எதனால் தோன்றியது மகளிர் தினம் ?

எதனால் தோன்றியது மகளிர் தினம் ?

எதனால் தோன்றியது மகளிர் தினம் ?
Published on


“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்” (குறள் 56) என்ற இந்தக் குறள் பெண் அளப்பறிய ஆற்றல் ​கொண்டவள். தன்​னையும் தன் கணவ​னையும் காக்கும் திறன் வாய்ந்தவள். வி​ரைந்து ​செயல்படும் ​​சோர்வில்லாதவள் என்ற ​பெண்ணின் ​பெரு​மை​யை எடுத்துறைப்பதாக திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகவே இந்துச் சமயமும் சரி, தமிழர் பாரம்பரியமும் சரி, நாம் அனைவரும் தாய் வழிச் சமூகமாகவே இருந்தோம், வாழ்ந்தோம்.  இடையே, ஏற்பட்ட சில மாறுதல்கள் பெண்களை ஆண்கள் அடக்கியாண்டு, அடிமைப்படுத்தினோம் என்பதே நிதர்சனமான உண்மை.

தங்களது தடைகளை தகர்த்து பெண்கள் சமூகத்தில் உரிய அங்கிகாரம் பெறுவதற்காக அவர்கள் நூற்றாண்டு போராட்டங்களை கடந்து இப்போது வந்துள்ளனர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றது அந்தக் காலம். ஆனால் கல் உடைக்கும் வேலையில் இருந்து கணினி துறை வரை அனைத்து துறைகளிலும் இன்றைக்கு மைல்கல்லாக மகளிர் விளங்கும் அளவுக்கு சாதனை படைத்து உயர்ந்துள்ளனர் என்றால் மிகையில்லை. இவ்வாறு சாதனை உயரத்தை எட்டி உள்ள மகளிர் சமுதாயத்திற்கு என்று ஒரு நாள் உலகெங்கும் ஒருங்கே கொண்டாடப்படுகிறது என்றால் அது தான் உலக மகளிர் தினம்.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி அன்று இந்த மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை விடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிடலாம். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டுவேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.

1857-ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பெண்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர். 1857-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி நியூயார்க்கில் இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன்பிறகு 1907-ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராட தொடங்கினர். 1910-ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் மாதம் 8-ந் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
இதையடுத்து 1921-ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண் டாடப்பட்டு வருகிறது. 1975-ம் ஆண்டு முதல் தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்திற்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த சாதனை நன்னாளில் மகளிரின் முன்னேற்றத்திற்கு நாமும் வாழ்த்துக்களை தெரிவிப்போம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com