எளியோரின் வலிமை கதைகள் 9: 'சில நேரம் கண்ணாடி போடாம வெல்டிங் பண்ணுவோம்; அப்போ கண் எரியும்'

எளியோரின் வலிமை கதைகள் 9: 'சில நேரம் கண்ணாடி போடாம வெல்டிங் பண்ணுவோம்; அப்போ கண் எரியும்'

எளியோரின் வலிமை கதைகள் 9: 'சில நேரம் கண்ணாடி போடாம வெல்டிங் பண்ணுவோம்; அப்போ கண் எரியும்'
Published on
நாம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்ததுண்டா? அப்படியொரு இரு மனிதர்களை சந்தித்தோம். சென்னை போரூர் பகுதியில் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் பணிபுரிந்து வரும் சக்கரபாணி என்கிற 50 வயது தொழிலாளியிடம் முதலில் பேசினோம்.
அவர் கூறுகையில் ''30 வருஷமா இந்த தொழில் செய்துட்டு வரேன். இங்கே எனக்கு பாலீஸ் போடற வேலைதான் அதிகமா இருக்கும். மத்த நேரங்கள்ல வெல்டிங் வைக்கிறது, ட்ரில்லிங் பண்றதுன்னு வெவ்வேறு வேலைகள் இருந்துகிட்டே இருக்கும். ஹோட்டல்களுக்கு தேவையான டேபிள், சேர், வாஷ்பேஷன், அடுப்பு இது மாதிரியான பொருட்களை தயார் பண்றதுதான் எங்களோட வேலை. இந்த வேலையை நம்பித்தான் என் குடும்பம் இருக்குது. ரொம்ப நேரம் பாலிஸ் புடிச்சிட்டு இருக்கறதுனால இடுப்புவலி பின்னியெடுக்கும். சில நேரங்கள்ல ராத்திரியில் தூக்கம் கூட வராது, வேலை அப்படி.
நான் பெருசா எதுவும் படிக்கல. அதனால சின்ன வயசுல என்ன கொண்டு வந்து இந்த மாதிரி பட்டறையில வேலைக்கு சேத்துட்டாங்க. இங்க சம்பாதிக்கிற பணத்தை வைச்சுக்கிட்டு என் பையனையும் பொண்ணையும் டிகிரி படிக்க வைக்கிறேன். வாரத்துக்கு ஆறு நாள் வேலை இருக்கும். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் லீவ். அன்னைக்கு கூலி இருக்காது. ஆனாலும் ஏதோ கொடுக்கக்கூடிய சம்பளத்தை வச்சுக்கிட்டு குடும்ப நடத்துற மனப் பக்குவத்திற்கு மாறிட்டோம். பெருசா ஆடம்பர வாழ்க்கை இல்லனாலும் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கோம்'' என்றார்.
வெல்டிங் தீப்பொறி பறக்க வேலை செய்து கொண்டிருந்த பாபுவிடம் பேசினோம். ''என் பேரு பாபு. பாபு பாஷான்னு எல்லாரும் கூப்பிடுவாங்க. எனக்கு வயசு 51 ஆகுது. நான் இருபது வருஷத்து முன்னாடி இந்த வேலைக்கு வந்தேன். அஞ்சாவது வரைக்கும் படிச்சேன். நான் வேலைக்கு வரும்போது எனக்கு நூறு ரூபாய் சம்பளம். அப்போது ஒரு கிலோ நல்ல அரிசி பத்து ரூபாய்க்கு வித்தது. இன்னைக்கு நல்ல அரிசி வேணும்னா ஒரு கிலோ 60 ரூபாய் 70 ரூபாய்னு விக்குறாங்க. இப்ப எனக்கு கூலி 500 ரூபாய்.
இங்கே தகடுதான் வாங்கிட்டு வருவோம். ஒவ்வொருத்தருக்கும் எந்த மாதிரி பொருள் தேவையோ அந்த மாதிரி பொருளை அந்த தகடு மூலமா செய்திடுவோம். சிலர் வாஷ்பேஷன் கேப்பாங்க. சிலர் ஹோட்டல்களுக்கு தோசைக்கல் வைக்கிற அளவுக்கு பெரிய அடுப்புகள் கேப்பாங்க. சிலர் புது வீடு கட்டற இடங்கள்ல வீடுகளுக்குள்ளும் வெளியும் பயன்படுத்துகிற சில்வர் கைப்பிடிகள் கேப்பாங்க. அப்படி கேட்கிறவங்களுக்கு வாங்கிட்டு வர்ற தகடு மற்றும் பைப்புகளை தேவையான அளவுக்கு கட் பண்ணி எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் ட்ரில்லிங் மூலமா ஓட்டை போட்டு தகடுகளை நாலாபக்கமும் மடிச்சிப்போம். ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியான டிசைன் இருக்கும். அந்த டிசைன் மூலமா அது எல்லாத்தையும் இணைக்கணும். ஒவ்வொரு பாகத்தையும் பாலிஷ் பண்ணனும். பளபளப்பா இருந்தாதான் வாங்கிறவங்களுக்கும் திருப்தியா இருக்கும். அதனால மூலைமுடுக்கெல்லாம் பாலிஷ் பண்ண வேண்டி இருக்கும்.
நான் இங்க வந்து வெல்டிங் செய்வேன். அதுக்கு அப்புறம் கிரைண்டிங் செய்கிற வேலை. அப்புறம் இணைப்பதற்காக ட்ரில்லிங் போடுற வேலை. இப்படி எல்லா வேலையும் செய்வேன். எனக்கு ஒரு பொண்ணு. டிகிரி படிச்சிட்டு இருக்காங்க. சில நாள்ல வெல்டிங் பண்ணும்போது கண்ணாடி இல்லாமல் செய்யவேண்டி வந்துவிடும். அது மாதிரி நேரத்துல ரெண்டு நாள் வரைக்கும் கண்ணு உருட்டிக்கிட்ட தான் இருக்கும். வேலை ரொம்ப பழகிப்போனதால் கஷ்டம்னு பெருசா எங்களுக்கு எதுவும் தெரியல. தினமும் அந்த சுழற்சியில வேலை நடக்கும். இந்த கம்பெனி ஒரு ஆறு பேருக்கு கொண்டுதான் இயங்குது. ஆர்டர் பொறுத்துதான் வேலை செய்வோம். சொந்தமா முதல் போட்டு எல்லாம் பொருள் செஞ்சு வைக்கிறது இல்ல. ஏன்னா இதுக்கெல்லாம் முதலீடு அதிக அளவு செய்யணும். அதனால கொடுக்குற ஆர்டருக்கு வேலை செய்வோம்.
தினமும் வேலை இருக்கும். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளைக்கு மட்டும்தான் லீவு. அன்னைக்கு ஒரு நாள் மட்டும் குடும்பத்தோடு வீட்டுல இருப்போம். மறுபடியும் திங்கட்கிழமையில் இருந்து இதேவேளை தாங்க. எல்லோரும் கிட்டத்தட்ட ரொம்ப நாளா ஒன்னா பழகிட்டதனால ஒரு குடும்பமா இருந்துட்டு இருக்கிறோம். என்ன ஒன்னு அரசாங்க சம்பளம் மாதிரி நிரந்தரமாக சம்பளம் இல்ல. ஆனாலும் தொடர்ந்து வேலை இருக்கறதுனால ஒரு கம்பெனி இல்லன்னா இன்னொரு கம்பெனிக்கு மாத்தி வேலை செஞ்சுட்டு இருக்கோம்'' என்றார்.
- ஜோதி நரசிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com