முடி உதிர்தல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னை -  சித்த மருத்துவம் சொல்வதென்ன?

முடி உதிர்தல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னை -  சித்த மருத்துவம் சொல்வதென்ன?
முடி உதிர்தல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னை -  சித்த மருத்துவம் சொல்வதென்ன?

முடி உதிர்வு பிரச்னை.... இன்று இளைஞர்கள் மத்தியிலும் சரி, பெண்கள் மத்தியிலும் சரி எல்லாவற்றிற்கும் மேலான தலையாய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சுற்றுச்சூழல் மாற்றம், தவறான உணவு
முறை, தீயப்பழக்க வழக்கங்கள் மூலமாக தங்களது முடியை இழந்தவர்கள் மருத்துவமனைகளின் வாசல்களில் லட்சத்தைக் கொட்டி முடி உதிர்வுக்கான சிகிச்சையை மேற்கொள்கின்றனர். ஆனால்
அவர்களின் முடி கொட்டுதல் பிரச்னை சரியாகிறதா என்றால் பெரும்பான்மையான மக்களிடம் இல்லை என்ற பதிலே ஒலிக்கிறது.

பல நோய்களுக்கு தீர்வு காணும் சித்த மருத்துவத்தில் முடி உதிர்வுக்கு தீர்வு உண்டா என்பது குறித்து
மருத்துவரும் உணவியல் நிபுணருமான மது கார்த்தீஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த
விளக்கங்கள் பின்வருமாறு:


முடி உதிர்தல் வழுக்கை உள்ளிட்டப் பிரச்னைகளுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு இருக்கிறதா?


ஏன் இல்லை. முடி உதிர்தலை சித்த மருத்துவம் வெளிப்புற நோயாக பார்ப்பதில்லை. உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பிரச்னையின் பிரதிபலிப்பாக பார்க்கிறது. இது நகம் மற்றும் தோலிற்கும்
பொருந்தும். ஆகவேதான்  முடி, நகம், தோல் உள்ளிட்டவற்றை பரபரம்பரை டிஎன்ஏ உடன் தொடர்பு படுத்துகிறார்கள்.

முடி உதிர்தலில் மூன்று வகை இருக்கிறது.

1. முடி உடைந்து உதிர்தல்

2. முடி வேரோடு உதிர்தல்

3. வயிறில் கசடு தேங்கி முடி உதிர்தல்.

1. முடி உடைந்து உதிர்தல்

இந்த வகைப்பிரச்னை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளான மலச்சிக்கல், பசியின்மை, வயிறு ஊதுதல் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்பவர்களுக்கு ஏற்படும்.

2. முடி வேரோடு உதிர்தல்

இந்த வகைப் பிரச்னை அதிகமான உடல் சூட்டை எதிர்கொள்பவர்களுக்கு ஏற்படும்.

3. வயிறில் கசடு தேங்கி முடி உதிர்தல்.

பொதுவாக சாப்பிடும் உணவானது வயிற்றில் ஜீரணமாகி மலமாகச் செல்லும். ஆனால் இதில் சிலருக்கு கொழுப்பானது சரியாக வெளியேறாமல், வயிற்றில் கசடாகத் தேங்கும். அந்தக் கசடு மலக்குடல்
மற்றும் பெருங்குடலில் ஒரு வித வறட்சித்தன்மையை உண்டாக்கும். அந்த வறட்சி தலை வரைச் சென்று சேர்ந்து இறுதியில் பொடுகாக மாறும். ஆகவே இங்கு பொடுகும் உள்புறப்பிரச்னைதான்.

இதைத்தாண்டி பரம்பரை வாரியாக முடி உதிர்தல் என்ற ஒன்று இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடையாது.

முடி உதிர்தல் பிரச்னையை சரி செய்ய முதலில் சம்பந்தப்பட்ட நபரின் இரத்த அளவு எவ்வளவு இருக்கிறது என்று கணக்கிட வேண்டும்.

இராண்டாவது தைராய்டு சம்பந்தமான பிரச்னை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஏனெனில் தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படும். 

மன ரீதியாகப் பார்த்தோம் என்றால், முதலில் தூக்கத்தைச் சரி செய்ய வேண்டும். காரணம் தூக்கம் சரியாக இல்லை என்றால் உடல் சூடு அதிகரிக்கும். இதன் மூலம் முடி உதிர்தல் பிரச்னை உருவாகும்.

அடுத்ததாக மனச்சோர்வு - இந்தப் பிரச்னையை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

1. சரியாக சாப்பிடாததால் ஏற்படும் சக்தி குறைபாட்டால் ஏற்படும் மனச்சோர்வு

2. உடலில் உண்டாகும் சக்தியானது, உடலின் ஏதேனும் ஒரு இடத்தில் தேங்கி கொள்வது. இதனால் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து, உடலின் மேல் நோக்கி செல்லும் ரத்தமானது சில இடங்களில்
தேக்கமடையும். இதனால் உடலுக்குத் தேவையான சத்தானது முழுமையாக கிடைக்காது. இதனாலும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படும்.

இந்த மனச் சோர்வு என்பது நமது உடலின் உள்ளுறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை சரியாக செயல்படாத போது உருவாகிறது.

கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு பித்த நீரின் ( ஜீரண சக்திக்கு உதவும் தண்ணீர்) உற்பத்தி அதிகரித்து காணப்படும்.

மண்ணீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு இரத்த உற்பத்தி தடைபடும்.

சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு நீர்ச்சத்தில் மாறுபாடு ஏற்படும்.

ஆகவே முடி உதிர்தல் பிரச்னைக்கு மருத்துவசிகிச்சை எடுக்கும் முன்னர் இந்த மூன்று உறுப்புகளும் சரிவர இயங்குகிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்.

இனி இதற்கு மூன்றுக்குமான தீர்வை பார்க்கலாம்

கல்லீரல் பிரச்னை - இஞ்சி தேன், இஞ்சி துவையல், கருவேப்பிலை துவையல் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம். மாதத்திற்கு இரு முறை கீழாநெல்லியை மோரில் கலந்து காலை வேளைகளில் வெறும்
வயிற்றில் குடிக்கலாம்.

அதே போல மாதத்திற்கு ஒருமுறை குப்பைமேனிச் சாற்றை ( 30 மிலி) வெறும் வயிற்றில் குடிக்கலாம். இந்தச் சாறு வாந்தியின் மூலம் கழிவை வெளியேற்றும்.

மண்ணீரல் பிரச்னை - வேப்பம் பூ, சுண்டைக்காய், அத்திப்பழம், மணத்தக்காளி, அண்ணாசி, மாதுளை, ஆட்டுக்கல்லீரல் மற்றும் மண்ணீரல், பப்பாளிக்காய் சாப்பிடலாம். இறால் தவிர்த்து மற்ற மீன் வகைகளை உணவுகளாக எடுத்துக்கொள்ளலாம்.

சிறுநீரகப் பிரச்னை - நாள் ஒன்றுக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். பீர்க்கங்காய், வெள்ளைப்பூசணி, மோர், ரசம் போன்ற நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை
எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல நெறிஞ்சு முள் தண்ணீரையும் ( காலை வெறும் வயிற்றில், தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்த பின்னர் ) மாதத்திற்கு இருமுறை குடிக்கலாம்.

உப்புச் சத்து மிகுந்த உணவுகளைத் தவிர்ப்பதோடு, கத்தரி, முள்ளங்கி போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

நெய், பொன்னாங்கன்னி கீரை, மணத்தக்காளி கீரை உள்ளிட்டவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவற்றை சரி செய்யாமல், நீங்கள் வெளிப்புறமாக மட்டும் சிகிச்சை அளிக்கும் போது முடி உதிர்தல் பிரச்னை சரியாகாது. அதே போல் முடியில் தடவுவதற்கு தேங்காய் எண்ணெயை விட சிறந்த
எண்ணெய் வேறேதும் கிடையாது. வேறேதும் மூலிகை எண்ணெயை உபயோகிக்கும் முன்னர் மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது கட்டாயமாகும்.

எண்ணெய் வைப்பதை பொறுத்தவரை நிச்சயம் தலையில் எண்ணெய் இருக்க வேண்டும். அதே போல எண்ணெய்யை தடவும் போது முடிக்கு மட்டும் தடவாமல், மண்டை ஓட்டில் உள்ள முடியின்
மூலக்கூறில் தடவ வேண்டும்.

தினமும் குளித்தல் நல்லது. குறைந்தபட்சம் வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். சீயக்காய் உபயோகப்படுத்தி குளிப்பது நல்லது. ஒரு வேளை நீங்கள் அழகு சாதன பொருட்களை
உபயோகப்படுத்துபவர்கள் என்றால் அதனை தண்ணீரில் நன்றாகக் குழைத்து உபயோகிக்க வேண்டும். முடியை காய வைக்க வேறெந்த முறையையும் பயன்படுத்தாமல், துண்டால் துவட்டி தண்ணீரை
எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு மிகவும் இறுக்கமாக முடியை கட்டக் கூடாது. இதுவும் முடிப்பிரச்னை உருவாக்கும். அதே போல் முடிக்கு டை அடிக்கக் கூடாது. இது முடி உதிர்தல் பிரசனையோடு இதர
பலப்பிரச்னைகளையும் உருவாக்கும்.

புகைப்பிடித்தலும் முடி கொட்டுதலை உருவாக்கும்.

கண்டிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஓடுதல் மற்றும் யோகாப் போன்ற பயிற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக முடிப்பிரச்னையைச் சந்திப்பவர்கள், அதை அழகு சார்ந்த பிரச்னையாக பார்க்காமல், அதனை ஆரோக்கியம் சார்ந்த பிரச்னையாகப் பார்க்க வேண்டும். இதுவே அனைத்திற்குமான தீர்வாக இருக்கிறது” என்று முடித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com