உலக பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலித்த ‘யூசுப் மலாலா’

உலக பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலித்த ‘யூசுப் மலாலா’
உலக பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலித்த ‘யூசுப் மலாலா’

கல்வியை அடிப்படை உரிமையாக கொண்டுள்ள நாடுகளில் கூட பெண்கள் கல்வி கற்பதற்கும் முன்னேறுவதற்கும் பல தடைகளை தாண்ட வேண்டியுள்ளது. இந்நிலையில் மதவெறியும், தீவிரவாத அச்சுறுத்தலும், பிற்போக்கு சித்தாந்தங்களும், நிறைந்த நாடுகளில் பெண்கள் கல்வி பெறுவது என்பது எத்தனை பெரிய சவாலாக இருக்கும் என யூகியுங்கள். அப்படியொரு அடிப்படைவாதிகளின் நிலத்திலிருந்து வெடித்து மலர்ந்த ’சோளப் பூ’ தான் யூசுப் மலாலா. 

பாகிஸ்தானின் வடமேற்கில் இருக்கும் நிலமே ’ஸ்வாத் பள்ளத்தாக்கு’. ஆப்கனிஸ்தான் எல்லையிலுள்ள இது 2007-ஆம் ஆண்டு முதல்  தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. இவர்களை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் எடுக்கும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

அங்கு பெண்களின் தார்மீக உரிமைகள் பறிக்கப்பட்டது. தனது கணவன் மற்றும் சகோதரர்கள் தவிர வேறு எவருடனும் பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. பள்ளிக் கூடம் செல்ல பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டதோடு ஒரே நாளில் 400 பெண்கள் பள்ளிக் கூடங்கள் இழுத்து மூடப்பட்டன. இவை அனைத்தையும் செய்தது தலிபான் தீவிரவாத அமைப்பு.

அப்போது 12 வயதேயான மலாலா எனும் பள்ளிச்சிறுமி பிபிசி உருது இணைய தள வலைப்பூவில். தலிபான்களின் அராஜகம் பற்றி எழுதத்துவங்கினாள். ’குல் மக்காய்’ அதாவது சோளப்பூ என்ற புனைப்பெயரில் 2009’ல் அவள் எழுதத்துவங்கிய போது தோளில் தட்டி உற்சாகப் படுத்தியவர் மலாலாவின் தந்தை ’யூசுப்த்தீன் யூசுப்சாய்’. அவரும் தலிபான்களை எதிர்த்து பெண்களுக்கான பள்ளியொன்றை நடத்திய போராளி.

“பலர் பேயை பார்த்து பயப்படுவார்கள். சிலர் சிலந்திப் பூச்சியை பார்த்து அஞ்சுவது உண்டு. ஆனால் நாங்களோ மனிதர்களைப் பார்த்து பயந்தோம். ஏனெனில் அவர்கள் காட்டு மிராண்டிகள்” என தலிபான்களைப் பற்றி மலாலா தன் வலைப்பூவில் பதிவு செய்தார். அதைப்படித்த உலகினருக்கு பெரும் அதிர்ச்சி.

’குல் மக்காய்’என்ற புனைப்பெயரில் எழுதிய மலாலாவின் எழுத்துகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. பிறகு தன் சொந்த பெயரான மலாலா என்ற பெயரில் எழுதத்துவங்கினார்.

இத்தனைக்கு இடையிலும் அவர் பள்ளி செல்வதை நிறுத்தவில்லை, தன்னோடு பள்ளியில் படித்த 27 மாணவிகளில் பலரும் தலிபான்களுக்கு பயந்து படிப்பை கைவிட்டாலும். மலாலாவும் அவரது தோழிகள் 11 பேரும் தொடர்ந்து பள்ளி செல்வதை கைவிடுவதாக இல்லை. ஆசிட் வீச்சு அச்சுறுத்தல்களையும் கொலை மிரட்டல்களையும் கூட பொருட்படுத்தாமல் புத்தகங்களை பர்தாவுக்குள் மறைத்துக் கொண்டு பள்ளி சென்றார் மலாலா. அவரது இலக்கு ஒன்றே ஒன்று தான் கல்வி. கல்வி மட்டுமே…!

அந்த சூழ்நிலையில் தான், நடந்தது அந்த துயரம். அக்டோபர் 09, 2012 அன்று வழக்கம் போல பள்ளி முடிந்தது. மலாலாவும் சக மாணவிகள் சிலரும் வீட்டிற்குச் செல்லும் பேருந்தில் பயணித்தனர். அந்தப் பேருந்து வழியில் ஒரு இடத்தில் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டது. பேருந்தின் உள்ளே ஏறிய தலிபான் தீவிரவாதி ஒருவன் மலாலாவை சரமாரியாக சுட்டான். கழுத்திலும் தலையிலும் குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த மலாலா ’ராவல்பிண்டி’யிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் பாகிஸ்தான் அரசு இங்கிலாந்திலுள்ள ’பர்மிங்ஹாமின் எலிசபத்’ மருத்துவமனைக்கு மலாலாவை அனுப்பியது.

பாகிஸ்தான் அரசு மாலாலாவை காப்பாற்ற துடித்ததன் காரணம், இவ்வளவு சிறிய வயதிலும் தலிபான் தீவிரவாதிகளின் முன் மலாலா காட்டிய துணிச்சலும் பாகிஸ்தானின் அமைதிக்காகவும் பெண்களின் உரிமைக்காகவும் தனது 11 வயது முதலே அவர் குரல் கொடுத்து வந்ததும் தான்.

இங்கிலாந்தில் கொடுக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பிறகு பீனிக்ஸ் பறவையாக எழுந்து பறந்தார் ’குல் மக்காய்’ மலாலா. தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அவரால் பாகிஸ்தான் திரும்ப முடியவில்லை. எனினும் சொந்த மண்ணின் நினைவுகளைச் சுமந்த படியே இங்கிலாந்தில் தனது படிப்பை தொடர்ந்தார்.

ஸ்வாத்தின் பெண் குழந்தைகள் படிப்புக்காக ‘மலாலா எஜூகேஷனல் ஃபவுண்டேசன்’ என்ற அமைப்பத் துவங்கி சமூக சேவை செய்தார்.

மலாலாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2018’ல் ’குல்  மக்காய்’ என்ற சினிமா வெளியானது. உருது மற்றும் இந்தி மொழியில் வெளியான இந்த சினிமாவை இயக்கியவர் ’அம்ஜத் கான்’

பாகிஸ்தானின் மிக உயர்ந்த பொது மக்கள் விருதான ‘சிதாரே-எ-சுஜத்’விருதைப் பெற்றார் மலாலா. சமூக சேவை நிறுவனங்கள் பல்வேறு விருதுகளை வழங்கி மலாலாவை கவுரவித்தது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் “நம் நாட்டின் உண்மை முகம் மலாலா. அவர் பாகிஸ்தானின் அமைதி மற்றும் அன்பின் தூதுவர்” என புகழ்ந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக 2014-ஆம் ஆண்டு மாலாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. இதன் மூலம் மிகவும் சிறுவயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. மேலும் நோபல் பரிசு பெறும் முதல் பாகிஸ்தானியரும் இவர் தான். நோபல் பரிசு பெற்ற மேடையில் அவர் ஆற்றிய உரை சுவாரஸ்யமானது, உலக அமைதி மற்றும் பெண்கல்வி குறித்து அப்போது நிறைய பேசினார். மேலும் வேடிக்கையாக ‘உலக அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு கிடைத்திருக்கிறது, ஆனால் என் உடன் பிறந்த சகோதரர்கள் போடும் சண்டையை என்னால் ஒரு நாளும் சமாதானம் செய்ய முடியவில்லை.’ என்றார்.

கற்கை நன்றே கற்கை நன்றே, தோட்டாக்கள் அச்சுறுத்தும் போதும் கற்கை நன்றே…! என உலக பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கிறார் மலாலா.


வீடியோ :

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com