600 ஆண்டுகள் வரலாறு பேசும் உடையார் பாளையம் ஜமீன் கோட்டை! அழிவின் விளிம்பில் இருந்து மீட்குமா அரசு?

காலாட்கள் தோழ உடையார்கள் என்ற சந்ததியினர், உடையார்பாளையம் பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளனர். இந்த சந்ததியினரைப்பற்றிய குறிப்புகள் நாயக்கமன்னர்கள் வரலாறுகளில் பேசப்படுகிறது.
உடையார் கோட்டை
உடையார் கோட்டைPT

தமிழ் நாட்டில் மிகப்பழமையான அரண்மனைகளில் ஒன்று உடையார் பாளையம் அரண்மனை. இது 600 ஆண்டுகள் பழமையானது. 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்த அரண்மனைக்குள் சுமார் 60 அறைகள் இருக்கிறது. இந்த அரண்மனை சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1500களில் கட்டப்பட்டதென்றும், இதை கட்டியவர் சின்ன நல்லப்ப உடையவர் என்றும் கூறுகிறார்கள். இவர் தனது அரண்மனையை கட்டிய பின், அரண்மனையைச் சுற்றி பல கிராமங்களை உருவாக்கி இருக்கிறார் என்றும் அதனாலேயே உடையார் பாளையம் உருவானதாக வரலாறு கூறுகிறது.

இவர் அன்னியர்கள் படையெடுப்பின் சமயம் பல அரசர்களுக்கு தன் அரண்மனையில் அடைக்கலம் கொடுத்து காத்தவர் என்றும் அந்நிய படையெடுப்பில் காஞ்சிபுரத்திலுள்ள ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீ காமாட்சியம்பிகை ஸ்ரீ வரதராஜர் போன்ற பல பல தெய்வங்களை தனது அரண்மனையில் பாதுகாத்து வந்திருக்கிறார் என்றும் வரலாறு கூறுகிறது.

உடையார் பாளையத்திற்கு சென்றால் அச்சமின்றி வாழலாம் என்ற நம்பிக்கையை பல அரசர்களிடமிருந்து பெற்றவர். மிகுந்த தெய்வ பக்தி மிக்கவராததால், பிற தலங்களிலிருந்து அடைக்கலமாக இங்கு கொண்டுவரப்பட்ட மூர்த்திகளுக்கு ஒரு குறைவுமில்லாமல் நித்திய நைமித்திகங்கள் நடத்தப்பட்டனவாம்.

தவிரவும், இவர் பரம்பரை பல்லவர்களின் வழித்தோன்றல். ஆகவே.. இவர்களின் வழி வந்தவர்களை பிரம்ம வன்னியகுல சத்தியர்கள், கங்கானுஜ பார்கவ கோத்திரம், தோழ உடையார்கள் என்ற பட்டப்பெயருடன் விளங்கினர்.

பிற்காலத்தில், காலாட்கள் தோழ உடையார்கள் என்ற சந்ததியினர், உடையார்பாளையம் பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளனர். இந்த சந்ததியினரைப்பற்றிய குறிப்புகள் நாயக்கமன்னர்கள் வரலாறுகளில் பேசப்படுகிறது. காஞ்சிபுரத்தை பூர்விகமாகக் கொண்ட இவர்களை பற்றிய பெருமைகளை விளந்தை கல்வெட்டானது கூறுகிறது. பலமுறை காஞ்சிபுரத்தை படையெடுப்புகளிலிருந்து காத்ததால் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயிலில் உடையார் பாளையம் உற்சவமானது இன்று வரைக் கொண்டாடப்படுகிறது.

கங்கைக்கொண்ட சோழபுரம் இவர்களது ஆளுமையில் 400 ஆண்டுகளாக இருந்து இருக்கிறது. கங்கைக்கொண்ட சோழபுரத்தின் கோபுரக்கலசங்கள் சிங்க முகக்கிணறு ஆகியவை உடையார் பாளையம் ஆட்சியர்களின் காலத்தில் கட்டப்பட்டது எனவும், இவர்கள் காலத்தில் கோவில்கள் பலவும் புரனமைக்கப்பட்டுள்ளது எனவும் வரலாறின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.

இன்றும் இந்த அரண்மனையில் வேல் கம்பு அம்பாரி,பல்லக்கு போன்றவை பத்திரமாக உள்ளது. இவர்களின் வழி வந்த ஜமீன்களின் கண்காணிப்பில் அரண்மனையானது இருந்தாலும், அவர்களிடம் போதுமான நிதி வசதி இல்லாததால் இந்த அரண்மனையானது இன்று சிதலமுற்ற நிலையில் காணப்படுகிறது. இதில் எஞ்சி நிற்கும் கட்டிடத்தை அரசு பொறுப்பேற்று, இதை பாதுக்காக்க வேண்டும் என்று வரலாறை விரும்பும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com