வாஜ்பாய்-1998 முதல் மோடி-2022 வரை : அதிமுக, பாஜக கூட்டணி கடந்து வந்த பாதை

வாஜ்பாய்-1998 முதல் மோடி-2022 வரை : அதிமுக, பாஜக கூட்டணி கடந்து வந்த பாதை
வாஜ்பாய்-1998 முதல் மோடி-2022 வரை : அதிமுக, பாஜக கூட்டணி கடந்து வந்த பாதை

அதிமுக, பாஜக கூட்டணி கடந்து வந்த பாதையை பார்ப்போம்.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, 1998 ல் மக்களவைத் தேர்தலின்போது, பாரதிய ஜனதாவுடன் முதன்முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். ஆனால், 1999 ல் பாரதிய ஜனதா தலைமையிலான அரசுக்கான ஆதரவை அவர் திரும்பப் பெற்றார். இதையடுத்து, அப்போதைய வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பிறகு 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்தது அதிமுக. அதன்பின், ஜெயலலிதா மறைவு வரை பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி அமைக்கவில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா? லேடியா என்ற முழக்கத்துடன் ஜெயலலிதா பரப்புரை செய்தார். 2016 சட்டமன்றத் தேர்தலிலும், அதிமுக தனித்துப் போட்டியிட்டது. கூட்டணியில் இடம்பெற்ற சிறிய கட்சிகளும் அதிமுக சின்னத்திலேயே போட்டியிட்டன. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அதிமுக- பாரதிய ஜனதா இடையே கூட்டணி ஏற்பட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகளில் இந்த கூட்டணி இணைந்து போட்டியிட்டது. இதில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி தொடர்ந்தது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக, பெரும்பான்மையை இழந்து சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியானது. அதேவேளையில் 20 ஆண்டுகள் கழித்து பாரதிய ஜனதா கட்சிக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள். தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி தொடர்ந்தது. வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக - பாரதிய ஜனதா கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. ஆயினும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து அதிமுக நீடித்து வருவதாக பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


அதிமுக - பாஜக கூட்டணி கடந்து வந்த பாதை

  • 1998 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி
  • 1999-ல் பாஜக தலைமையிலான கூட்டணிக்கான ஆதரவை திரும்பப்பெற்றார் ஜெயலலிதா
  • 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்த அதிமுக
  • 2011 தேர்தலில் அதிமுக- தேமுதிக இடையே கூட்டணி
  • 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப்போட்டி
  • 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப்போட்டி
  • 2019 நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக - பாரதிய ஜனதா கூட்டணி
  • 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி
  • 2021 தேர்தலில் அதிமுக பிரதான எதிர்க்கட்சியானது, பாஜக 4 இடங்களில் வென்றது
  • 2021-ல் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்., அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்தது
  • 2022 நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக - பாரதிய ஜனதா கூட்டணி முறிவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com