவும்.

காப்பீடு: இதுபோல நீண்ட கால கடனில் இறங்கும்போது காப்பீடு என்பது மிகவும் அவசியம். வீட்டுக்கடனை இணைந்து காப்பீடு எடுத்துக்கொள்ளலாம். அல்லது பிரத்யேகமாக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துகொள்ளலாம். ஆனால், காப்பீடு இல்லாமல் வீடுக்கடனில் இறங்கவேண்டாம். எனக்கு தெரிந்து வீட்டுக்கடன் வாங்கி அடுத்த சில ஆண்டுகளில் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர்கள் அசாதாரண சூழலில் இறந்திருக்கிறார்கள். குடும்பத்துக்கு வருமானமும் இழப்பு, வீட்டுக்கான இஎம்ஐ-யும் செலுத்த வேண்டும் என்னும் சிக்கலில் பலர் சிக்கி இருக்கிறார்கள். அப்போது வேறு வழியில்லாமல் வீட்டை விற்க வேண்டி இருக்கிறது அல்லது இதர சேமிப்புகள் / சொத்துகளை விற்க வேண்டி இருக்கிறது. அதனால் வீட்டுக்கடன் வாங்கும்போது காப்பீடு என்பதை சேர்ந்தே திட்டமிடுங்கள்.

முதலீட்டுக்காக வீட்டுக்கடன் வாங்கும்போது, எவ்வளவு வாடகை வருமானம் கிடைக்கும், இஎம்ஐ எவ்வளவு, சொத்தின் மதிப்பு எவ்வளவு உயரும் என்பதை தெரிந்துகொண்டு வாங்குங்கள். முதலீட்டுக்கான வீட்டுக்கடன் வாங்குவது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், ரியல் எஸ்டேட்டில் இடத்துக்கு இடம் வாடகை வருமானம் மற்றும் சொத்தின் விலை மாறும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com