நம் தாத்தா, பாட்டிகளுக்கு உகந்த ஸ்மார்ட்ஃபோன்களை நாடும் காலம் இது... ஏன்?

நம் தாத்தா, பாட்டிகளுக்கு உகந்த ஸ்மார்ட்ஃபோன்களை நாடும் காலம் இது... ஏன்?

நம் தாத்தா, பாட்டிகளுக்கு உகந்த ஸ்மார்ட்ஃபோன்களை நாடும் காலம் இது... ஏன்?

பலரும் மறந்துவிட்ட நோக்கியா ஃபோனில் இருந்தே இந்தக் கட்டுரையை துவங்கலாம். அதற்காக நோக்கியா புகழ் பாடுவதோ, பழமையின் பெருமை பேசுவதோ இந்தக் கட்டுரையின் நோக்கம் என நினைத்துவிட வேண்டாம். நோக்கியா ஃபோன் என்பது ஒரு குறியீடு அவ்வளவுதான். கொரோனா பேரிடர் காலம் ஆன்லைன் கல்விக்கு மட்டுமல்ல, வீட்டிலுள்ள பெரியவர்களும் ஸ்மார்ட்ஃபோன்களை எளிதில் கையாள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை இங்கே கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில், இந்த விஷயத்தில் தெளிவுபெற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நோக்கியா... உறுதி மற்றும் பயன்பாட்டு எளிமைக்கான குறியீடு. கீழே போட்டாலும் உடையாது என்பது நோக்கியா ஃபோனின் சிறப்பம்சங்களில் ஒன்றாக கருதலாம். அதேபோல, சொற்பமான அம்சங்களையே கொண்டிருந்ததால், அந்த ஃபோனை பயன்படுத்த எளிதானதாகவும் கருதலாம்.

'டச் ஸ்கிரீன் வசதி இல்லாத, எந்த செயலியும் இல்லாத, இணைய வசதியும் இல்லாத 2ஜி ஃபோன் எல்லாம் ஒரு ஃபோனா?' என உங்களில் பலர் அலட்சியமாக நினைக்கலாம். இவ்வளவு ஏன்..? பலர் இத்தகைய ஃபோன்களை பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.

எனில், இந்த பழைய ஃபோன் புராணம் எதற்காக என்றால், 'ஃபோன் என்றாலே புதிதாகவும், அதிக அம்சங்களை கொண்டதாகவும் இருக்க வேண்டுமா?' எனும் கேள்வியை கேட்க வைப்பதற்காகத்தான். அப்படியே இன்னொரு கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டும். 'நவீன தொழில்நுட்பம் என்றாலே இளமைத் துடிப்பு சார்ந்ததாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?'

ஆம், ஃபோன் உள்ளிட்ட கேட்ஜெட்களாகட்டும் அல்லது பொதுவாக நவீன தொழில்நுட்பமாகட்டும், பெரும்பாலும் அவை இளைய தலைமுறை சார்ந்ததாகவே இருக்கின்றன. அவற்றின் அம்சங்களும், பயன்பாடும் இளைஞர்களை மனதில் கொண்டே அமைகின்றன. அது மட்டும் அல்ல, நிறுவனங்களும் கூட, இவற்றை இளையோரை மனதில் கொண்டே விற்பனை செய்கின்றன.

பெரியவர்களும், வயதானவர்களும் நவீன ஃபோன்களை அதிக அளவில் வாங்குவதற்கு வாய்ப்பில்லை என்பது வர்த்தக யதார்த்தம் என்பதால், நவீன சாதனங்களை இளைய தலைமுறையை இலக்காக கொண்டு விற்பனை செய்யப்படுவதைப் புரிந்துகொள்ளலாம். அதற்காக, புதிய சாதனங்களும், நவீன தொழில்நுட்பமும் வயதானவர்களை விலக்கி வைப்பதாகத்தான் இருக்க வேண்டுமா?

நவீன தொழில்நுட்பத்தை வயதானவர்களுக்கு நெருக்கமானதாக்க நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றும் இந்தக் கேள்வியை மாற்றி கேட்கலாம். ஏனெனில், லாக்டவுன் பாடம் கற்றுத்தந்த நம் காலத்தின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இதைக் கருத வேண்டியிருக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் இது தொடர்பாக பெரிய அளவில் ஆய்வுகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், வயதானவர்களுக்கும் தொழில்நுட்பத்திற்குமான இடைவெளியை குறைப்பதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதையும் அறிய முடிகிறது.

அண்மையில் 'கான்வர்சேஷன்' இணைய இதழில் வெளியான ஒரு கட்டுரை, வயோதிகர்கள் நவீன தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளும் விதம் பற்றி அலசி ஆராய்ந்துள்ளது. தொழில்நுட்பத்தை கையாள முடியாமல் மிரண்டு போய் விடுபவர்களாகவே வயோதிகர்கள் சித்திரிக்கப்படுவதைக் குறிப்பிட்டு துவங்கும் இந்தக் கட்டுரை, இத்தகைய தேய்வழக்கு சிந்தனையை கடந்து, தொழில்நுட்பத்திற்கு பழகிக் கொள்வதில் வயோதிகர்களுக்கு இருக்கக் கூடிய சிக்கல்களையும், இன்னல்களையும் பேசுகிறது.

வயோதிகர்களின் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மிக விரிவான ஆய்வை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, கொரோனா உண்டாக்கிய பொது முடக்கச் சூழலில், வயோதிகர்களுக்கான டிஜிட்டல் தொழில்நுட்ப தேவை பற்றியும், அதில் அவர்கள் எதிர்கொள்ளும் போதாமைகள் குறித்தும் விவரிக்கிறது.

அதேபோல டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பாக வயோதிகர்கள் எதிர்கொள்ளும் முரணான உணர்வுகளையும் குறிப்பிடுகிறது. உதாரணத்திற்கு, ஸ்மார்ட்போன்களையும், டேப்லெட்களையும் குடும்பத்தினரை, நண்பர்களை தொடர்புகொள்ள உதவும் சாதனங்களாக பல வயோதிகர்கள் பயன்படுத்த துவங்கியிருக்கின்றனர். அதேநேரத்தில், இந்த சாதனங்கள் ஏற்படுத்தக்கூடிய சுமைகளையும், சிக்கல்களையும் உணர்வதாக தெரிவித்துள்ளனர். நவீன சாதனங்களை பயன்படுத்தும் தேவையை உணர்ந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதில் நம்பிக்கை மற்றும் கட்டுப்பாட்டை அவர்கள் உணர்வதில்லை என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஃபோன் திரையில் அடைத்துக்கொண்டிருக்கும் செயலிகளில் இருந்து தேவையானதைத் தேர்வு செய்வது வயோதிகர்களை திக்குமுக்காட வைக்கலாம். பேரன், பேத்திகளுடன் தொடர்புகொள்ள வாட்ஸ் அப்பை பயன்படுத்த முற்பட்டாலும், அதன்மூலம் வரும் ஓயாத நோட்டிஃபிகேஷன்கள் அவர்களை பதற்றமடைய வைக்கலாம்.

இவற்றின் காரணமாக, வயோதிகர்கள் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக திறனற்ற தன்மையை, கட்டுப்பாடில்லாத உணர்வை பெறலாம். ஆனால், வயோதிகர்கள் இந்த உணர்வை எதிர்கொள்ளும் விதம் அருமையாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

வயோதிகர்களில் சிலர் சாதனங்களுக்கு பழகுவதை தனிப்பட்ட சவால் அல்லது இலக்காக எடுத்துக்கொண்டு அதைப் பரிச்சயம் செய்து கொள்ள முயற்சிக்கின்றனர் என்றால், இன்னும் பலர் இந்த சவாலை ஒரு கூட்டு முயற்சியாக கருதி மற்றவர்கள் உதவியை நாடுகின்றனர். இவர்கள் பேரன், பேத்திகள் உள்ளிட்ட இளையோரை தங்களுக்கான தகவல் தொழில்நுட்ப தூதர்களாக கருதுகின்றனர்.
ஆக, பேரனாக அல்லது பேத்தியாக உங்கள் தாத்தா, பாட்டிக்கு தொழில்நுட்ப பயன்பாட்டை சொல்லித் தருபவராக இருந்தால், அதை நினைத்து நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்.

இன்னும் சில வயோதிகர்கள் நவீன சாதனங்களுக்கு பெயர் சூட்டி, அதனுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது அல்லது சாதனங்களை பாலினம், ஆளுமை மற்றும் தனக்கான மனதை கொண்டதாக கருதுவதன் மூலம், அவற்றால் ஏற்படக்கூடிய மிரட்சியை எதிர்கொள்ள முயற்சிக்கின்றனர்.

புதிய ஃபோனை எப்போது மாற்றலாம் என பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், பழைய ஃபோனை பொக்கிஷமாக பெரியவர்கள் கருதுவதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.

ஆனால், வயோதிகர்களின் முயற்சியை மீறி, நவீன சாதனங்களும், தொழில்நுட்பமும் அவர்களுக்கு பெரும்பாலும் அந்நியமாகவே அமைந்துவிடுகின்றன. இதற்கு பெரியவர்கள் மீது பழி கூடாது என்பதே நாம் உணர வேண்டிய விஷயமாக இருக்கிறது.

தொழில்நுட்ப பயன்பாட்டால் வயோதிகர்கள் பல்வேறு நன்மைகளை பெறலாம் எனும் நிலையில், பெரும்பாலான தொழில்நுட்பம் அவர்களுக்கு நட்பாக இல்லாமல் இருப்பதுதான் பிரச்னையே. இந்த நிலையை மாற்ற வேண்டும் எனில், சாதனங்களை வடிவமைக்கும் போது, அவை பெரியவர்களுக்கும் ஏற்றதாக இருக்கிறதா என பார்ப்பது முக்கியம்.

எளிதாக புரியக்கூடிய பட்டன்களும், விசைகளும் புதிய போன்களிலும் தொடர்வது முக்கியம். புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் உற்சாகத்தில் பழைய பயனுள்ள அம்சங்களை கிடப்பில் போடுவது தொழில்நுட்ப பாரபட்சமாகவே அமையும். அதுமட்டும் அல்ல, புதிய ஃபோன்களை அறிமுகம் செய்யும்போது, அவற்றை இளையோருடன் மட்டும் தொடர்புபடுத்தாமல், வயோதிகர்களும் ஏற்றது எனும் கருத்தை கொண்டிருப்பது, பெரியவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

இவை எல்லாம் நிறுவனங்கள் செய்ய வேண்டியவை என்றால், பயனாளிகளும், பொதுமக்களும் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. ஒன்றரை வயது குழந்தையிடம் ஸ்மார்ட்ஃபோனை கொடுத்து ஒதுங்கிக் கொள்ளும் பெற்றோர், தங்கள் பெற்றோர்கள் அருகே அமர்ந்து அவர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன் பெரிய விஷயம் அல்ல என சொல்லிக்கொடுக்க வேண்டும்.

அதேபோல, அப்பாவுக்கோ அம்மாவுக்கோ ஃபோன் வாங்கி பரிசளித்து, அதைப் பயன்படுத்த கற்றுக்கொடுக்கவும் செய்யலாம். ஃபோன் வாங்கும்போது, பெரிய எழுத்துகள், எளிதாக புரியும் இடைமுகம் ஆகிய அம்சங்களையும் தேர்வு செய்யலாம்.

முக்கியமாக எல்லா இளையோரும், இளையோர் மனம் கொண்ட பெரியவர்களும், தொழில்நுட்பம் கண்டு ஒதுங்கும் வயோதிகர்களை அணுகி சாதனங்கள் பயன்பாட்டை சொல்லிக்கொடுக்கலாம். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இதற்காக என்றே டிஜிட்டல் சாம்பியன்கள் போன்ற தன்னார்வலர்கள் படையை உருவாக்கி இருக்கின்றனர். நாமும் இதே வழியை பின்பற்றுவது நல்லது.

ஆக, நமக்கு ஏற்ற ஃபோன் எது என பார்ப்பதோடு, நம் தாத்தா, பாட்டிகளுக்கு ஏற்ற ஃபோன் எது என யோசிக்கத் துவங்குவோம்.

- சைபர்சிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com