பெற்றோரை இழந்த மாணவிக்கு மஞ்சள்நீராட்டு விழா: நெகிழ வைத்த தலைமையாசிரியர்
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள அசகளத்தூரில் பெற்றோரை இழந்த மாணவிக்கு தாயபோல நின்று மஞ்சள் நீராட்டு விழா நடத்திய தலைமையாசிரியரின் செயல் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிசெய்து வருபவர் சாமிதுரை. தாய் என்பவள் முதல் ஆசிரியர் என்றும் ஆசிரியர் என்பவர் இரண்டாவது தாய் என்றும் முன்னோர்கள் கூறுவர் .அதன்படி இவர் நடைமுறையில் இருந்து வருகின்றார்.
கடந்த 2010- ஆம் ஆண்டு அசகளத்தூரை சேர்ந்த வளர்ப்பு பெற்றோர்கள் கோம்பையன் மற்றும் பச்சையம்மாள் ஆகியோர் வளர்ப்பு மகளான கலைச்செல்வியை ஒன்றாம் வகுப்பில் படிப்பதற்காக சேர்த்து விடுகின்றார்கள். கோம்பையன், பச்சையம்மாள் தம்பதிக்கு குழந்தை இல்லை, ஒருநாள் பச்சையம்மாள் கள்ளக்குறிச்சியில் பேருந்து நிலையத்தில் அமர்ந்து கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத ஒரு பெண்மணி நான் கழிவறை சென்று வருகிறேன் என்று கூறி ஒரு பெண் குழந்தையை கையில் ஒப்படைத்து சென்றுள்ளார்.
அவரும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை தேடித்தேடி அலைந்துள்ளார், அந்த பெண்மணியை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அருகில் வளையல் விற்றுக்கொண்டிருந்த பாட்டி உங்களுக்கு குழந்தை இல்லை என்று கூறுகின்றீர்கள், ஏன் இக்குழந்தையை நீங்களே வளர்க்கக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார். ஏனென்றால் பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அவர்கள் குழந்தையை உங்களிடம் விட்டுச் சென்றது அவர்களால் முடியாமல் கூட இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். உடனே அவர்கள் குழந்தையை பாதுகாப்பாக எடுத்து வந்து கூலித் தொழில் செய்து குழந்தையை வளர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் கலைச்செல்வியை படிப்பதற்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்துள்ளார். அங்கு ஒரு நாள் சரிவர படிக்காத நிலையில் கலைசெல்வியை, பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார் தலைமையாசிரியர் சாமிதுரை. அப்போது வந்த அவரின் வளர்ப்பு பெற்றோர் உண்மை அனைத்தையும் கூறியுள்ளனர். ஏற்கெனவே நோயாளியான அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை. எனவே எனது மகளை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அழுதுள்ளனர். அது முதல் மற்ற பிள்ளைகளைப் போலவே இவரையும் அவரும் மற்ற பணிபுரியும் ஆசிரியர்களும் கவனித்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில் ஐந்தாம் வகுப்பு முடிந்து மாணவி ஆறாம் வகுப்புக்கு அருகிலுள்ள மற்றொரு அரசுப்பள்ளிக்கு மாற்றப்படுகிறார் என்ற போதிலும் தொடர்ந்து தாயாக இருந்து தலைமையாசிரியர் சாமிதுரை, அவருக்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து வருகின்றார் என்பது அப்பகுதி மக்கள் அனைவருக்குமே தெரியும் . இந்நிலையில் காலச்சூழலில் அவர் பத்தாம் வகுப்பு முடிக்கின்றார். அப்போதுதான் அவர் பூப்பெய்துகின்றார் இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தலைமையாசிரியர் சாமிதுரைக்கு தகவல் அளிக்கிறார்கள். உடனே அவர் மாணவிக்கு வேண்டிய அனைத்தையும் தகப்பனாக இருந்து செய்துள்ளார், மேலும் கலைச்செல்வியின் ஆசைப்படி மிகச்சிறப்பாக மஞ்சள் நீராட்டு விழாவில் அவர் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து அனைத்துச் செலவையும் அவரே ஏற்றுள்ளார்.
அதிலும் அக்குழந்தை பயின்ற அசகளத்தூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இருந்தே சீர்வரிசைகளை வைத்து மேளதாளங்களுடன் அவர் உறவினர்களை அழைத்து அவரும் எடுத்துச்சென்று சிறப்புற செய்தார். அவ்வூர் மக்கள் சந்தோஷ கண்ணீருடன் பார்த்து மகிழ்ந்து உடன் அவருக்கு வாழ்த்து கூறினார்கள் .இயந்திர வாழ்க்கையில் எனக்கென என்று வாழும் இவ்வுலகில், தலைமையாசிரியரின் இந்தச் செயல் மெய்சிலிர்க்க வைக்கின்றது. இதுபோன்ற ஆசிரியர்களால் ஆசிரியர் சமூகம் மட்டுமல்ல மனித இனமே தலை நிமிர்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆசிரியர் தினமான இன்று நடைபெற்ற இந்த நிகழ்வு ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமல்லாது கிராம மக்களின் மத்தியிலும் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது