”வெட்டுக்கிளிகள் படையெடுப்பை இப்போது நம்புவார்கள்” பட்டுக்கோட்டை பிரபாகர் பிரத்யேக பேட்டி

”வெட்டுக்கிளிகள் படையெடுப்பை இப்போது நம்புவார்கள்” பட்டுக்கோட்டை பிரபாகர் பிரத்யேக பேட்டி
”வெட்டுக்கிளிகள் படையெடுப்பை இப்போது நம்புவார்கள்” பட்டுக்கோட்டை பிரபாகர் பிரத்யேக பேட்டி

இந்தியாவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பைப் பார்த்து மிரள்கிற அனைவரது நினைவிலும், அதிவேகத்தில் மின்னலடிப்பது காப்பான் படக்காட்சிதான். கடந்த வருடம் வெளியான காப்பானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை காட்டி மிரளவைத்திருப்பார்கள். இதன் திரைக்கதை வசனகர்த்தா எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர். இன்று அவரின் 62 வது பிறந்தநாள்.

 இதுவரை எழுத்தின் மூலம் வாசகர்களிடம் தனக்கான ஆதரவுக் கோட்டையை எழுப்பிய பட்டுக்கோட்டை பிரபாகர், இந்தக் கொரோனா பேரிடரில் வீட்டில் முடங்கிப்போயுள்ள மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பாஸிட்டிவாக தொடர்ந்து எழுதியும், பல்வேறு  போட்டிகளும் நடத்துவதோடு உதவி கேட்பவர்களுக்கும்: உதவும் நெஞ்சங்களுக்கும் பாலமாக இருந்து பண உதவிகளையும் நண்பர்கள் குழுவோடு செய்து வருகிறார். இதுவரை 350 பேருக்குமேல் உதவி பட்டுக்கோட்டை பிரபா”கேர்” என்பதையும் நிரூபித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டுக்கான தேசிய விருதையும் பெரும் வெற்றியும் பாராட்டையும் பெற்ற ‘அந்தோதன்’ இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு வசனம், தமிழ் மக்கள் எதிர்ப்பாத்துக்கொண்டிருக்கும் ’சரவணா ஸ்டோர்’ ’ அருள்’ நடிக்கும் படத்திற்கு வசனம், இரண்டு புதுப்படத்திற்கு பேச்சுவார்த்தை என்று பிஸியாக சுழன்றுகொண்டிருக்கும் பட்டுக்கோட்டை பிரபாகரிடம், பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு மறக்க முடியாத பிறந்தநாள், வெட்டுக்கிளிப் பிரச்சனை, சினிமா குறித்தெல்லாம் கேள்விகளை முன்வைத்தோம். உற்சாகமாக பேசுகிறார்,

 மறக்க முடியாத பிறந்தநாள் எது?

கடந்த 1983 ஆம் வருடம் என் பிறந்த நாளான ஜூலை 30 ஆம் தேதிக்கு முதல்நாள் திருமணம் செய்ய வீட்டில், எனக்கு பெண் பார்த்தார்கள். ’பெண்ணை பிடித்திருக்கிறது’ என்று  சொல்லிவிட்டு பட்டுக்கோட்டைக்கு திரும்பிவிட்டோம். என் பிறந்தநாள் வருங்கால மனைவிக்குத் தெரியாது. ஆனால், பிறந்தநாள் அன்று எனக்கு முதல் வாழ்த்தே அவரிடமிருந்துதான். அதனை, இப்போது நினைத்தாலும் தித்திக்கிறது. ஏனென்றால், மறுநாள் எனக்கு பிறந்தநாள் என்று அவரிடம் சொல்லவில்லை. என் ஜாதகத்தில் அவராக பார்த்துவிட்டு போன்செய்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னார். எனக்கும் அவருக்குமான முதல் பேச்சு பிறந்தநாள் வாழ்த்துகளுடன்தான்  தொடங்கியது. அதே வருடத்தில் எங்களுக்கு திருமணமும் நிகழ்ந்தது. மற்றபடி பிறந்தநாளன்று பெரிய செலபிரேஷன் எல்லாம் இருக்காது. பார்ட்டியும் கிடையாது. ஒவ்வொரு வருடமும் ஆதரவற்றவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கு  உணவு ஏற்பாடு செய்து விடுவேன். அதுதான் எனது மனதுக்கு சந்தோஷமாக இருக்கும். இப்போது, கொரோனா என்பதால் வீட்டுக்குள்ளேயே உலாவிக்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை. இந்த ஆண்டு கோவில் மற்றும் ஆதரவற்ற இல்லங்களுக்கு செல்ல முடியாது என்பது வருத்தம்தான். மேலும், கொரோனாவால் பிறந்தநாள் கொண்டாட்ட மனநிலையே போய்விட்டது.

உங்கள் நினைவில் யாருடைய பிறந்தநாள் எப்போதும் இருக்கும்?

என் குடும்பத்தில் இருக்கும் எல்லோருடைய பிறந்தநாளையும் கொண்டாடுவோம். ஆனால், எனது மனைவி சாந்தியின் பிறந்தநாள் டிசம்பர் 7 எப்போதும் நினைவில் இருக்கும்.

’காப்பான்' படத்தில் வெட்டுக்கிளி விவசாயத்தை அழிப்பதுபோல தற்போது, உண்மையிலேயே வெட்டுக்கிளிகள் விவசாயத்தை அழிக்கிறது என்று பேசப்படுகிறதே? இப்படத்தின் திரைக்கதாசிரியராக உங்களுக்கு என்ன தோன்றியது?

 வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நடக்கப்போகிறது என்பதை படத்தில் முன்கூட்டியே பதிவு செய்துவிட்டோமே என்று பெருமைப்பட  ஒன்றுமே இல்லை. இது நாங்களே, கண்டுபிடித்த விஷயம் அல்ல; புதிதாக கற்பனை செய்து விடவும் இல்லை.ஏற்கனவே, வெட்டுக்கிளிகள் பல இந்திய மாநிலங்களில் வந்துகொண்டுதான் இருந்தது.  தமிழகத்தில், வேறு வகையான வெட்டுக்கிளிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் லேசாக தென்பட்டுப் போனது. இவையெல்லாவற்றையும்விட வெட்டுக்கிளிகள் வெளிநாடுகளில் அதிகம் படையெடுத்து பயிர்களை அழித்துக்கொண்டுதான் வருகின்றன. எதிர்கால யுத்தம் என்பது ஆயுதமாக இல்லாமல் ரசாயன யுத்தம், பயோ வார் போன்றவை இருக்கும் என்று பல ஆராய்ச்சியாளர்களும் சொல்கிறார்கள். இதனை எதிர்கொள்ளத்தான் எல்லா நாடுகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. தற்போது வந்திருக்கும் கொரோனாவே மனிதர்கள் உருவாக்கியதா? இல்லை தானாக உண்டானதா? என்ற சந்தேகம் இருக்கிறது. அமெரிக்க அதிபர் இன்னும் சீனாவைத்தான் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறார். 

 வெட்டுக்கிளி ஐடியா உங்களுக்கு எப்படி தோன்றியது?

 அது கே.வி ஆனந்தின் ஐடியா அது. அதற்குப்பிறகுதான் நாங்கள் படிக்க ஆரம்பித்தோம். சரியான தரவுகளோடு திரைக்கதையில் சேர்த்து காட்சியமைப்புகள் அமைத்தோம். திரைக்கதை முடிவாகி, முதல் ஷெட்யூல் படப்பிடிப்பும் முடிந்த பிறகுதான், ஒருநாள் அந்த வெட்டுக்கிளி விஷயத்தை கே.வி ஆனந்த் விவாதத்திற்கு எடுத்தார்.  அதுபற்றி அப்போதுதான் நிறைய படித்தோம். அதில், ஆண் பூச்சியையும், பெண் பூச்சியையும் தனித் தனியாகப் பிரித்து அனுப்புவது என்பது மட்டுமே திரைக்கதை சுவாரசியத்திற்காக செய்யப்பட்ட கற்பனை. மற்றபடி படத்தில் வெட்டுக்கிளிகள் குறித்து சொல்லப்பட்ட விஷயங்கள் யாவும் நிஜமான தகவல்களின் அடிப்படையில் உள்ளவைதான். கே.வி ஆனந்தை பொறுத்தவரை என்றைக்குமே இதுதான் ஃபைனல் என்று உறுதியாக வைக்கமாட்டார். திரைக்கதையில், வசனத்தில், எடிட்டிங்கில் மெருகூட்டிக்கொண்டே இருப்பார். அது அவருடைய பண்பு. அந்த வகையில் திடீரென்று வெட்டுக்கிளிகள் சம்மந்தப்பட்ட சில வீடியோ காட்சிகளைக் காண்பித்தார். இந்த விஷயத்தை படத்தில் வைத்தால் என்ன? என்ற விவாதம் துவங்கியது. அது நடுவில் வந்த விஷயம்தான். காப்பான் படம் வெளியானபோது வெட்டுக்கிளிகளைப் பார்த்து லாஜிக்கே இல்லை என்றெல்லாம் பலர் எழுதினார்கள். இவ்வளவு பூச்சி வருமா? என்றெல்லாம் விமர்சித்தார்கள். அப்படி விமர்சனம் எழுதியவர்கள் அது உண்மைதான் என்பதை புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்

ஆனால், பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வராது என்கிறார்களே?

எல்லா வகைகளைவிட மிகக் கடுமையானது பாலைவன வெட்டுக்கிளிகள்தான். ஏனென்றால், இது தனது குணத்தை மாற்றிக்கொள்ளும். விமானங்களையே வெட்டுக்கிளிகள் பறக்கும் வழிகளில் செல்லவேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றால், அதன் பாதிப்பை உணர்ந்துகொள்ளலாம். அவை விமான ஓட்டியின் பார்வையையே மறைக்கும் தன்மை கொண்டவை. ஆனால், இதன் பறக்கும் சக்தி ஒரு மணி நேரத்திற்கு 19 கிலோமீட்டர் தூரமும், ஒரு நாளைக்கு 150 கிலோமீட்டர் வரையும் பறக்கிறது. தொடர்ச்சியாக பறந்துகொண்டே செல்லும். பச்சை பயிர்களையெல்லாம் உணவாக எடுத்துக்கொள்ளும். நமக்கு பசிப்பதுபோல், அதன், உணவை தேடுகிறது. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் வெட்டுக்கிளிகளை சாகடித்தப்பிறகு வறுத்து சாப்பிடுகிறார்கள். அதில், அதிகமாக 17 சதவீதம் புரோட்டீன்கள் உள்ளன. பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வருமா? வராதா? என்பது குறித்து நாம் சொல்வதைவிட பூச்சிகளை ஆராய்ச்சி செய்தவர்கள்தான் சரியாக சொல்ல முடியும்.

 நீங்கள் எழுதிய திரைக்கதைச் சம்பவங்கள் இதுபோல் வேறு என்ன நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது?

ஏன் காப்பான் படத்திலேயே தஞ்சை மாவட்டம் ’பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினோம். சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு தஞ்சை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்தார்.  இதுவும் இதே படத்தில் நடந்த சம்பவம்தான். 

 வெட்டுக்கிளி ஆபத்துபோல மக்களுக்கு இன்னும் என்னென்ன பேரிடர் வரலாம் என்று நினைக்கிறீர்கள்?

 வெட்டுக்கிளி பிரச்சனையில் ஒரே ஒரு ஆறுதல் மனிதர்களையும் விலங்குகளையும் அவை பாதிப்பதில்லை. அது பசிக்கு பயிர்களை தாக்குகிறது. அவ்வளவுதான். எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. அதில், முக்கியமானது தட்பவெட்பநிலை மாற்றம்தான். சீசனுக்கு பெய்யவேண்டிய மழை பெய்வதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். மரம் வளர்ப்பது முக்கியம். அது இல்லாததால்தான் மழை வளமே குறைந்துவிட்டது. இயற்கையை காப்பது அவசியம். சமூக ஆர்வலர்களும் அரசும் மரங்களை நட்டாலும் பொதுமக்களும் பொறுப்புணர்வு உணர்ந்து மரங்களை காக்க வேண்டும். தட்பவெட்ப நிலை எல்லாமே பேரிடர்தான். மேற்குவங்கத்தில் வந்த ஆம்பன் புயல் எதிர்பார்த்ததா?

 காப்பான் படத்தில் வருவதுபோல வெட்டுக்கிளியை கார்ப்பரேட்க்காரர்கள்தான் வேண்டுமென்றே பரப்புகிறார்களா?

அது எங்களது கற்பனை. ஒரு சுவாரசியத்திற்காக வில்லனான, ஒரு கார்ப்பரேட்காரர் செய்கிறார் என்று காட்டினோம். ஆனால், இதே கார்ப்பரேட்காரர்களை வைத்து வெட்டுக்கிளிகளை அரசு தயாரிக்கச்சொன்னால், அது அரசே பயங்கரவாதத்தில் ஈடுபடுவதுபோல்தான். பயோ வார் என்பது தனிநபர் பண்ணும் விஷயம் அல்ல; அரசு சம்மந்தப்பட்டது. இதனை அரசுதான் ஒரு நாட்டை பழிவாங்கலாகவோ பொருளாதாரத்தை வீழ்த்துவதற்காகவோ  செய்யமுடியும். இதனை தனி நபர்கள் செய்யமாட்டார்கள். வேண்டுமென்றால் அரசு தனிநபர்களை பயன்படுத்தலாம். 

 உங்களது க்ரைம் நாவல்களே சினிமா பார்த்தமாதிரி இருக்கிறது. ’கண்டேன் காதலை, இமைக்கா நொடிகள், காக்கிச் சட்டை, 'காப்பான்' என இதுவரை 25 படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கீங்க. நீங்களே ஏன் சினிமா இயக்கக்கூடாது?

 ஆரம்பத்தில் பாக்யராஜ் சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தது சினிமாவை கற்றுக்கொள்ளத்தான் செய்தேன். இரண்டு படங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்துவிட்டுத்தான் வெளியில் வந்தேன். ஒரு சினிமா இயக்குவதற்காக வாய்ப்பும் வந்தது. ஆனால்,அது தள்ளிப்போனது. நான் பரபரப்பாக எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருந்தேன். அப்போது டெலிவிஷன் இல்லை. மாத நாவல்கள் கொடிக்கட்டிப்பரந்த காலகட்டம். ஒரே நேரத்தில் ஐந்து தொடர்கதை ஆறு தொடர்கதை என்று பிஸியாக எழுதிக்கொண்டிருந்தேன். எனக்கு வந்த சினிமா வாய்ப்பின்போது இரண்டு வருடங்கள் வீணாகிவிட்டது. எழுத்தை ஒதுக்கி வைத்தது தவறோ என்று எச்சரிக்கை மணி அடித்ததால் முழு கவனத்தையும் எழுத்தில் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். அதன்பிறகு தொலைக்காட்சிகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்போதுதான், சினிமா வசனம் எழுத வாய்ப்பு வந்தது. முதல் படம் ’மகாபிரபு’ வெங்கடேஷ் படத்தில் எழுதினேன். அது 100 நாட்கள் ஓடியதால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தன. எல்லாப் பக்கத்திலும் பிஸியாக இருந்ததால் வேறு எந்தப்பக்கமும் செல்ல சிந்திக்கவில்லை. இப்போதே, 27 படங்களுக்கு எழுதிவிட்டேன். அதோடு, பத்திரிகைகளுக்கு எழுதிக்கொண்டு, நானே சொந்தப் பத்திரிகையையும் நடத்திக்கொண்டு இயங்கிக்கொண்டிருப்பதால் ஏன் சினிமாவுக்கு போகணும்? அப்படிப்போனால், இதையெல்லாம் விட்டுவிட்டுத்தான் போகவேண்டும். அப்படி போக எனக்கு மனமில்லை.

 இந்தியிலிருந்து படங்களை ரீமேக் செய்யும்போது, வசனகர்த்தாவாக என்ன சிக்கல்கள் உள்ளன?

பொதுவாக வேறொரு மொழிப் படங்களை தமிழுக்கு பண்ணும்போது சில விஷயங்கள் ஒத்து வராது. அதனால், சிலவற்றை மாற்றவேண்டி இருக்கும். ஏற்கனவே, ’ஜப் வி மெட்’ இந்தி படமான ’கண்டேன் காதலை’ ரீமேக்கிற்கு வசனம் எழுதும்போது இந்தியில் காமெடியே இருக்காது. ஆனால், தமிழில் காமெடி வேண்டும் என்பதற்காக படத்தில் சந்தானம் ட்ராக்கை சேர்த்தேன். அதேபோல, அந்தாதூன் படத்திலும் சில விஷயங்கள் தெளிவாக இல்லாததுபோல் இருந்தது. அதனையும் தெளிவாக்கினேன். இப்படத்திற்கு, முழுக்க வசனங்கள் எழுதிக்கொடுத்துவிட்டேன்.

’சரவணா ஸ்டோர்’ அருள் நடிக்கும் புதிய படம் குறித்து?

அவரை ஒரேயொரு முறைத்தான் பாடல் காட்சியின்போது சந்தித்திருக்கிறேன். பத்து பதினைந்து நிமிடங்கள் பேசினேன். கண்ணியத்தோடு மரியாதையோடு பேசினார். ஆனால், இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி சொல்லும்போது, அவர்மீது மரியாதையை அதிகப்படுத்துவதாகத்தான் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஏன் நம்மால் முடியாது என்று நினைப்பவர்.  மற்ற விளம்பரப் படங்களில் முதலாளிகள் முகம் மட்டும்தான் காட்டினார்கள். ஆனால், இவர் டான்ஸ் ஆடியதோடு டூயட்டும் பாடினார். அதற்கும் ஒரு தன்னம்பிக்கை வேண்டும். அந்த தன்னம்பிக்கையின் அடுத்தக்கட்டம்தான் படத்தில் நடிப்பதும். மேலும், அவரது நிர்வாகத்திறன், அணுகுமுறை, திட்டமிடுதலை பாராட்டக் கேட்டிருக்கிறேன்.

இப்போதெல்லாம் பத்து செக்கண்ட் கதைகள் வர ஆரம்பித்துவிட்டதே. பக்கம் பக்கமாக கதை எழுதுறது இன்னைக்கும் வரவேற்பு இருக்கும்னு நினைக்கிறீர்களா?

 ’வேள்பாரி’ தொடர் நல்ல வரவேற்பை பெற்ற நாவல்தானே? எப்போது எழுதினாலும் எவ்வளவு எழுதினாலும் கண்டெண்ட் முக்கியம். வாசகர்கள் ஆதரித்துக்கொண்டுதான் இருப்பார்கள்

பாஜக ஆட்சியில் கொரோனா சூழலிலும்  எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும்  கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே?

 இது இந்த ஆட்சியில் மட்டுமா என்பது தெரியவில்லை. எமர்ஜென்சியில் கைது செய்யப்பட்டவர்கள் அறிவுஜீவிகள் கிடையாதா? எல்லா ஆட்சிகளிலும் நடந்துள்ளது.

எப்போதும் இளமையாகவே இருக்கிறீர்களே எப்படி ?

மனசு இளமையாக இருந்தால், எல்லாமே இளையாக மாறிப்போகும். இப்போதும் என் நண்பர்களிடம் பேசுபோது எல்லாவித ஜோக்ஸ்களும் அடிப்பேன். இன்னும் 25 வயது இளைஞராகத்தான் மனது நினைக்கிறது. மனது என் கையில்தான் உள்ளது.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com