இளையராஜா என்ற இசைமொட்டு... !

இளையராஜா என்ற இசைமொட்டு... !

இளையராஜா என்ற இசைமொட்டு... !
Published on

காதல், காமம், வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, சோகம், கொதிப்பு, கொண்டாட்டம், போராட்டம், அமைதி என மனதில்தோன்றும் எக்கச்சக்க உணர்வுகளுக்கு பக்கம் பக்கமாய் மெட்டுப்போட்டு, இந்த தமிழ்கூறும் நல்லுலகை இன்னும் தன் கட்டுப்பாட்டிலேயே  வைத்திருக்கிறார் இந்த 76 வயதாகும் இளையராஜா...

அழுத்தம் நிரம்பிக் கிடக்கும் மனதை, மலர்த்திப்போடுவதற்கு இளையராஜா இசை தட்டு என்ற ஒன்று மட்டும் போதுமானதாக இருக்கிறது. என் மச்சானை பாத்தீங்களா-வில் ஆரம்பித்த இந்த கலைஞனின் பயணத்தில் இவர் செல்லாத வழித்தடங்களே இல்லை; இவர் பாட்டை பாடி தன் இணையை மயக்காத மச்சான்களும் இல்லை

கிராமத்தின் கடைகோடியில் இருந்து, நகரத்தின் நடுநாயகம் வரையில் எங்கும், எப்போதும், ஏதோ ஒரு இளையராஜா பாட்டு இசைத்துக்கொண்டேதான் இருக்கிறது.

இந்தி பாடல்கள் பெருக்கெடுத்து கிடந்த இடத்தில், அதை ஓரங்கட்டி தமிழ் பாடல்களை தமிழர் வாயில் முனுமுனுக்க வைத்த இளையராஜவும் ஓர் விதத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான போராளிதான். இந்த இடத்தில் #StopHindiImposition  போட்டுக்கொள்வோமாக !

இளையராஜா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இந்த இளைஞர் வாழ்வு என்னவாக இருந்திருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.

இளைஞர்களும் இளைஞிகளும், இது வாலிப வயசு என பீற்றிக்கொள்ள, இந்த இளையராஜா மழை சாரல் மாதிரி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறார்

எதுக்கு சார் இவர் மெட்டுபோடல..? பொறப்புல இருந்து சாவுற வரைக்கும் எல்லாத்துக்கும் பாட்டு போட்டு வச்சுருக்காரு இந்த மனுஷன் என நேற்று கூட இளையராஜா கான்செர்ட் விளம்பரத்தை பார்த்து, டீ கடையில் நடுத்தர வயதினர் இருவர் பெருமிதம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

டீ கடையோ, டிபன் சென்டரோ, முடி வெட்டும் இடமோ, முள்ளங்கி விற்கும் திடலோ எங்கெங்கும் இளையராஜவின் பாட்டும், அவர் பற்றிய பேச்சும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

புள்ள மாசமா இருக்கால்ல என்ன வாங்கிக் கொடுத்துட்டு வந்தீக... என்ற குரலுக்கு, நம்ம இளையராசா பாட்டு கேசட்டுதான் என அசால்டாக சொல்லி கடந்த தந்தையை சின்ன வயதில் கண்டிருக்கிறேன்.

இன்றும் நிறைமாத கர்பிணியாக இருக்கும் பெண்களிடம், இளையராஜா பாட்டு கேளுங்க புள்ள நல்லபடியாக இருக்கும் என்று சொல்லும் எத்தனை எத்தனைபேரை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

கருவில் இருக்கும் குழந்தையை கூட கனவு காண வைத்துவிடும் வல்லமை, இந்த இளையராஜாவுக்கு மட்டும் வாய்த்திருக்கிறது.

நினைவுகளில் மூழ்கிபோக, இழந்த நினைவுகளை மீட்டெடுக்க, கண்ணீர் சிந்த, காதல் கொள்ள, சிறு புன்னகை பூக்க, கண்கள் திறந்து கனவு காண, மழையை வெயிலை,  ஆகாயத்தை, கடலை, காற்றை, இந்த பூமியை, புல்லை, மரத்தை, மலரை என வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் ரசிக்க, ருசிக்க வைத்து, இந்த மனித படைப்பை மகோத்துவம் ஆக்கியிருக்கிறார் இசைஞானி

வைரைட்டி ரைஸ் மாதிரி இப்போது வரும் பாடல்களுக்கு மத்தியில், இன்னும் சுடச்சுட பொன்னி அரிசி சோறும், முருங்கைக்காய் சாம்பாரும் என நாக்கில் எச்சில் ஊற வைக்கும் பாடல்களை மணக்க மணக்க பரிமாறிக்கொண்டே இருக்கிறார் இந்த இளையராஜா

75 ஆண்டுகள் அல்ல, இன்னும் ஏழாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் ஆனாலும் இளையராஜாவின் இசை மொட்டு மலர்ந்துகொண்டே இருக்கும்... !

ஹாப்பி பர்த் டே  ராஜா சார் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com