இயற்கையின் மாற்றத்தை வரவேற்கும் "ஹோலி"

இயற்கையின் மாற்றத்தை வரவேற்கும் "ஹோலி"

இயற்கையின் மாற்றத்தை வரவேற்கும் "ஹோலி"
Published on

இயற்கையோட பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை. இந்தப் பண்டிகை அரங்கபஞ்சமி தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் வட மாநிலங்களில் வண்ணமயமான ஹோலி பண்டிகை, குஜராத் மாநிலத்தில் 5 நாட்கள் கொண்டாடப்படும். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலிப் பண்டிகையின் முக்கியக் குறிக்கோளாகும். பனிக்காலத்திற்கு "டாட்டா" சொல்லிவிட்டு, வெயில் காலத்தை "வெல்கம்" செய்வதே ஹோலி பண்டிகையின் சிறப்பம்சம்.

இந்தப் பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும். இயற்கையின் மாற்றத்தை கொண்டாடும் பண்டிகை என்றாலும், இதற்கும் புராணக் கதைகள் இருக்கின்றன. கிருஷ்ண பகவான் தன் இளமை பருவத்தில் இப்பண்டிகைய கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை என்று வட மாநிலத்தவர்கள் நம்புகின்றனர். இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர். இந்தப் பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு.
இந்தப் பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, 'பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், 'குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.

ஹோலியின் புராணம்
இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும் என பேராசை கொண்டு கடுந்தவம் புரிந்து இப்படிப்பட்ட மரணம்தான் வேண்டும் என தவம் செய்து வரம் வாங்கி, பலவிதமான அட்டூழியங்களில் ஈடுபட்டான்.  இரணியனின் மகன் பிரகலாதனே அதை எதிர்த்தான். பிரகலாதன்,  மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். 
ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.

முதல் நாள் பூஜை

ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படும். அப்போது ஹோலிகா தகனமாவதை ஒட்டியும்,  பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாகக்குரல் எழுப்புவார்கள்.
தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள்  மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளைத் தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.

சைவ சமய ஹோலி புராணம்

பார்வதி தட்சனுக்கு மகளாகப் பிறந்தார். அப்போது சிவனை கணவனாக அடைய வேண்டி தவம் இருந்தாள். சிவனும் அவரது தவத்தை மெச்சி, பார்வதியை மணக்க தட்சனிடம் பெண் கேட்டார். சுடுகாட்டில் வசிக்கும் உனக்கு என் பெண்ணை தரமாட்டேன் என தட்சன் ஆணவத்துடன் கூறினான். இதனால் கோபம்கொண்ட சிவப்பெருமான் தன்னிலை மறந்து தவம் செய்யத் தொடங்கினார். உலக இயக்கங்கள் அனைத்தும் நின்றுவிட்டன. தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைக்க, மகாவிஷ்ணுவோ மன்மதனை அழைத்து மன்மத பாணம் விடுமாறு கூறினார். மன்மதன் விட்ட அம்பு சிவபெருமானை சீண்டியது. தனது தவத்தை கலைத்ததால் கோபம் கொண்ட சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். பின்னர் பார்வதி மீது மையல் கொண்டு, அவரை திருமணம் செய்தார். இதைத் தொடர்ந்து, தங்கள் இருவரையும் சேர்ப்பதற்காகவே எனது கணவர் மன்மதன் உதவி செய்தார். அவரை மீட்டு தாருங்கள் என்று மன்மதனின் மனைவி ரதி வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு சிவபெருமான் செவிசாய்த்து மீண்டும் மன்மதனை உயிர்த்தெழ செய்தார். இந்த நிகழ்வையொட்டியே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

காதலும், வண்ணமும்

ஹோலிப் காதலை வெளிப்படுத்தக் கூடிய பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர். வடமாநிலங்களில் மிகச் சிறப்பாக கொண்டாடுவதைப் போல், தென்னிந்தியாவில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் இடங்களில் ஹோலிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com