நெல்லை: மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு தரும் உயர்தர சிகிச்சை மையம்

நெல்லை: மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு தரும் உயர்தர சிகிச்சை மையம்
நெல்லை: மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு தரும் உயர்தர சிகிச்சை மையம்

சாலையோரங்களில் வாழும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு உயர்தர சிகிச்சையுடன், கைத்தொழிலும் கற்றுக்கொடுத்து மறுவாழ்வு தரும் மையத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லையில் தொடங்கிய 30 நாட்களுக்குள் சிறப்பாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின்போது, சாலை ஓரங்களில் வாழ்ந்த ஆதரவற்ற 230 பேரை மாநகராட்சி உதவியுடன் தன்னார்வ அமைப்பு மீட்டெடுத்தது. மாநகராட்சி உதவியுடன் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உணவும், மருத்துவ உதவியும் கொடுக்கப்பட்டது. இதில், 80 பேர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில், பெரும்பாலானோர் மனநல முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருந்தும் மாநகராட்சி ஆதரவற்றோர் முகாமில் 5 பெண்கள் உட்பட 10 பேர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கி இருந்தனர்.

இந்நிலையில்தான், தமிழகத்தில் திருநெல்வேலி உட்பட 10 மாவட்டங்களில் ECRC ( Emergency care and recovery center ) "ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையம்" அரசின் உதவியுடன் தன்னார்வலர்களால் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலி டவுண் கண்டியபேரி அரசு மருத்துவமனையில் இந்த மையத்தை தொடங்கி வைத்துள்ளார்.

கண்டியபேரி அரசு மருத்துவமனை பழைய கட்டிடம் என்றாலும் மருத்துவமனையை சுற்றிலும் ஏராளமான மரங்கள், காற்றோட்டமாக அறைகள், ஜன்னல்களில் கொசுவலை, மேலே ஃபேன், எந்த நேரமும் சுத்தமாக காட்சி தரும் வளாகம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக தங்கும் அறைகள் என ஒரு மருத்துவமனைக்கான எந்த அடையாளமும் இல்லாமல் இந்த சிகிச்சை மையம் செயல்படுவது சென்று பார்க்கும் நமக்குள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. திரைப்படங்களில் காண்பிப்பது போல் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை மையம் என்றால் அதிக இரைச்சலுடன் கத்திக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பார்கள் என்ற மனநிலையை மாற்றி இங்கே ஒவ்வொருவரும் தனக்கான வேலைகளைத்தானே செய்துகொள்ளும் அளவிற்கு பயிற்சி கொடுக்கப்பட்டு என்பதை பார்க்கும்போதே உணரமுடிகிறது. மையம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம்கூட முடிவடையாத நிலையில், முதற்கட்டமாக 11 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த நிலையில், மாநகராட்சி ஆதரவற்றோர் முகாமில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மனநல மருத்துவர்கள் மூலம் தனித்தனியாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு அவசர சிகிச்சை முகாமுக்கு வெல்கம் கிட் கொடுத்து அழைத்து வரப்பட்டனர். வெல்கம் கிட்டில் புதிய உடை, சோப்பு, எண்ணெய், சீப்பு, பவுடர் என தனி நபருக்கு தேவையானப் பொருட்கள் நிரப்பப்பட்டிருந்தது.

இந்த மையத்தில் யோகா, சிறிய அளவிலான உடற்பயிற்சிகள், பந்துகளை பயன்படுத்தி விளையாட்டு, வண்ண வண்ண காகிதங்களை பயன்படுத்தி பொம்மை போன்றவற்றை உருவாக்குதல், சமையல் போன்றவை சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மனநலம் பாதிக்கப்பட்ட நபரும் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சை மற்றும் ஆதரவான பேச்சு காரணமாக விரைவில் குணம் அடைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்காக முதலில் மற்றவர்களை சாராமல் தங்களின் தேவைகளை தாங்களே செய்துகொள்ளும் அளவிற்கு முதற்கட்ட பயிற்சி கொடுக்கிறோம். சாப்பிடும்முன் கை கழுவுவது, சாப்பிட்டபின் தட்டை கழுவி வைப்பது, அவரவர் படுக்கைக்குச் சென்று மற்றவர்களை துன்புறுத்தாமல் உறங்குவது, மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தமக்குத் தேவையானவற்றைத் தாமே செய்துகொள்வது இவைகளை சொல்லிக்கொடுத்து பயிற்சி அளிக்கிறோம். குணமடைந்தபின் வெளியில் சென்று வேலை தேடாமல் சொந்த தொழில் தொடங்கும் வகையில் கைத்தொழிலும் கற்றுக்கொடுக்கிறோம் என்கிறார் இவர்களை பராமரிக்கும் செவிலியர் செல்வ பிரியா.

குஜராத், அவுரங்காபாத் போன்ற வடமாநிலங்களிலிருந்து மீட்கப்பட்ட பெண்கள் சிலரும் இங்கே மொழி தெரியாமல் தங்கி இருக்கிறார்கள். சைகைகள் மூலமே தேவைகள் புரிந்து கொள்ளப்படுகிறது. ஒரு சிலரிடம் அமைதி, ஒரு சிலரிடம் சிரிப்பு என்ற அடையாளங்கள் மட்டுமே இருக்கின்றன. மருத்துவமனை மாடியில் இவர்களுக்கான அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. கீழே மருத்துவமனை இருப்பதால் 24 மணி நேரமும் கண்காணிப்புக்கு பயமில்லை. இருந்தாலும் இவர்கள் இருக்கும் அறையிலிருந்து வெளியே வராதவாறு வளாகம் எப்போதும் பூட்டு போடப்பட்டு இருக்கிறது.

தொடர் சிகிச்சையும், அன்பான ஆதரவான பேச்சுக்களும் இருப்பதால் மூன்றுமாத காலத்தில் இவர்களில் பெரும்பாலானோர் இயல்பான மனநிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் இந்த மையத்தை நடத்துபவர்கள். இனி சாலைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டால் உடனடியாக இந்த அவசர சிகிச்சை மையங்களுக்கு தெரியப்படுத்தினாலே மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மறு வாழ்வு சாத்தியமாகும் என்கிறார் மையத்தை நடத்தி வரும் சரவணன்.

மொத்தத்தில் தமிழக அரசின் மிகச்சிறந்த திட்டமாக இத்திட்டம் உருவாகும் என்பது, இங்கு சிகிச்சை முடித்து, கற்ற கைத்தொழில் மூலம் தொழில் தொடங்கி மறுவாழ்வு பெறும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உறுதி செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com