இந்தியாவில் முளைக்கத்தொடங்கிய 'துப்பாக்கிக் கலாசாரம்' எனும் விஷச்செடி!
அமெரிக்காவில் துப்பாக்கி என்பது கடைகளில் வாங்கும் சாதாரண பொருளாக இருக்கிறது. சூப்பர் மார்க்கெட்களில் பணத்தைக் கொடுத்தால் துப்பாக்கியை வாங்கிக்கொண்டு வீடு வந்துவிடலாம். இப்படி சாதாரணமாக துப்பாக்கி கிடைப்பதால் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் துப்பாக்கியை புத்தகப்பைக்குள் வைத்துக்கொண்டு போகிறார்கள். பள்ளியில் ஏற்படும் சின்னச்சின்ன பிரச்னைக்குக் கூட பள்ளி வளாகங்களில் துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது.
அது மட்டுமில்ல, அதீத கோபங்களை துப்பாக்கி வழியாக காட்டிவிடும் குடும்பத்தினரும் உண்டு. இந்த துப்பாக்கிக் கலாசாரத்தால் அமெரிக்கா சற்று திக்குமுக்காடியே நிற்கிறது. குறிப்பாக 2019ம் ஆண்டு வால்மார்ட் வணிக வளாகத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வால்மார்ட் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்கள் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சராமாரியாகச் சுட்டனர். அப்போது, பணியில் இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். வணிக வளாக தாக்குதல் நடைபெற்று ஒரே நாளுக்குள் மதுபான பாரிலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவங்களை அடுத்து அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அபாயகரமான இடத்தை நோக்கிச் செல்வதாக பலரும் கருத்து தெரிவித்தனர். துப்பாக்கி விற்பனையை கடுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டுமெனவும் குரல் எழுப்பினர். புகழ்பெற்ற வால்மார்ட் நிறுவனம் துப்பாக்கி விற்பதை நிறுத்த வேண்டுமென்றும் அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் விற்பனையில் மாற்றங்களை கொண்டு வந்த வால்மார்ட், செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி விற்பனையை நிறுத்தியது. 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு துப்பாக்கி விற்பனை இல்லை எனவும் வால்மார்ட் அறிவித்தது. ஆனாலும் துப்பாக்கி விற்பனையை முழுவதுமாக நிறுத்தவேண்டுமென மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ஒரு கலாசாரத்தை அந்த நாடுகள் அபாயமானது என உணரத் தொடங்கியுள்ளன. துப்பாக்கிக் கலாசாரம் ஆபத்து என பொங்குகின்றன. ஆனால் இந்தியாவில் நடப்பது என்ன?
இங்கு கதை தலைகீழாக போய்க்கொண்டு இருக்கிறது. இப்போதெல்லாம் போராட்டங்கள் என்றால் கையில் துப்பாக்கியுடன் இளைஞர்கள் நிற்கிறார்கள். கட்டையைத் தூக்குவதே வன்முறை, அதனை நிறுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கப்படும் நாட்டில் தற்போது கட்டைகளுக்கு பதிலாக துப்பாக்கிகள் முளைக்கத் தொடங்கி இருக்கின்றன.
சட்டவிரோதமாக ரவுடிகள் பயன்படுத்துவதாக கேள்விப்பட்ட துப்பாக்கிகள் இன்று கல்லூரி மாணவன் கையில் இருப்பதை என்னவென்று சொல்வது என நொந்து போகின்றனர் சமூக ஆர்வலர்கள். எந்த வித பயமும் இன்றி துப்பாக்கியை நீட்டிக்கொண்டு போராட்டத்தில் நிற்கும் நபர், போலீசாரின் முகத்திற்கு முன்பு துப்பாக்கியை சர்வசாதாரணமாக காட்டும் நபர் என துப்பாக்கி என்பது கடந்துபோகும் காட்சியாகி வருகிறது இந்தியாவில்.
குறிப்பாக வட இந்தியாவில் துப்பாக்கி எளிதாக கிடைத்துவிடும் நிலைக்கு வந்து விட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்படுவதும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதுமாக துப்பாக்கிகள் அதிக அளவில் புழங்குகின்றன என கூறப்படுகிறது. வியாபாரிகள், டீலர்கள் என துப்பாக்கிகள் கைமாற பல நெட்வொர்க் இயங்குவதாகவும் சொல்கிறார்கள்.
துப்பாக்கிக் கலாசாரத்தை இந்தியாவில் வளரவிடக்கூடாது என்றும், இது மிகப்பெரிய அபாயமாக உருவெடுத்துவிடும் என்பதே பலரின் வேண்டுகோளாக இருக்கிறது. ஒருகாலத்தில் அரிய பொருளாக பார்க்கப்பட்ட துப்பாக்கி இன்று போராட்டக்கூட்டத்தில் நீட்டப்படுகிறது என்றால் இந்தியா அபாயத்தை நோக்கியே செல்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. இனிமேலும் காலம் தாழ்த்தினால் இந்த துப்பாக்கி மாணவர்கள், பொதுமக்கள் என பலரது கைகளிலும் தவழ்ந்து வெடித்தாலும் வெடிக்கத் துவங்கும். விஷச்செடிகளை முளைக்கும்போது பிடிங்கி வீச வேண்டும். வளர்ந்து நிமிர்ந்து மரமாகிவிட்டால் அதனை அகற்றுவது கடினம் என்பது அனைவரும் அறிந்ததே.