கர்நாடகாவிலும் கூவத்தூர் ஃபார்முலாவா? - என்ன செய்யப் போகிறார் கர்நாடக ஆளுநர்

கர்நாடகாவிலும் கூவத்தூர் ஃபார்முலாவா? - என்ன செய்யப் போகிறார் கர்நாடக ஆளுநர்
கர்நாடகாவிலும் கூவத்தூர் ஃபார்முலாவா? - என்ன செய்யப் போகிறார் கர்நாடக ஆளுநர்

கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. கிட்டத்தட்ட வாக்குப் பதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் சொன்னபடியே நிகழ்ந்திருக்கின்றன. அதாவது தொங்கு சட்டசபை அமையும், மதசார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக இருக்கும் என்பதை தான் பெரும்பாலானோர் கணித்திருந்தனர். ஆனால், அந்த கணிப்பில் மிகப்பெரிய மாற்றமாக மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்கும் அளவிற்கு முடிவுகள் வித்திட்டுள்ளது. 

தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு 104, காங்கிரஸ் 78, மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மஜத உடன் கூட்டணியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. சுயேட்சை வேட்பாளர் ஒருவரும், கர்நாடக பிரக்ஞவந்த ஜனதா கட்சி வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர். எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கர்நாடக தேர்தலில் முல்பகல் தொகுதியில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் நாகேஷ், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சி அமைவதற்கு காங்கிரஸ் நிபந்தனையின்றி ஆதரவு அளித்துள்ளது. இதனையடுத்து, பாஜகவும், காங்கிரஸ்-மஜதவும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன. தங்களுக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க ஒரு வாரம் கால அவகாசம் அளிக்க ஆளுநர் ஒப்புக் கொண்டுள்ளதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ஆளுநர் மாளிகை தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

இந்நிலையில், ஆளுநர் முதலில் யாரை ஆட்சி அமைக்க அழைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் ஆளுநருக்கு இரண்டு விதமான வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, பாஜக தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியபடி எஸ்.ஆர்.பொம்மி தீர்ப்பு படி தேர்தலில் அதிக இடங்களில் கைப்பற்றிய பாஜகவை முதலில் ஆட்சி அமைக்க அழைக்கலாம். அவர்களுக்கு கொடுக்கப்படும் கால அவகாசத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால் அடுத்த இடத்தில் உள்ள கட்சியை அழைக்கலாம். 

அப்படியில்லை என்றால், கோவா, மணிப்பூர் தேர்தல்களின் போது நடந்ததைப் போல், கூட்டணியில் அதிக பலம் கொண்ட கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கலாம். காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 இடங்கள் தற்போது வரை உள்ளது. ஆட்சி அமைக்க தற்போது 112 இடங்கள் மட்டும் இருந்தால் போதும். இருப்பினும், எந்த முடிவையும் எடுப்பதற்கு ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நேரத்தில் தான் ஆளுநர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு முடிவு எடுக்க முடியும். இதில் மற்றொரு விஷயம் என்ன வென்றால், யாரை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்பதை முடிவு செய்யவும் ஆளுநர் நேரம் எடுத்துக் கொள்ளலாம். இதுவரை ஆளுநர் எவ்வித அறிவிப்பையும் எடுக்கவில்லை.

ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கும் நிலையில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதேபோல், பாஜகவிடம் இருந்து தங்கள் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி முயற்சிக்கும். அதனால், குஜராத் எம்.எல்.ஏக்களை பெங்களூர் அருகே ரிசாட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தது போல், தற்போதும் நடக்க வாய்ப்புள்ளது. கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை ஆந்திரா, பஞ்சாப் மாநில ரெசார்ட்டுகளில் தங்க வைக்க திட்டம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஒரு புறம் டெல்லியில் பாஜக மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. கர்நாடக பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், பெங்களூரு தனியார் ஹோட்டலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் தேவகவுடா ஆலோசனை நடத்தியுள்ளார். குமாரசாமி, சித்தராமையா, குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இதில் பங்கேற்றனர். 

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் கர்நாடக அரசியல் மிகவும் பரபரப்பாகவே காணப்படுகிறது. இனி ஒவ்வொரு மணி நேரமும் கர்நாடக அரசியலில் முக்கியமானதாக இருக்கும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com