உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்: எந்தெந்த நாடுகள் கொண்டாடுகிறது?

உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்: எந்தெந்த நாடுகள் கொண்டாடுகிறது?
உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்: எந்தெந்த நாடுகள் கொண்டாடுகிறது?

தமிழகத்தில் அறுவடைத் திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போலவே, உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகள் அறுவடைத் திருநாள்களை வெகு விமரிசையாக கொண்டாடுகிறது. அவற்றை காண்போம்.

தமிழர்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்த பண்டிகை பொங்கல் பண்டிகைதான். இது அறுவடைத் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. சங்ககாலம் தொட்டு இன்றுவரை மரபு மாறாமல் தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் ஒன்றாக பொங்கல் அறுவடைத்திருநாள் இருக்கிறது. இந்த பண்டிகையின் முதல்நாள் வீட்டை சுத்தம் செய்யும் போகிப் பண்டிகையாகவும், அடுத்த நாளான  பொங்கல் தினத்தில் அறுவடை செய்த புது அரிசி, காய்கறிகள், வெல்லத்துடன் பொங்கல் சமைத்து ஐம்பூதங்களுக்கும் நன்றி செலுத்தும் நாளாகவும் கொண்டாடுகிறோம். அதற்கு அடுத்தநாள் வேளாண்மைக்கு ஆதாரமாக இருக்கும் பசுக்கள், காளைகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் மாட்டு பொங்கலையும், அதன் அடுத்த நாளில் உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்கும் காணும் பொங்கலாகவும் கொண்டாடுகிறோம்.

அக்காலமாகட்டும், இக்காலமாகட்டும் அறுவடைதான் வேளாண் சமூகத்தின் கொண்டாட்டமான நிகழ்வு. அறுவடையினால்தான் வேளாண்குடிகள் சிறக்கிறது, வேளாண்குடியை சார்ந்திருக்கும் மற்ற தொழில்களும் சிறக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த அறுவடைத்திருநாளின் சிறப்பு. அத்தகைய சிறப்புமிக்க அறுவடைத்திருநாள் தமிழகத்தில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு பெயர்களிலும் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்கா : கிரீன் கார்ன் பெஸ்டிவல் என்று பூர்வகுடி அமெரிக்க மக்களால் கொண்டாடப்படும் அறுவடை  விழா பல நாள்கள் தொடர்ந்து நடைபெறும். அறுவடைக்குத் தயாராக முதல் சோளம் தயாரானவுடனே வரும் பௌர்ணமியன்று இந்த விழா நடக்கும். தலையில் இறகுகள் மணிகள் ஆகியவற்றைச் சூடிக்கொண்டு பாரம்பரிய முறையில்  அலங்கரிக்கப்பட்ட வண்ணமயமான உடைகளுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து உற்சாகமாக  அறுவடையை கொண்டாடுகின்றனர். இந்த விழாவில் மக்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறார்கள். நவம்பர் மாதம் இலையுதிர் அறுவடை காலத்தில் அதிகளவில் விளைச்சலை தந்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நாள், அதே மாதத்தின் 4-ம்  வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அமெரிக்காவின் விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்கா : பல ஆப்ரிக்க நாடுகளில் நல்ல உணவு உற்பத்திக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக 3 நாட்கள் யாம் விழா  கொண்டாடப்படுகிறது. இந்த அறுவடை பண்டிகையின்போது  பல்வேறு  கதைகளை சொல்லும் விதவிதமான ஆடல், பாடல்கள் களைகட்டும். இறந்து போன உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கும் இந்த விழா, நல்ல விளைச்சலைத் தந்த இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்துகிறது. பயிர்களை நல்ல  ஆவிகள் காப்பதாகவும் கெட்ட ஆவிகள் அழிப்பதாகவும் நம்பும் இவர்கள் பயிர்களை காத்து  விளைச்சலைக் கொடுத்த ஆவிகளுக்கு நன்றி சொல்லி தமது முதல் விளைச்சலை முன்னோர்களுக்கும் கடவுளுக்கும் படைக்கின்றனர். பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில்  கொண்டாடப்படும் இது ‘ஹாம்(வள்ளி கிழங்கு) திருவிழா’ என்றும் ’ஹோமாவோ திருவிழா  என்றும் அழைக்கப்படுகிறது.

கொரியா: கொரியாவில் அறுவடை சீசன் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்கிறது. இந்த மாதங்களில் வரும் முழு நிலவு நாளில் இந்த  பண்டிகை சூசாக் அல்லது அறுவடை நிலவுத்திருநாள் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் உறவினர்கள் சூழ புதிதாக விளைந்த உணவு பொருள்கள் முன்னோருக்கு படைக்கப்படுகின்றன. ‘சாங்பியான்’ எனப்படும் பிறை வடிவ அரிசிப் பலகாரம் இந்த பண்டிகையின்போது உண்ணப்படும் பிரசித்தி பெற்ற உணவாகும்

ஜப்பான் : ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது. ஒட்டோரி சாய் என்றும், ஒட்டோரி சாமா என்றும் அழைக்கப்படும் இந்நாளில் நள்ளிரவில் தொடங்கி 24 மணி நேரத்துக்கு தொடர்ந்து இசையை இசைத்தபடி ஒருவருக்கு ஒருவர்  கைகுலுக்கி, பலத்த ஒலியுடன் இயற்கைக்கும், இறைவனுக்கும் நன்றி செலுத்துகின்றனர். நெல் அறுவடையின் அடிப்படையில், ஜப்பானில் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது, பாரம்பரியமிக்க நிகழ்ச்சி  முடியும்வரை புதிதாக விளைந்த நெல் அரிசியை யாரும் உண்ணக்கூடாது என்பது அந்நாட்டின் வழக்கம்.

ஜெர்மனி: ஜெர்மனியில் அறுவடை விழா அக்டோபர் விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திராட்சை அறுவடையின் கடைசியில் கொண்டாடப்படுகிறது. இந்த விழா அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. மலைகளில் மேய்ச்சல் முடித்துவிட்டு ஆடு,மாடு மேய்ப்பவர்கள் வீடு திரும்பும் நாள், திராட்சை  விளைச்சலை கொண்டாடும் திருவிழா என இரண்டு விதமான அறுவடை  விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. வண்ணமயமான பேரணிகளும், நடனங்களும் இந்த விழாவில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

சீனா: சீனர்களின் காலண்டர்படி ஆண்டின் எட்டாவது லூனார் மாதத்தின் 15வது நாள், சந்திரவிழா அல்லது அறுவடைவிழா  கொண்டாடப்படுகிறது. அரிசி, கோதுமை அறுவடைக்குப் பின் கொண்டாடப்படும் இவ்விழாவின்போது ஆப்பிளால் செய்யப்பட்ட ‘மூன் கேக்’ என்னும் பாரம்பரியமான பலகாரத்தை உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து  உண்ணுகிறார்கள். குடும்பத்தோடு ’நிலவைப் பார்த்தல்’ சடங்கும் இரவில் நடைபெறும்.

வியட்நாம்:  பல நூற்றாண்டுகளாக மிகப்பழமையாக கொண்டாடும் விழாக்களில் ஒன்றான தெட்– தி–ரங் து என்னும்  அறுவடைத்திருவிழா ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. பெற்றோர் தங்கள் விவசாய காலம் முடிந்து குழந்தைகளுடன் ஆனந்தமாய் ஒன்றிணைந்திருக்கும் விழாவாக, குழந்தைகளை மையப்படுத்தி இந்த விழா கொண்டாடப்படுகிறது. 


இஸ்ரேல் : யுத ஈப்ரு மாதமான திஷ்ரி மாதம் 15ம் நாள் சுக்கோத் என்ற அறுவடை திருநாள் இஸ்ரேலில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர்  மாதத்தில் ஒரு வார காலம் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அறுவடை விழாவான  இது நன்றி தெரிவித்தல் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக யூதர்கள், பழங்காலத்தில் செய்த திராட்சை அறுவடையை நினைவுகூரும் வகையில் ஏழு நாள்கள் இந்த அறுவடை  விழாவை கொண்டாடுகின்றனர்.

ரோம் : ரோமானியர்கள் அக்டோபர் நான்காம் நாள் செரிலியா என்னும் பெயரில் கொண்டாடுகிறார்கள். இது தங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்ததற்காக சோளப் பயிரின் பெண் தெய்வமான சீரஸ் என்பவருக்கு நன்றி செலுத்தும் விழா. தங்கள் தெய்வத்துக்கு புதிய காய்கறிகள், பழங்கள் , பன்றி போன்றவற்றைப் படைத்து, இசை, விளையாட்டு, நடனம் என விழாவை கொண்டாடுகிறார்கள். இவர்கள் வினாலியா என்றொரு விழாவையும் கொண்டாடுகிறார்கள்.

இங்கிலாந்து : இந்த விழா பிரிட்டனில் அறுவடைவீடு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதம் கொண்டாடப்படும் இந்த விழாவில் பழங்களையும், காய்கறிகளையும் இறைவனுக்குப் படைக்கும் விழாவாகவும், நன்றி செலுத்தும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா கோதுமை அறுவடை செய்யப்பட்ட பின்பும் ஆப்பிள்கள்  கொய்யப்பட்ட பின்பும் கொண்டாடப்படுகிறது. கடைசியாக விளைந்த கோதுமையில் செய்யப்பட்ட  ரொட்டியுடன், பழங்கள், பூக்கள் ஆகியவை இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாகப் படைக்கப்படுகின்றன.

உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சங்கராந்தி என்ற பெயரிலும், வேறு சில பெயர்களிலும்  இந்த அறுவடைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

-வீரமணி சுந்தரசோழன

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com