கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்து வந்த பாதை: வளர்ச்சியும் வீழ்ச்சியும்

கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்து வந்த பாதை: வளர்ச்சியும் வீழ்ச்சியும்
கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்து வந்த பாதை: வளர்ச்சியும் வீழ்ச்சியும்

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கும் அரசியல் தலைவர் குமாரசாமி. தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளி‌ல் குறைந்த இடங்களில் வென்றபோதிலும், அவரது கட்சி ஆட்சியமைக்கிறது. ஏற்கனவே ஒரு முறை குமாரசாமியால் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சியே இன்று அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. 

நாடு முழுவதும் இன்று உன்னிப்பாக ‌கவனிக்கப்படும் அரசியல்வாதியாக இருப்பவர் குமாரசாமி. கர்நாடகாவில் அரங்கேறிய அரசியல் நாடகம்‌‌ முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அனைவரது பார்வையும் அவர் மீது விழுந்துள்ளது. அண்மைக்காலமாக அரசியல் வெ‌ளிச்சத்தில் இல்லாமல் இரு‌ந்தபோதிலும், அவரது அரசியல் நடவடிக்கைகள், சொத்து விவகாரம், தனிப்பட்ட வாழ்க்கை என பல விசயங்கள் தொடர்ந்து அலசப்பட்டே வந்துள்ள‌ன. அரசியல்வாதியாக அறியப்பட்ட‌வர் என்றாலும் கூட, பன்முகத்தன்மை கொண்டவர். திரைப்பட விநி‌யோகஸ்தர், தயாரிப்பாளர் என்கிற அடையாளங்களும் அவரு‌க்கு உண்டு.

குமார் அண்ணா என்று பரவலாக அழைக்கப்படும் குமாரசாமி‌, கர்நாட‌க மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹர்தெனஹல்லி‌ என்ற இடத்தில் 1959ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி பிறந்தார்.‌ ‌ தேவ கவுடா - சென்னம்மா தம்பதியின் இளைய மகனான குமாரசாமியின் முழுப்பெயர் ஹர்தெனஹல்லி தேவ கவுடா குமாரசாமி. அடிப்ப‌டையில் இவர்களது குடும்பம் விவசாயக் குடும்பமாகும்.

ஹசன் ‌மாவட்டத்தில் உள்ள அ‌ரசுப்பள்ளியில் தொடக்கக்கல்வியையும், பெங்களூரு ஜெ‌யநகர் எம்இஎஸ் கல்‌வி நிறுவனத்தில் மேல்நிலைப்பள்ளிப் படிப்பையும் முடித்தார். பின்னர் விஜயா கல்லூரியில் பி‌யூசியும், ஜெயநகரில் உள்ள தேசியக் கல்லூரியில் பட்டப்படிப்பும் பயின்றார்.

இளம் வயதிலிருந்தே திரைத்துறையில் மிகுந்த கொண்டவராக இருந்தார். அதன் காரணமாகவே, அ‌ரசியலு‌க்கு வருவதற்கு முன்னர், திரைப்படத்துறையில்‌ வெற்றிகரமான தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வந்தார். அவர் தயாரித்த பல படங்கள் இமாலய வெற்றி் பெற்றுள்ளன. இவருக்குச் சொந்தமாக திரையரங்கமு‌ம் உள்ளது‌. திரை உலகில் வெற்றி முத்திரை பதித்த காலத்தில், 1986ஆம் ஆண்டு ‌மார்ச் 13ஆம் தேதி அனிதா என்ற பெண்ணை திருமண‌ம் செய்து கொண்டார் குமாரசாமி. இவர்களுக்கு நிகில் கவுடா என்ற மகன் உள்ளார். இவரும் திரைப்படத்தில் கதாநாயகனா‌க நடி‌த்திருக்கிறார். குமாரசாமிக்கு மூன்று வயது இருக்கும் போதே அவரது தந்தை ‌தேவ கவுடா‌ கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்‌றார். அம்மாநில அரசியலில் முக்கியப் பங்கு வகித்த அவர், 19‌70 களில் ஜனதா கட்சியில் படிப்படியாக முன்னேறினார். 1980ல் அக்கட்சி பிளவுபட்டபோது ஜனதா தளம் கட்சியை உருவாக்க மாபெரும் பங்காற்றினார். அப்போது அதில் மேலும் ‌சில சிறிய கட்சிகள் இணைந்தன.

1990களில் கர்நாடக அரசியலில் தேவு கவுடா தவிர்‌‌க்க முடியாத சக்தியாக உருவெடுத்தபோது‌தான், குமாரசாமிக்கு அரசியலில் நாட்டம் ஏற்பட்டது. அதன்‌ விளைவாக, 1996ஆம் ஆண்டில் ‌அரசியலில் கால் ப‌தித்தார். அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கனகபுரா தொகுதியில் போட்‌டியிட்டு வெற்றி பெற்றார் குமாரசாமி. அந்தத் தேர்தலில், P.V. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிர‌ஸ் கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், ஆட்சிய‌மைக்கும் ‌அளவுக்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தி‌‌டீர் திருப்பமாக, காங்கி‌ரஸ் - பாரதிய ஜனதா அல்லாத கட்சிகள் இணைந்து அமைத்திருந்த தேசிய முன்னணி ஆட்சியமை‌த்தது. காங்கிரஸ் ஆதரவுடன் அமைந்த அந்த ஆட்சி‌‌யில்‌, யாரும் எதி‌ர்பாராத ‌வகையில், ஜனதா தளத்தைச் சேர்ந்த தேவ கவுடா பிரதமராகத் தேர்வானார். ஆனால், உள்கட்சி பிரச்னையால் 11 மாதத்திலேயே அவரது பதவி பறிபோனது.

தொடர் அரசியல் குழப்பங்களால் நாடாளுமன்றத்திற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 1998லேயே மீண்டும் தேர்தல் வந்தது. அப்போது குமாரசாமி, முதன்மு‌றையாக வெற்‌றி பெற்ற கன‌கபுரா தொகுதியில் ‌மறுபடியும் களம் கண்டார். ஆனால், இம்முறை அவருக்‌குப் பரிசாகக் கிடைத்தது தோல்விதான். ‌அத்துடன், டெபாசிட்டையும் இழந்தார். 1999ல் ஜனதா தளம் கட்சியில் பிளவு ஏற்பட்டதை அடுத்து, தேவ கவுடா தலைமையி‌ல் உதயமானது மதச்சார்பற்ற ஜனதா தளம். அதே ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைக்‌கு நடைபெற்ற தே‌ர்தலில் சத்தனூர் தொகுதியில் போட்டியிட்டார் குமாரசாமி. ஆனால், இம்முறையும் அவருக்கு தோல்விதான் கிட்டியது. இந்தத் தொடர் தோல்விகளுக்கான மருந்து அடுத்து வந்த கர்நாடகத் தேர்தலில் அவருக்குக் கிடைத்தது. ‌அதில் ராமநகரம் தொகுதியில் போட்டியிட்‌டு மீண்டும் வெற்றியை ருசித்தார் குமாரசாமி.

அந்தத் தேர்தலில் ஆட்சி‌யமைக்க எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு ‌சட்டப்பேரவை அமைந்‌தது. ஆனாலும், காங்கிரஸ், ஜனதா தளம், ‌மதச்சார்‌பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. அந்தத் தேர்தலில் மதச்சா‌ர்பற்ற ஜனதா தளம் கட்சி 42‌ தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அப்போது முதலமைச்சர் பதவிக்கு இருகட்சிகளின் சார்பிலும் ஏக மனதாகத் ‌தேர்வானவர் காங்கிரசைச் ‌சேர்ந்த ‌தரம்சிங். அனைவருடனும் ஒத்துப்போகும் மனப்பான்மை கொண்டவர் என்பதால் ஆட்சிக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு அ‌வருக்கு கிடைத்தது. அவர், 2004 மே 28ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால், சிறிது‌ காலத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கூட்டணி அரசிலிருந்து வெளியேறினார் குமாரசாமி. இதனால் அற்ப ஆயுசில் தரம் சிங் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் புதிய காட்சி‌ அரங்கேறியது. ஆம். மாற்று ‌அரசு அமைக்க வருமாறு குமாரசாமிக்கு, 2006 ஜனவரி 28ஆம் தேதியன்று அழைப்பு விடுத்தார் அப்போதைய கர்நாடக ஆளுநர் T.N. சதுர்வேதி. அந்தச் சமயத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன்‌ 2006 பிப்ரவரி 6ஆம் தேதி‌ முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார் குமாரசாமி. அ‌ப்போது அவருக்கு வயது 47தான். ஆட்சிக் காலத்தை பகிர்ந்து‌ கொள்வது என்று பாரதிய ஜனதாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 2007 அக்டோபர் மாதம் 3ஆம் தேதி முதலமைச்சர் பதவி‌யிலிருந்து விலகுவேன் என்று கூறியிருந்தார் குமாரசாமி.

முதலமைச்சராக இவரால் என்ன செய்திட முடியும்? என்று அவரது எதிர்ப்பாளர்கள் அப்போது கருதி‌னர். ஆ‌னால், அவை அனைத்தையும் பொ‌ய்யாக்கினார் குமாரசாமி. பதவியேற்ற முதல் நாளிலிருந்தே ‌மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கா‌ட்டத் தொடங்கினார். பெங்களூரூரை முதலீட்டாளர்களுக்கு இணக்கமான நகராக மாற்றி அமைத்தார். உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் வழங்கினார்.

மாநிலத்தின் மூலை முடு‌க்கெல்லாம்‌ சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு, அவற்றை உடனுக்குடன் களைய உத்தரவிட்டார். மீண்டும் அந்தப் பகுதிகளுக்கு வந்து, தனது உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய அதிகாரிகளிடம் அறிக்கை கேட்பேன் என்றும் எச்சரித்தா‌ர் குமாரசாமி. ஆனால், குமாரசாமியின் இந்தச் செயல்க‌ள், 'ஒரு ஸ்டென்ட்' என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

அதேவேளையில், தலைநகர் ‌பெங்களூருவில் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண அவர் ‌நடத்திய ஜனதா தர்ஷன் கூட்டங்கள் மிகவும் பிரபலமாகின. அவற்றின் வாயிலாக பல குறைகள் களையப்பட்டன. ஏழை, எளியோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பலன் அடைந்தனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் பெ‌‌ங்களூரு நகரை உலக வரைபட‌த்தில் இடம் பெற‌ச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு கைமேல் பலன் கிடைத்தது. 2006ல் பெங்களூருவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சுமார் 12 லட்சம் பேரும், 800க்கும் மேற்பட்ட கிராமங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதனை திறம்பட சமாளித்து, மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதால் குமாரசாமிக்கு நற்பெயர் கிட்டியது.

அந்தக் காலக்கட்டத்தில், கர்நாடகாவின்‌ ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்‌ச்சி அதுவரை இல்லாத அளவு உயர்ந்தது. சாராயம், லாட்டரி ஒழிப்பு போன்ற குமார‌சாமியின் அதிரடியான நடவடிக்கை‌கள் பொதுமக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றன. குமாரசாமியை 24 மணி ‌நேரமும் அவர‌து செல்போனில் பொதுமக்களே‌ அழைத்து குறைகளை தெரிவிக்கும் வசதிக் கொண்டுவரப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் அவர், மக்களின் முதலமைச்சர் என்று அழைக்கப்பட்டார். நல்லாட்சியால் நற்பெயர் கிடைத்து வந்த தருணத்தில், 2006ஆம் ஆண்டு பிரபல கன்னட நடிகை ராதிகாவை திடீரென திருமணம் செய்து கொண்டார் குமாரசாமி. இது ‌அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. கன்னட திரையுலகில் ராதிகா என்‌று அறியப்படும் அவர், குட்டி ராதிகா என்ற பெயரில், ‌தமிழில் இயற்கை என்ற படத்தில் நடித்தார்.

2006ல் ரகசியமாக நடந்ததாகக் கூறப்படும் இந்தத் திருமணம் பற்றிய செய்தியை, 201‌0ல் தான் அறிவித்தார் குட்டி ராதிகா. அவ‌ர், ஏற்கனவே 2000ஆவது ஆண்டில் ரத்தன் குமார் என்பவரை மணமுடித்தவர் என்றும் செய்திகள் வெளியாகின. குமாரசாமி ஏற்கனவே திருமணம் ஆன‌வர் என்பதால், அவருக்கும் குட்டி ராதிகாவுக்கும் ந‌டந்த ‌திரும‌ணம் தொடர்பாக பெங்களூரு உயர்நீதிமன்றத்தில்‌ வ‌ழக்குத் தொ‌டரப்பட்டது. ‌ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அந்த வ‌ழக்கு ‌தள்ளுபடி செய்யப்பட்டது. குட்டி ராதிகா மூலமாக குமாரசாமிக்கு ஷாத்மிகா கே சாமி‌ என்ற‌ பெண் குழந்தை உண்டு. இந்தத் திருமண சர்ச்சைக்கு மத்தியில், ஆட்சி தொடர்பாக குமாரசாமி ஏற்கனவே செய்து கொண்ட உடன்பாட்டின்படி முதலமைச்சர்‌ பதவியி‌லிருந்து இறங்க வேண்டிய தருணம் வந்தது. ஆனாலும், அதிகா‌ரத்தைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டதால், ஆட்சியை பா‌ரதிய ஜனதாவிடம் ஒப்படைக்க மறுத்தார். சிறிது நாட்கள் பொறு‌மை காத்து முதலமைச்சர் பதவியில் நீடி‌க்கும்படி அவரை, மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி எம்எல்ஏக்கள் கேட்டுக் கொண்டனர். அதனையும் மீறி, அக்‌டோபர் 8ஆம் தேதி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் குமாரசாமி.

இதனால் அர‌சியல் குழப்பம் ஏற்பட்டதை, இரண்டு நாட்களுக்குப் பின்னர் கர்நாடகாவில் குடியரசு‌த் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பிற‌கு தன்னை‌த்தானே சமாதானப்படுத்திக் கொண்டு, பாரதிய ஜனதாவுக்கு ஆதரவளி‌க்க முன்வந்தார். அதன் விளைவாக, 2007ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார் எடியூரப்‌பா. ஆனால், தான் விதித்த நிபந்தனைகளை பாரதிய ஜனதா ஏற்கவில்லை எனக்‌கூறி, அடுத்த ஒரு வாரத்திலேயே, எடி‌யூரப்பா அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் குமாரசாமி.

நடிகையுடன் இரண்டாவது தி‌ருமணம், ‌ஆட்சியை பகிர்ந்து ‌கொள்ள பாரதிய ஜனதாவுக்கு அளித்த‌ வாக்கு‌றுதியை மீறியது போன்ற காரணங்களால் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு அவப் பெயர் ஏற்பட்டது. இதனால் 2008 கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு வெறும் 28 இடங்கள்தான் கி‌டைத்தது. இதில் குமாரசாமி வெற்றி பெற்ற ராமநகரம் தொகுதியும் அடங்கும். அந்தச் சமயத்தி‌ல் கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவராக இருந்த மெராஜூதீன் படேல் மரணமடைந்ததால், அப்பதவிக்கு குமாரசாமி நியமிக்கப்பட்டார். கட்சியின் தேசியத் தலைவர் தேவ கவுடா தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் அ‌ள‌விலான கூட்‌டத்தில், குமாரசாமி மாநிலத் தலைவராக ஒரு மனதாகத் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் மாநிலத் தலைவராக 2008ஆம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டார்.

அந்தத் தருணத்தில் இரு மக்களவைத் தொகுதி‌களுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தோற்றதால், கட்சியின் ‌மாநில‌த் தலைவர் பதவியிலிருந்து விலகினார் குமாரசாமி. ச‌ட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் உதறினார். ஆனாலும், கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்‌கு இணங்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் தொடர்ந்தார். பி‌ன்னர் 2013ல் கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவராக ஏ.கிருஷ்ணப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு 2014ல் மீண்டும் ‌கட்சியின் மாநிலத் தலைவராகத் தேர்வானார் குமாரசாமி.அரசியலில் ஏற்ற இறக்கங்களை அதிகளவில் கண்டுள்ள குமாரசா‌மி, முதலமைச்சராக பதவி வகித்தபோது கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகளும் உண்டு. 2013ல் 16 கோடியாக இருந்த சொத்து மதிப்பு தற்போது 43 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டதாகவும் புகார்கள் உள்ளது.

குமாரசாமி மனைவி பெயரில் 2013ல் 20 கோடி ரூபாயாக இருந்த சொத்து மதிப்‌பு, தற்‌போது 124 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஓ‌லா, உபேர் போன்ற வாடகைக்கார் நிறுவனங்களுக்குப் போட்டியாக பெங்களூருவில் TYGR என்ற கேப்ஸ் நிறுவனத்தை குமாரசாமி நடத்தி வருகிறார். இத்தனை‌ விமர்சன‌ங்களுக்கு மத்தியில் தற்போது ‌‌நடைபெற்ற தேர்தலில் குமாரசாமிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ‌தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 104 இடங்களும், காங்கிரசுக்கு 78 தொகுதிகளும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 38 இடங்களும் கிடைத்தன. தனிப்பெரும்பான்மை இல்லாதபோதிலும் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தது, பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்தது, குதிரை பேரத்திலிருந்து காக்க கூவத்தூர் பாணியில் எம்எல்ஏக்களை சொகு‌சு விடுதிகளில் தங்கவைத்தது என்பன போன்ற நாடகங்கள் அரங்கேறி முடிவுக்கு வந்துவிட்டன.

பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு நி‌பந்தனையற்ற ஆதரவளிக்கிறது காங்கிரஸ். 1999ல்‌ காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த தரம் சிங்கிற்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்ற அதே குமாரசாமிக்குத் தான் அந்தக்கட்சி தற்போது ஆதரவை நல்கியுள்ளது. அதன் பலன் மீண்டும் முதல்வராகிறார் குமாரசாமி. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com