'அன்னைத்தமிழில் அர்ச்சனை' முக்கியத்துவம் பெறுவது ஏன்? - வரலாறு சொல்வது என்ன?

'அன்னைத்தமிழில் அர்ச்சனை' முக்கியத்துவம் பெறுவது ஏன்? - வரலாறு சொல்வது என்ன?
'அன்னைத்தமிழில் அர்ச்சனை' முக்கியத்துவம் பெறுவது ஏன்? - வரலாறு சொல்வது என்ன?

''தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்'' என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அதன்படி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று இந்த திட்டம் தொடங்கியும் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை செய்யும் முறை ஏற்கெனவே இருந்ததா? இடையில் நிறுத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. கடந்த 1955-ம் ஆண்டில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டுமென வலியுறுத்தி போராட்டங்களும் நடந்துள்ளன. பல கட்டப் போராட்டங்களுக்கு பிறகு 1969-ம் ஆண்டு, லால்குடி அடுத்த பூவாளூரில் உள்ள திருமூலநாத சுவாமி கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அப்போதைய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன், அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என சட்டசபையில் அறிவித்தார்.

அதன்பின்பு, தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும் என அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மீண்டும் திரும்பப் பெறப்பட்டது. இப்பிரச்னை குறித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பாரம்பரியமாக செய்யப்பட்டு வந்த அர்ச்சனை முறையே தொடரலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். இதற்காக, அன்னைத் தமிழில் அர்ச்சனை என்கிற திட்டத்தையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, அன்னைத் தமிழில் அர்ச்சனை என்கிற அறிவிப்பு பலகையை நேற்றைய முன் தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த பலகையில், தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் இடம் பெற்றிருக்கும். அதை தொடர்பு கொண்டு பக்தர்கள் தங்களுக்கு விருப்பமான சுவாமிக்கு தமிழில் அர்ச்சனை செய்துக் கொள்ளலாம்.

இத்திட்டம் முதற்கட்டமாக வடபழனி உள்ளிட்ட 47 கோயில்களில் தொடங்கப்பட உள்ளது. அர்ச்சகர்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அரை நூற்றாண்டு காலமாக நீடித்து வந்த பிரச்னை தற்போது முடிவுக்கு வந்துள்ளது

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழ் மொழியில் வழிபாடு செய்யும் முறை குறைந்தது எப்படி?

பழங்காலம் தொட்டு தேவநாகரி, தமிழ் இரண்டுமே வழிபாட்டு மொழிகளாக தமிழகத்தில் இருந்துள்ளன. பத்து நூற்றாண்டுகளுக்கு முன் பக்தி மறுமலர்ச்சி இயக்கம் செயல் பட்ட காலத்திலேயே சைவத்தையும் வைணவத்தையும் பரப்புவதற்கு தமிழே பயன்படுத்தப்பட்டது. பிற்காலச் சோழர்களின் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் சமஸ்கிருத மொழிக்கு ஏற்றம் உண்டாயிற்று என வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

சோழர்காலத்தில் தான் சமஸ்கிருத மொழி தமிழுக்கு போட்டியாக தமிழ் நாட்டில் வேர் படரக் காரணம் என்றும் பல்லவர்கள் தான் முதலில் சமஸ்கிருத மொழியை தென்பகுதிக்கு கொண்டுவந்தார்கள் என்ற கருத்தும் உண்டு. தமிழ் ஆகமங்களை பல்லவ மன்னர்களுக்கு புரியும்படி வடமொழியில் சொல்ல வேண்டும், ஆதலால் எழுத்து வடிவு இல்லாமல் இருக்கும் வடமொழிக்காக கிரந்த எழுத்துக்களை தமிழ் சிவாச்சாரியார்கள் உருவாக்கி தமிழ் ஆகமங்களை கிரந்தத்தில் மொழிபெயர்த்தார்கள்.

பின் வந்த மன்னர்களின் ஆட்சியிலும் இந்நிலை இவ்வாறே தொடர, அப்போதிலிருந்தே தமிழ்மொழி இருட்டடிப்பு செய்யப்பட்டதாக தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1315-ம் ஆண்டு வாக்கில் விஜயநகர மன்னர் ஆண்ட காலத்தில் அவருடைய ராஜ பிரதிநிதியான திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டு வந்தார். இவ்வாறு வந்த பிறமொழித் தலைவர்கள் தமிழ் மேலோங்குவதை விரும்பவில்லை என்பதால் நாயக்கர்களின் ஆட்சியின் போது பெருங்கோவில்கள் அனைத்தும் சமஸ்கிருத மயமானது, பாடல்கள், எழுத்து ஏடுகள், சட்டங்கள் தெலுங்கு மொழியானது.

காலப்போக்கில் தமிழ் சிவாச்சாரியார்களை கோவிலுக்குள் அனுமதிப்பது தவிர்க்கப்பட்டு, ஆரிய உயர்சாதியினருக்கு மட்டுமே கோயில்களில் அனுமதி வழங்கப்பட்டு சமஸ்கிருதத்தில் மட்டுமே வழிபாடுகள் செய்யப்பட்டு ஒவ்வொன்றாக நடைமுறைகள் மாறின. பல ஆண்டுகளைக் கடந்து இந்த நிலை இன்றும் தொடர்கிறது. இன்றும் தமிழ் நாட்டில் உள்ள சில கோயில்களில் தெலுங்கும், சமஸ்கிருதமும் ஆளுமை செலுத்துகின்றன. இந்நிலையில்தான் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற முன்னெடுப்பை தமிழக அரசு எடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் டி.வி.சோமசுந்தரம் பேசுகையில், ``சட்டரீதியாக தொடுக்கப்பட்ட வழக்குகளும், சட்டத்தை மீறிய சிலரின் செல்வாக்குகளும் தான் இடையில் தமிழில் அர்ச்சனை செய்ய தடைபட்ட காரணங்கள். ஆகம விதியில் கடவுளுக்கு அர்ச்சனை செய்வது குறித்துதான் சொல்கிறதே தவிர, பக்தர்கள் சார்பில் செய்யப்படும் வழிபாடுகள் குறித்து ஆகமம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், சிலர் இல்லாததை இருக்கு என்று கூறி குழப்பம் ஏற்படுத்தியதால் ஏற்ப்பட்ட காலதாமதம் தான் இது.

1970 களில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் இதற்கான முன்னெடுப்புகள் நடந்தன. தமிழில் அர்ச்னை என்பதை ஆன்மிக நண்பர்கள் முதற்கொண்டு, ஆன்மிக தலைவர்கள் என எல்லோரும் வரவேற்றார்கள். 1970களில் உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒன்றில், ''அர்ச்சனை என்பது மத நடைமுறைகளில் ஒன்று தான். ஆனால், மொழி என்பது மதத்தின் ஒரு பகுதியல்ல" என்ற குறிப்பிடப்பட்டது. மொழிக்கான முக்கியத்துவம் என்ன அவசியம் என்பதை சட்டரீதியான கூற்றாக இதை பார்க்கலாம். ஆன்மிகத்திலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.

''தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறையை நாங்கள் வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை என்பது நல்ல விஷயம் தான். சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யும்போது ஒன்றும் புரிவதில்லை. தமிழில் அர்ச்சனை என்றபோது அது புரியும். அரசின் நடவடிக்கை பாராட்டக்கூடியது'' என்று பொதுமக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com