Historic Comeback: 100 ஆண்டுகளுக்குப் பிறகு... மீண்டு(ம்) வந்த "வனத் தோட்டக்காரர்"!
பிரேசிலிய டாபிர் என்ற மிகப்பெரிய நில பாலூட்டி உயிரினமானது 100 ஆண்டுகளுக்கு முன்பே தென் அமெரிக்க நாடுகளில் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. அதாவது 1914-ம் ஆண்டு இந்த உயிரினம் கேமிராவில் பதிவு செய்யப்பட்டது தான் கடைசியாக இருந்தது. அதன்பின் இந்த உயிரினத்தை எங்கும் பார்க்க முடியாததால், இந்த உயிரினம் அழிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில், பிரேசிலில் உள்ள Cunhambebe Park-ல் மூன்று டாபீர் உயிரினங்கள் கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது வியப்படைய வைத்துள்ளது. 2008 ஆம் ஆண்டு 38,000 ஹெக்டேர் பரப்பளவில் நிறுவப்பட்ட இந்த பூங்கா, அழிந்து வரும் உயிரினங்களுக்கான புகலிடமாகும். இங்குதான் ஒரு தாய் டாபீர் மற்றும் அதன் இரண்டு குட்டிகள் என மூன்று டாபீர்களும் பூங்காவில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துள்ளது. Rio de Janeiro's INEA நிறுவனம் வெளியிட்ட இந்த வீடியோ உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. மேலும், இயற்கை ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில், விலங்குகளின் பரிணாம வளர்ச்சி பிரமிக்க வைத்துள்ளது.
இதனால், இந்த வனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும், மீண்டும் விலங்குகளுக்கான புகலிடமாக மாற்றுவதற்கு மறுசீரமைப்பு முயற்சிகளைச் செய்யவும் முடியும் என மாநில சுற்றுச்சூழல் நிறுவனத்தைச் சேர்ந்த INEA (Instituto Estadual do Meio Ambiente)அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இயற்கையின் "வனத் தோட்டக்காரர்" என்று அழைக்கப்படும் இந்த டாபிர், காடு வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்லுயிர் பெருக்கத்திற்கு இன்றியமையாத ஒரு இனமாக உள்ளது. தாவரங்களை உட்கொள்வதன் மூலமும், கழிவுகளின் மூலம் விதைகளைப் பரப்புவதன் மூலமும், காடுகளை மீண்டும் உருவாக்க டாபீர் உதவுகிறது, அதேபோல், எண்ணற்ற உயிரினங்களுக்கு உயிர்நாடியாகவும் விளங்குகிறது. 2024 ஆம் ஆண்டு INEA அறிக்கையின்படி, Cunhambebe போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பல்லுயிர் பெருக்கம் அதிகரித்துள்ளது. நன்கு பராமரிக்கப்படும் உயிரினங்களின் வாழ்விடங்கள் பல்வேறு இனங்களின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. இது டாபீர் இனங்கள் மீண்டு(ம்) வந்ததற்குச் சான்றாக அமைந்துள்ளது.
சட்டவிரோதமாக உணவுக்காக வேட்டையாடப்படுதல், காடுகள் அழிப்பு, சாலைகள் விரிவாக்கம் என டாபீர் இனங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதால் இந்த இனங்கள் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டன. இதனால், டாபீர்கள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தன. பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் இந்த உயிரினங்களைக் கணிக்க முடியாது என்றும், திடீரென மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் எனவும் ஸ்காட்லாந்து அரசு அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறது. வேட்டையாடுதல் தடுப்புச் சட்டங்கள், வாழ்விட மறுசீரமைப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாமல் இல்லாமல் இருந்தால் டாபீர் இனங்கள் மீண்டும் அழிந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாபீர்கள் Pleistocene சகாப்தத்தில் வட அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது உள்ள டாபிர் இனம் என்ற ஒற்றை இனம் மட்டுமே. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியமான IUCN (International Union for Conservation of Nature) பட்டியலில் 46,300க்கும் மேற்பட்ட இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் சிகப்பு பட்டியலில் உள்ளன. அந்த பட்டியலில் டாபீர் இனங்களின் தகவல்களும் உள்ளன.
காண்டாமிருகம் இனத்தின் வகையைச் சேர்ந்த டாபீர்கள் நான்கு வகையாக உள்ளன.
பிரேசிலிய டாபிர் (Brazilian Tapir ), மலாயன் டாபிர் (Malayan tapir), பெயர்டின் டாபிர் (Baird's tapir) மற்றும் மலை டாபிர் (Mountain Tapir). பிரேசிலிய டாபிர்கள் தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் வாழ்கிறது.
டாபீர்கள் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
சுமார் 150 முதல் 250 கிலோ வரை எடைகொண்ட இந்த டாபீர்கள், சுமார் 2 மீ (6 அடி) நீளம் கொண்டவை.
தண்ணீர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் வாழும் இந்த உயிரினங்கள் நீச்சலில் மிகவும் திறமையானது. தும்பிக்கை போன்று இருக்கும் மூக்கை நீருக்கு அடியில் நீச்சல் அடிக்க பயன்படுத்தும்.
நீர்யானைகளைப் போல நீரின் அடிப்பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள தாவரங்களையும் உணவாக எடுத்துக் கொள்ளும். மேற்பரப்பில் இருக்கும்போது, பழங்கள், செடிகள், இலைகள் மற்றும் தாவரங்களை உணவாக எடுத்துக்கொள்ளும்.
சிறுத்தை, மலைப்பாம்பு போன்ற உயிரினங்களிடமிருந்து உயிர்வாழ்வதற்காகத் தண்ணீரின் அருகில் வாழ்ந்து வருகின்றன.
ஒரு டாபீர் 25 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர்வாழும். பெண் டாபீர்களின் கர்ப்பகாலம் சுமார் 13 மாதங்கள். குட்டிகள் ஒரு வருடம் வளர்ந்து வரும் வரை தாயின் கண்காணிப்பிலேயே இருக்கும்.
டாபீர் இனத்தின் குட்டிகள் பார்ப்பதற்கு மான்களைப் போன்று காணப்படும். உடல் முழுவதும் வெள்ளைநிறத்தில் கோடுகளும், புள்ளிகளும் காணப்படும். வளர வளர அவை மறைந்துவிடுகின்றன.
டாபீர்களை வேட்டையாக வந்தாலோ, அவற்றிற்கு பயத்தை ஏற்படுத்தினாலோ முணுமுணுக்கும் விதமாகவும், விசில்கள் அடிப்பது போன்றும் அதிக ஒலிகளை எழுப்புகின்றன.
டாபீர்களின் முன் கால்களில் நான்கு விரல்களும், பின் கால்களில் மூன்று விரல்களும் உள்ளன. டாபீர்கள் அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீ வேகத்தில் ஓடும்.
டாபீர்களுக்கு சிறிய கண்கள் இருப்பதால் இவற்றிற்கு கண்பார்வை குறைவு. ஆனால், வாசனையை நுகர்வதிலும், கேட்கும் திறனிலும் இவற்றை மிஞ்ச யாரும் இல்லை.
டாபிர்கள் பகலைவிட இரவு நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்படும்.
டாபீர்கள் 56 முதல் 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஈசீன் காலத்தில் (Eocene Epoch) பரிணாம வளர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
டாபீர் இனங்கள் மீண்டுவந்ததால் பெரிய சுற்றுச்சூழல் தாக்கங்கள் ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது. டாபீர்கள் இல்லாததால் பாதிக்கப்பட்ட சூழலானது மீண்டும் சமநிலையை மீட்டெடுக்கும் என நம்பப்படுகிறது. நாம் இப்போது இருந்து இயற்கையைப் பாதுகாத்து அழிவைத் தடுத்தால் இழந்த உயிரினங்களை மீட்டெடுக்கலாம், ஒரு காலத்தில் அழிந்துவிட்டதாகத் தோன்றிய வனவிலங்குகளின் தலைவிதியை மீண்டும் மாற்றி எழுதலாம் என ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.