சிறுமி கொலை வழக்கில் வரலாற்று தீர்ப்பு கிடைக்குமா?

சிறுமி கொலை வழக்கில் வரலாற்று தீர்ப்பு கிடைக்குமா?
சிறுமி கொலை வழக்கில் வரலாற்று தீர்ப்பு கிடைக்குமா?

போரூர் சிறுமி கொலை வழக்கில் ‌செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹாசினி எனும் சிறுமி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை தீவிரமாக தேடிவந்த தமிழக காவல்துறை, மும்பையில் அவரை கைது செய்‌தது. விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில், போலீஸாரைத் தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பினார். தப்பியோடிய அவரை மீண்டும் 24 மணி நேரத்திற்குள் மும்பை போலீஸார் உதவியுடன் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சிறுமி ஹாசினி கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 14ஆம் தேதி இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், இன்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

இதைபோலவே பாகிஸ்தானின் கசூர் பகுதியை சேர்ந்த 7வயது சிறுமி ஷாயினப் அன்சாரி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சிறுமியின் சடலம் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டிருந்தது. சிறுமி மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், 24 வயது இளைஞர் இம்ரான் அலி என்பவரை கைது செய்தனர்.இதையடுத்து, பாகிஸ்தான் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 நாள்களாக வழக்கை விசாரித்தனர்.பின்னர் இம்ரான் அலிக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். 

பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக 4 நாளில் வழக்கு விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. இந்தத் தீர்ப்புக்கு இந்தியாவில் இருந்து ஏராளமானோர் சமூக வலைதளத்தில் தங்களின் வரவேற்பை தெரிவித்தனர். இதுபோன்று கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என்ற கருத்தையும் முன்வைத்தனர். இதுபோன்று ஒரு வரலாற்று தீர்ப்பு ஹாசினி வழக்கில் வழங்கப்படுமா?. சிறுமியை மட்டுமல்லாமல் தனது தாயையும் இந்தக் கொடூரன் கொலை செய்துள்ளான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com